டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே, தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம் சார்பில், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.கொரோனா அச்சுறுத்தல்காரணமாக, இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
300 மாடுபிடி வீரர்கள்
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை படியும், தமிழகத்தில் முதன் முதலாக, தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது.காலை 8:00 மணியளவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு ஆகியோர், போட்டியை துவக்கி வைத்தனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 587 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காளையை அடக்கிய வீரர்களுக்கு உடனடியாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 54 வீரர்கள் காயம் அடைந்தனர்; மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
எஸ்.ஐ.,காயம்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்த 700 காளைகளில், 587 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. மீதமுள்ள காளைகளை அவிழ்த்து விடுவதற்கு, போலீசார் அனுமதிக்கவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த மாட்டின் உரிமையாளர்கள் வாடிவாசல் அருகில், 50க்கும் மேற்பட்ட காளைகளை, ஒரே நேரத்தில் அவிழ்த்து விட்டனர்.
அந்த காளைகள் சீறிப்பாய்ந்ததை கண்ட பார்வையாளர்களும், பாதுகாப்பு போலீசாரும் அலறியடித்து ஓடினர்.அப்போது, கந்தர்வக்கோட்டை எஸ்.ஐ., வேலுச்சாமி தவறி விழுந்ததில் காயம் அடைந்தார். இதனால் பரபரப்புஏற்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!