திருச்சி எஸ்.எஸ்.ஐ., படுகொலை: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
திருச்சி மாவட் டம், நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன், 56; நேற்று முன்தினம் அதிகாலை, ஆடு திருடர்களை பிடிக்க பைக்கில் விரட்டிச் சென்றபோது, புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே, அதே திருடர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், ஆடு திருடுபவர்களே பூமிநாதனை கொலை செய்ததும், அவர் மொபைல் போனில் கடைசியாக கொடுத்த தகவல் அடிப்படையிலும் துப்பு துலங்கியது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே உள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 19, மற்றும் 9 - 14 வயதுடைய இரு சிறுவர்களை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, பூமிநாதனை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரையும், மண்டையூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட, 9 வயது சிறுவன், ஐந்தாம் வகுப்பு படித்து வருவதும், 14 வயது சிறுவன், எட்டாம் வகுப்பு படித்து வருவதும் தெரிந்தது. இவர்கள் இருவரும், ஆடு திருடும் பழக்கம் கொண்ட மணிகண்டனின் உறவினர்கள் எனத் தெரிகிறது.
திருச்சி டி.ஐ.ஜி., சரவண சுந்தர் அளித்த பேட்டி: திருடர்களை துரத்திச் சென்ற பூமிநாதன், ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, இரண்டு போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்கு தாமதமானதால் கொலை நடந்துள்ளது. அப்போது, மணிகண்டன் மட்டும் குடிபோதையில் இருந்துள்ளார். மற்ற இருவரும் போதையில் இல்லை. போலீசிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளனர். முதல் குற்றவாளியான மணிகண்டன் மட்டும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார். மற்ற இரண்டு சிறுவர்களும், குழந்தை மற்றும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவர். போலீஸ் தரப்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
அமைச்சர் ஆறுதல்: திருவெறும்பூர் நவல்பட்டு அருகே, சோழமாநகரில் உள்ள பூமிநாதன் வீட்டுக்கு, நேற்று சென்ற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, எஸ்.எஸ்.ஐ., மனைவி கீதா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, 'தமிழக அரசு அறிவித்த நிவாரணம் விரைவில் வழங்கப்படும்' என, தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!