திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை சரிந்ததில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, குவாரி உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது. இதில், கற்கள் ஏற்றி சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கி கொண்டன. இதில், டிரைவர்கள், தொழிலாளர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் பாறைகள் சரிந்து விழுந்தது. இதனையடுத்து மீட்பு பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு
இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவி நாடப்பட்டது. இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து ஒரு குழு முன்னீர்பள்ளம் விரைந்துள்ளனர்.
கல்குவாரி விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர்.
மறியல்
மதுரை நெல்லை பைபாஸ் சாலை பொன்னாக்குடி அருகே, கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நிவாரணம்
கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்பு பணியை துரிதப்படுத்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிகாரிகள் செல்ல அறிவுறுத்தியுள்ள முதல்வர், விபத்து குறித்து போலீஸ் விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் எடுப்பதுபோல முறையாக எந்தவிதமான தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை நம் நாட்டில். அங்கு பணிபுரிபவர்களுக்கு முறையாக insurance எடுக்க வேண்டும். அதையும் அந்த உரிமையாளர் எடுத்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது என்ன நடக்கும், முதல்வர் அல்லது வேறு ஒரு அமைச்சர் வருவார், பார்ப்பார், நிவாரணம் அறிவித்துவிட்டு சென்றுவிடுவார். எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும். இதுதான் இனி நடக்கும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆளும் கட்சியும் எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுக்காது, எதிர்க்கட்சியும் வேறு என்ன நடக்கும், பிரச்சினை செய்யலாம் என்று காத்து கொண்டிருக்கும்.