மாவட்டத்தில் 4வது ஆர்.டி.ஓ., அலுவலகம்
திருப்பூர்:உடுமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைகிறது.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, தாராபுரத்தில் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. தெற்கு அலுவலகத்தின் கீழ் அவிநாசி வாகன ஆய்வாளர் அலுவலகம், வடக்கு அலுவலகத்தின் கீழ் காங்கயத்தில் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.எல்லைகள், சென்று வரும் துாரம் அதிகமாக இருந்தாலும் தாராபுரம் ஆர்.டி.ஓ.,வுக்கு கீழ், உடுமலை ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. 40 கி.மீ., துாரம் வரை பயணித்து வர வேண்டியுள்ளது. வாரம் இருமுறை அலுவலர்கள் சென்று வர வேண்டியுள்ளது. உடுமலையில் தனியே ஆர்.டி.ஓ., அலுவலகம் உருவாக்க வேண்டுமென கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.சமீபத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, ஓடுதளம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிலையில், உடுமலை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை, தரம் உயர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு ஆய்வாளர் மட்டுமே உள்ள நிலையில் விரைவில் புதிய ஆர்.டி.ஓ., மற்றும் கூடுதலாக ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இனி, வாகன பதிவுக்கு தாராபுரம் செல்ல வேண்டி இருக்காது என்பதால், உடுமலை பகுதி வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் மூன்றாக இருந்த ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் எண்ணிக்கை, நான்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!