dinamalar telegram
Advertisement

ஏக்கம்!: மேம்பாலங்கள் பணி எப்போது முடியும் பொது மக்கள் ஏக்கம்!!

Share
பொன்னேரி---மீஞ்சூர், நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களின் அருகே, மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும் முடிவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்களில் பல மணி நேரம் காத்திருப்பது தொடர்வதால், இந்த ஆண்டாவது பணிகள் முடியுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை சென்ட்ரல்- - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, காட்டூர் செல்லும் சாலை உள்ள ரயில்வே கேட் (எல்.சி., 15) வழியாக காட்டூர், தத்தமஞ்சி, நெய்தவாயல், வாயலுார், திருவெள்ளவாயல் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.கடந்த 2016ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ் 55 கோடி ரூபாயில், இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.பணிகள் தொடங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.5 ஆண்டுகள்ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கும் பணிகள் தற்போது முடியும் நிலையில், இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பதற்கான எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படாமல் உள்ளது.நில அளவீடு பணிகள் முடிந்தும், இணைப்பு சாலை அமையும் இடத்தில் வசிப்பவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது, நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.இதே ரயில் மார்க்கத்தில் அத்திப்பட்டு - -நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கேட் (எல்.சி.,14), கடந்த 2018ம் ஆண்டு, 28 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.அங்கும் ரயில்வே எல்லையில் பாலம் பணிகள் முடிந்து உள்ளன. இணைப்பு சாலைக்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.இதனால் நந்தியம்பாக்கம், மவுத்தம்பேடு, தலையாரிபாளையம், கொள்ளட்டீ, கொரஞ்சூர், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இந்த ரயில் மார்க்கத்தில், தினமும் 80 புறநகர் ரயில்கள் 100க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் செல்கின்றன.

சிரமம்

இதனால் மேற்கண்ட, இரு ரயில்வே கேட்களிலும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. அவசர பணிகளுக்கு செல்லும்போது மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கும், பணியாளர்கள் அலுவலக பணிகளுக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டிகளில், ரயில்வே கேட்களில் இடையில் புகுந்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். ரயில்வே மேம்பாலங்களுக்கு இணைப்பு சாலை பணிகளை உடனடியாக தொடங்கி, இந்த ஆண்டவாது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவ்வழியாக செல்லும், கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.பயணம் மேற்கொள்வதில் சிரமம்பாலப் பணிகள் தொடங்கி, பல ஆண்டுகளாக முடிவடையாமல் இருக்கிறது. குறைந்தபட்சம், 30 நிமிடங்கள் முதல், ஒரு மணி நேரம் வரை காத்திருந்து ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டி உள்ளது. 'லாக் டவுன்' நாட்களில், குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்ட போது, அடிக்கடி ரயில்வே கேட் திறந்து மூடினர். தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படுவதால் காத்திருப்பு தொடர்கிறது. அவசர நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் முடியாத நிலை உள்ளது. பாலப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.ஆர்.வரதராஜன், 47, நந்தியம்பாக்கம்.நிலம் எடுப்பு பணி தீவிரம்ரயில்வே எல்லையில் பாலம் அமைப்பதில் ரயில் போக்குவரத்திற்கு தடையில்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் பணிகள் தாமதம் ஏற்படுகிறது. இணைப்பு சாலைக்காக, தனியார் இடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்பணிகள் விரைவில் முடிந்து, இணைப்பு சாலை பணிகள் தொடங்கப்படும். நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட அதிகாரி, சென்னை.இந்த ஆண்டாவது முடியுமா?மீஞ்சூர் - -காட்டூர் சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடியிருக்கும்போது, வாகனங்கள் பொன்னேரி - -திருவொற்றியூர் நெடுஞ்சாலை வரை நீண்ட வரிசையில் நிற்கும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இணைப்பு சாலை பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடிப்பார்கள், இந்த ஆண்டாவது பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா? என தெரியவில்லை.ஜெ.வினோத், 32, திருவெள்ளவாயல், மீஞ்சூர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement