dinamalar telegram
Advertisement

நூற்பாலைகளில் நூல் பதுக்கல் இருக்கா? ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தரவு

கோவை:நுாற்பாலைகளில் நுால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்து, இருப்பை சந்தைக்கு கொண்டு வர, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.பருத்தி பற்றாக்குறை மற்றும் அபரிமிதமாக நுால் விலை உயர்வு காரணமாக, ஜவுளித்துறை தடுமாற்றம் அடைந்து வருகிறது. 42 லட்சம் பேல் பருத்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மற்றும் நுால் சந்தைக்கு எடுத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தியிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:டில்லி சென்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து, பருத்தி இறக்குமதிக்கான, 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பஞ்சு மீதான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி நீக்கப்பட்டுள்ளது. ஜவுளித்தொழில் தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு காண பிரத்யேகமாக கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பருத்தி கழகம் போல், தமிழக பருத்தி கழகம் உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

பருத்தி விளைச்சலை அதிகரிக்க, வேளாண் துறைக்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, மஹாராஷ்டிராவில் தான் பருத்தி பதுக்கப்பட்டுள்ளது; தமிழகத்தில் இல்லை. நுால் பதுக்கப்பட்டுள்ளதா என கண்டறியவும், நுாற்பாலைகளில் இருப்பு இருந்தால் சந்தைக்கு கொண்டு வரவும், ஜவுளித்துறை கமிஷனர் மூலமாக கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள், நுாற்பாலைகளில் ஆய்வு செய்து, நுால் இருப்பை கண்டறிந்து, சந்தைக்கு கொண்டு வருவர்.இவ்வாறு, அமைச்சர் காந்தி கூறினார்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement