வெளிவட்ட சாலையில் அதிகரிக்கும் விபத்து அணுகு சாலையை இணைக்கும் பாதை அடைப்பு
குன்றத்துார்-வண்டலுார்- --- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விபத்துகள் அதிகரிப்பதை தொடர்ந்து, சாலையில் இருந்து அணுகு சாலையை இணைக்கும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.கனரக வாகனங்களின் வசதிக்காக, வண்டலுார்- - மீஞ்சூர் இடையே வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டிப்பர், ஜல்லி, கன்டெய்னர் லாரிகள் என, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இச்சாலை வழியாக சென்று வருகின்றன.இதனால், 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படும். வெளிவட்ட சாலையை ஒட்டி, அணுகு சாலை போடப்பட்டுள்ளது.சாலை வழியாக செல்லும் வாகனங்கள், அவை செல்ல வேண்டிய இடங்களுக்கு, ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள பாதை வழியாக, அணுகு சாலையில் இறங்கி செல்லலாம். இதனால், வாகன ஓட்டிகள், சிரமமின்றி சென்று வருகின்றனர். இந்த நிலையில், வெளிவட்ட- அணுகு சாலைகளை இணைக்கும் பாதைகளில், வாகனங்கள் திடீரென திரும்புவதால், விபத்துகள் ஏற்படுகின்றன.குறிப்பாக, திருநீர்மலை, குன்றத்துார், சிக்கராயபுரம், திருமுடிவாக்கம் பகுதிகளில், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதை அடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அதிக விபத்து ஏற்படும் பாதைகளை, கான்கிரீட் கற்கள் கொண்டு மூடிவிட்டனர். இந்த நடவடிக்கையால், விபத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!