சிறுவன் உடல் அடக்கம்: அமைச்சர்கள் அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே, பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், கடந்த 30ம் தேதி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மத்திய மண்டல போலீசார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்ட ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெடித்த தோட்டா, 2 கி.மீ., துாரத்தில் உள்ள நார்த்தாமலை கிராமத்தில், பாட்டி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி, 11 என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது.
இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின், பலத்த போலீஸ் பாதுகாப்போடு சிறுவன் உடல், ஆம்புலன்சில் சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டி மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பின், சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான டி.டி.,யை, சிறுவனின் பெற்றோரிடம் அமைச்சர்கள் வழங்கினர்.மேலும், அசம்பாவிதங்களை தவிப்பதற்காக, குளத்துார் தாலுகாவில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
வழக்கு மாற்றம்
கடந்த 30ம் தேதி சிறுவன் தலையில் தோட்டா பாய்ந்த போது, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீது, கீரனுார் போலீசார் விபத்து ஏற்படுத்தி காயம், என வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது, சிறுவன் இறந்து விட்டதால், வெடி பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் மற்றும் அஜாக்கிரதையால் மரணம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
மூட நடவடிக்கை
அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ''சிறுவன் புகழேந்தி உயிரிழப்புக்கு காரணமானவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சிறுவன் குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதி அடிப்படையில், அரசு வேலை வழங்குவது பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ''துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்,'' என்றார்.
கூடுதலாக ரூ.4 லட்சம்
சிறுவன் பெற்றோரிடம் 10 லட்சம் ரூபாய்க்கான செக்கை வழங்கும்போது, கவனக்குறைவாக, நமக்கு நாமே திட்டத்திற்கான 4 லட்சம் ரூபாய் 'டிடி'யையும் சேர்த்து வழங்கி விட்டனர். அதன்பின் பேட்டியில், 'சிறுவன் பெற்றோரிடம், 14 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து விட்டார்.
முதல்வர் அறிவித்தது 10 லட்சம் ரூபாய் தானே என்று சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், கூடுதலாக கொடுத்த 4 லட்சம் 'டிடி'யை திரும்ப பெற்றுச் சென்றனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.அமைச்சர் ரகுபதி கூறுகையில், ''சிறுவன் பெற்றோரிடம், 4 லட்சம் ரூபாய்க்கான 'டிடி'யும் சேர்த்து வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், அதற்கு மாற்றாக, என் சொந்த நிதியில் இருந்து, அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்து, அரசின் 'டிடி' திரும்ப பெறப்பட்டது,'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!