dinamalar telegram
Advertisement

கொய்யா விலை தேங்காய்க்கு இல்லை

ADVERTISEMENT
பொள்ளாச்சி: ''கொய்யா, எலுமிச்சை பழத்துக்கு உள்ள விலை தேங்காய்க்கு இல்லை,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தை, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டு, சப் -கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அப்போது, எம்.எல்.ஏ., ஜெயராமன் எலுமிச்சை, கொய்யா பழங்களை காண்பித்து, அவற்றின் விலையை விட, தேங்காய் விலை குறைந்துள்ளதாக கூறி, கொள்முதல் முறையாக மேற்கொள்ள வலியுறுத்தினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, உடனடியாக கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு, வேளாண்துறை அமைச்சர், உடனடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.ஆனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், இன்று வரை போதிய அளவில் கொப்பரை கொள்முதல் துவங்கவில்லை. இதனால், நாளுக்கு நாள் தேங்காய் விலை குறைகிறது.ஒரு கொய்யாபழம் - 13, எலுமிச்சை - 12, நெல்லிக்காய் மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், தென்னந்தோப்புகளில், ஒரு தேங்காய் - 10 முதல் 12 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.எனவே, நெல்லுக்கு மானியம் தருவது போல், கொப்பரைக்கும் மாநில அரசு கிலோ ஒன்றுக்கு, 10 ரூபாய் மானியம் அளித்து குறைந்தது, 115 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஒட்டன்சத்திரத்துக்கு, 123 கி.மீ., தொலைவில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்கு விவசாயிகள், மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே, அரசு இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement