dinamalar telegram
Advertisement

இறந்த தாயின் உடலுடன் மகள்கள் 2 நாள் ஜெபம்

Share
திருச்சி:உடல் நலக்குறைவால் இறந்த தாயை, மீண்டும் உயிர்ப்பிப்பதாக கூறி வீட்டிலேயே வைத்து, மகள்கள் பிரார்த்தனை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சொக்கம்பட்டியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ஜெபம் செய்து பிரார்த்திக்கும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், மணப்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதுதவிர, '108' ஆம்புலன்ஸ் டிரைவரும், இறந்த மூதாட்டியின் உடலை அந்த வீட்டில் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.


இரவு 11:30 மணியளவில், போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றனர்.வீட்டுக்குள் இருந்தவர்கள், கதவை திறக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் சமாதானப்படுத்தி, கதவை திறக்க வைத்துள்ளனர். வீட்டுக்குள் மேரி, 75, என்ற மூதாட்டியின் உடலை கிடத்தி வைத்திருந்தனர்.அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி இருந்ததால், உடல் அழுகி, பற்கள் வெளியே நீட்டி, விழிகள் பிதுங்கி மிகவும் கோரமாக காணப்பட்டது; துர்நாற்றமும் வீசியது.

வீட்டில் இருந்த ஜெசிந்தா, 43; ஜெயந்தி, 40, ஆகியோரிடம் விசாரித்த போது, அவர்கள் இருவரும் மேரியின் மகள்கள் என்பதும், தாய் கோமாவில் இருப்பதாகவும், அவரை உயிருடன் மீட்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தனர்.மேரி இறந்து விட்டதை எடுத்துக் கூறி, உறவினர்களை வரவழைதது, அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் படாதபாடு பட்டனர்.


ஒருவழியாக நேற்று அதிகாலை 3:00 மணியளவில், மேரி உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று காலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற மகள்கள் இருவரும், 'தாய் மேரிக்கு உணவு கொடுக்க வேண்டும்' என, அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டுஉள்ளனர். மேரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தபின்னும், பிரேத பரிசோதனை முடியும் வரை அங்கேயே அமர்ந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மனநலம் பாதிப்பு?



திருமணமாகாத மகள்களுடன் வசித்த மேரி, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். 7ம் தேதி மகள்கள் இருவரும், தாயை 108 ஆம்புலன்ஸ் மூலம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த டாக்டர், மேரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின், உடலை வீட்டுக்கு கொண்டு வந்த மகள்கள், வீட்டுக்குள் வைத்து பிரார்த்தனை செய்துள்ளனர். அன்று, புதுச்சேரியில் இருந்து வீட்டுக்கு வந்த உறவினரிடம், தாய் கோமாவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதனால், மேரியின் மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement