ஒரே நாளில் 2,500 ஏக்கர் முறைகேடாக பத்திரப்பதிவு: பா.ஜ., போராட்டம் எதிரொலி; சார் பதிவாளர் சஸ்பெண்ட்
முற்றுகை
துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமங்களில் இருந்த 2,500 ஏக்கர் நிலத்திற்கு, ஏப்., 18ல், புதுக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் 'பவர் பத்திரம்' பதிவு செய்யப்பட்டது.கோவை, கணபதியில் உள்ள 'ஆதிதேவ் கிரீன் டெக் அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ள அன்புராஜ் கிஷோருக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் 'பவர்' கொடுத்தார்.
கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த தகவல் தெரியவந்ததும், அவர்கள், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.,யுமான சசிகலா புஷ்பா தலைமையில் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதையடுத்து, மாவட்ட பதிவாளர் பால்பாண்டி விசாரணை நடத்தி, அறிக்கை அளித்தார்.
அதன் அடிப்படையில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் - பதிவாளர் மோகன்தாசை, நேற்று சஸ்பெண்ட் செய்து, திருநெல்வேலி பத்திரப்பதிவு ஏ.ஐ.ஜி. கவிதாராணி உத்தரவிட்டார். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:துாத்துக்குடி மாவட்டத்தில், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, புதுக்கோட்டை பகுதிகளில் காற்றாலை நிறுவனங்கள் அதிகளவில் நிலம் வாங்குகின்றன.
பல கோடி ரூபாய்இங்குள்ள பல நிலங்கள், உரிமையாளர்களுக்கே தெரியாமல் முதலில் பவர் பத்திரம் செய்யப்படுகின்றன.அதில் எதிர்ப்பு எழாத பட்சத்தில், விற்பனை நடக்கிறது. அடுத்தடுத்து மூன்று, நான்கு பேருக்கு விற்ற பின், வட மாநிலங்களைச் சேர்ந்த காற்றாலை நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விடுகிறது.
இந்த போலி பத்திரப்பதிவுகளுக்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். தற்போது விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் தான், சார் - பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இது போன்று நடந்துள்ள பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்தால், பல கோடி ரூபாய் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்.
ஏப்., 18ல் நடந்த முறைகேடான பத்திரப்பதிவிற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத, திருநெல்வேலி பதிவுத்துறை உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
சிக்கல்
வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை கூறியதாவது:தெற்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த சிலர் தங்கள் இடத்தை விற்க வில்லங்க சான்றிதழ் பெற்ற போது தான், இந்த பவர் பதிவு தெரிய வந்தது. இது குறித்து கேட்டபோது, சார் - பதிவாளர் சரிவர பதிலளிக்கவில்லை. பா.ஜ.,வினருக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் போராட்டம் நடத்தியதால் தீர்வு கிடைத்துஉள்ளது. தற்போது பவர் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வில்லங்க சான்றில் அந்த பதிவும், அது ரத்தானதும் நிரந்தரமாக இடம் பெறும்.
இது சொத்தில் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும்.சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று தளவாய்புரத்தில் 600 ஏக்கரை குறிப்பிட்ட நபருக்கு விற்றுள்ளனர். அவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம், வி.ஏ.ஓ.,விற்கு வந்த போது தான், இட உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்கதையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!