ஊழியர் இருவருக்கு கொரோனா; நான்கு நாட்களுக்கு வங்கி மூடல்
ஆரணி: ஆரணியில், வங்கி ஊழியர் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, வங்கிக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் சாலையில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இங்கு மேலாளர் தியாகராஜன் உட்பட, 13 பேர் பணிபுரிகின்றனர். வங்கி ஊழியர்கள் இருவர் உடல்நலம் பாதித்ததால், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பெண் ஊழியர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், நான்கு நாட்கள் வங்கி இயங்கக்கூடாது என்றும் மருத்துவ துறையினர் அறிவுறுத்தியதால், வங்கி மூடப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!