20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை!மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆய்வில் தகவல்
மாவட்டத்தில் 33 ஆயிரம் கழிப்பறைகள்
கோவை மாவட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ், 33 ஆயிரத்து, 804 பயனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டுக்கு பின், விடுபட்ட வீடுகள் கணக்கெடுத்து கழிப்பறை கட்டி கொடுக்கப்படுகின்றன. இதன்படி, தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து, 12 வட்டாரங்களிலும் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 20 ஆயிரத்து, 9 வீடுகளில் கழிப்பறை இல்லாதது தெரியவந்துள்ளது.இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா கூறியதாவது:தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து வாய்ப்பு உள்ளவர்களுக்கு, தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை கட்ட மானியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு, 495 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லாதது தெரியவந்துள்ளது.ஆண்டுதோறும் புதிய குடியிருப்புகள் அதிகரிப்பதால், கழிப்பறை இல்லாத வீடுகள் உருவாகி கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு, தனிதபர் இல்ல கழிப்பறை திட்டத்தில், கழிப்பறை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இடமில்லாதவர்களுக்கு சமுதாய கழிப்பிடம்
தற்போது கணக்கெடுத்த, 20 ஆயிரம் வீடுகளில் பலருக்கும் கழிப்பறை கட்ட போதிய இடவசதியில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் இவர்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்றவர்களுக்கு, சமுதாய கழிப்பிடங்கள் கட்டி கொடுக்கப்படுகின்றன.தனிநபர் இல்ல கழிப்பறை திட்டம், சமுதாய கழிப்பிட திட்டங்களின் மூலம் கோவை மாவட்டத்தில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். ஆய்வில் கண்டறியப்பட்ட பயனாளிகளின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் இலக்கின் அடிப்படையில், தகுதியான பயனாளிகளுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டி கொடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக காரமடை வட்டாரத்தில், 3 ஆயிரத்து, 781 வீடுகளில் கழிப்பறை இல்லை. இதற்கு அடுத்து சுல்தான்பேட்டையில், 3,225 வீடுகளிலும், கிணத்துக்கடவில், 2,202 வீடுகளிலும் கழிப்பறை இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!