வழக்குகளுக்கு மேல் வழக்குகளால் வாகன ஆய்வாளர்கள் நியமனம் தாமதம்
மதுரை : தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 10 ஆண்டுகளாக வாகன ஆய்வாளர் பணியிடங்கள் காலியிடங்களாகவே உள்ளதால் பணிகள் பாதிக்கின்றன.
கடந்த 2012ல் அறிவிப்பு வெளியிட்டு 17 பேரை நியமனம் செய்தனர். அதன்பின் 2018 ல் 110 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. கனரக ஓட்டுனர் உரிமம், ஓராண்டு ஒர்க் ஷாப் அனுபவம், ஆறுமாத கனரக வாகன அனுபவம் உள்ளவர்களே தகுதியுள்ளவர் என்பதால், 2500 விண்ணப்பங்களைப் பெற்று 1350 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பினர். 2018 ஜூனில் தேர்வு முடிந்தது.
இதையடுத்து தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ்களை வாகன ஆய்வாளர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், இணைபோக்குவரத்து கமிஷனர் மூலம் என பலமுறை சரிபார்த்தனர். 2019 ஜூலையில் 33 பேர் தகுதியுள்ளவர்கள் அறிவிக்கப்பட்டு ஆக.5ல் நேர்முகத் தேர்வு நடந்தது. அதேசமயம் தேர்வு செய்யப்படாதோரில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் நியமனம் தாமதமானது.
இதேபோல பலரும் அடுத்தடுத்து வழக்குகள் தொடர்ந்த நிலையில் 2019 நவ.,ல் 33 பேருக்கு பணிநியமன உத்தரவு வந்தது. அவர்கள் போலீஸ் தடையில்லா சான்று பெறுவதில் தாமதமானது. நீதிமன்ற விசாரணை காரணமாக அவர்கள் பணியில் சேருவது கானல் நீராகவே இருந்தது. இவர்கள் நிலை ஒருபுறமிருக்க, இவர்களுடன் தேர்வு எழுதியவர்களில் 226 பேரை தகுதி உள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பணி நியமனம் தாமதமாகி கொண்டே இருக்கிறது.
வாகன ஆய்வாளர்கள் கிரேட் 2 நிலையில் நியமிக்கப்படுகின்றனர். இதில் 220க்கும் மேற்பட்ட பணியிடங்களில் 10 பேர்தான் உள்ளார்கள். இதேபோல கிரேட் 1 நிலையிலும் குறைவாகவே உள்ளனர். இவர்கள் பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய நியமனம் இல்லாததால் வாகன ஆய்வு, கண்காணிப்பு, பதிவு செய்வது, உரிமம் வழங்குவது போன்ற பணிகள் பாதிக்கின்றன. நெடுஞ்சாலைகளில் வாகனங்களை கண்காணிக்கும் பறக்கும்படைக்கு ஆட்களே இல்லை. இதனால் ஆர்.டி.ஓ., அளவிலான அதிகாரி மட்டுமே இருந்து பணியாற்றும் நிலை பல மாவட்டங்களில் உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!