எருது விழாவுக்கு அனுமதி கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நலச்சங்கத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களில் ஐந்து பேர் மட்டும் ?சென்று மனு அளிக்க கூறினர். இதையடுத்து சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் சென்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா, மஞ்சுவிரட்டு மற்றும் தடுக்கு பண்டிகை நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த, 2009க்கு பிறகு இந்நிகழ்ச்சிகள் நடப்பது அரிதாகி விட்டது. விவசாயிகள் அதிகமாக உள்ள இம்மாவட்டத்தில் வழக்கமாக நடந்த இந்நிகழ்ச்சிக்கு பல கிராமங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியபோது ஏற்கனவே எருது விடும் திருவிழா நிகழ்ச்சிகளை நடத்திய, பல கிராமங்களில் பெயர்களை அரசிதழிலில் சேர்க்கவில்லை. இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எருது விடும் விழா காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!