நெல்லை கல் குவாரியில் இருவரை மீட்பதில் சிக்கல்; தொடர்ந்து பாறைகள் சரிவதால் பாதிப்பு
இந்த செய்தியை கேட்க
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே விபத்து நடந்த கல் குவாரியில் சிக்கியுள்ள இருவரை தேடும் பணியை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்றும் தொடர்ந்தனர். தொடர்ந்து பாறைகள் சரிவதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், தருவை அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில், தமிழக காங்., துணைத் தலைவர் 'சேம்பர்' செல்வராஜ் நடத்தி வரும் கிரஷர் மற்றும் குவாரியில், கடந்த 14 இரவில் குண்டுக்கல் ஏற்றும் பணி நடந்தது.
300 அடி ஆழம்
அந்த குவாரி, 300 அடி ஆழமுள்ளது. மூன்று இயந்திரங்கள், இரண்டு லாரிகளில் ஆறு பேர் அந்த இரவில் பணி செய்தனர். இரவு 11:30 மணிக்கு திடீரென பாறை சரிந்து விழுந்ததில், ஆறு பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.மறுநாள் காலை தீயணைப்பு மீட்பு குழுவினர், முருகன் மற்றும் விஜயன், இருவரை உயிருடன் மீட்டனர். மாலையில் மீட்கப்பட்ட செல்வம், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். டிரைவர்கள் ராஜேந்திரன், முருகன், செல்வகுமார் ஆகியோர், பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர். அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கமாண்டன்ட் விவேக் வத்சவ் தலைமையில், நேற்று முன்தினம் மாலை முருகன் உடலை மீட்டனர்.மூன்றாவது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. எஞ்சிய இருவரில் ஒருவரது உடல், பாறைகளுக்குள் சிக்கி இருப்பது தெரிந்தது.
எனினும் அவரை நெருங்க முடியாத அளவுக்கு தொடர்ந்து பாறை சரிவு ஏற்பட்டதால், உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ''பேரிடர் மீட்பு குழுவினரின் கயிறு அறுந்ததால், துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து இரும்பு கயிறு கொண்டு வந்து மீட்பு நடவடிக்கையை தொடர்கிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து, 'கிரேன்' வந்துள்ளது. ''போதுமான உபகரணங்கள் உள்ளன. பாறைச் சரிவு தொடர்வதால் மீட்பு நடவடிக்கை சவாலாக உள்ளது,'' என்றார்.
தலைமறைவு
இந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட, அதிக அளவு கனிமம் தோண்டி எடுத்ததால், ஏப்., 13ல் குவாரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் விதியை மீறி, இரவில் குவாரியிலிருந்து கல் எடுத்துள்ளனர். இதுகுறித்த வழக்கில் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இருவரும் கேரள மாநிலம், வண்டிப்பெரியாறில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்றுள்ளனர்.
குவாரியில் இறந்த இருவரின் குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில், தலா 10 லட்சம் ரூபாய், தொழிலாளர் நலத்துறை சார்பில், தலா 5 லட்சம் வீதம், 15 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இன்றும் மீட்பு பணி தொடரும் என கலெக்டர் தெரிவித்தார். பாறைகளுக்குள் உடல்கள் இருக்கும் இடத்தை அறிய, நேற்று இரவு, போலீஸ் துறையின் மோப்ப நாய் 'ரெக்ஸ்' பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
வாசகர் கருத்து (5)
ஆழ்துளை கிணறு விவகாரமாக இருந்தால் 5 நாள் ஆனாலும் தமிழக காட்சி ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும். அரசியல் கட்சி தலைவர்களும் அணிவகுத்திருப்பார்கள். இதெல்லாம் இல்லாததால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் கருதலாம். Disgusting.
எப்படி இரவில் பணி செய்ய அனுமதித்தார்கள்? இதற்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இதே குவாரியில் போட்டு மூட வேண்டும்.
மலை முழுங்கிகளின் பேராசையில் பல உயிர்கள் பலி... ஆனால் கடைசியில் ஒன்றும் நடக்காது... இது போன்ற பல இடங்களில் விதிமீறல்கள் சாதாரணம்.
விடியல் இவர்களுக்கு என்ன செய்ய போறான்
யார் இறந்தாலும் எத்தனை பேர் இறந்தாலும் 😉😉விடியல் முதல்வர் நெஞ்சுக்குநீதி ரிலீஸ் பண்ணுவதில் ரொம்ப பிசி. உளியின் ஓசை போல சூப்பர் ஹிட் 😉ஆகும் என உ.பி ஸ் வட்டாரத்தில் கிசுகிசு.