dinamalar telegram
Advertisement

ரூ.1.80 லட்சத்துக்கு குழந்தை விற்பனை : தாய், தந்தை உட்பட ஏழு பேர் கைது

Share
பெரம்பலுார் : அரியலுார் அருகே, 3 மாத பெண் குழந்தையை, 1.80 லட்சம் ரூபாய்க்கு விற்ற தாய், தந்தை உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.


@@அரியலுார் மாவட்டம், வடவீக்கம் கிராமத்தில், 3 மாத பெண் குழந்தையை, 1.80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அவரது புகார்படி, ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்தனர். இதில், வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் சரவணன், 38; மனைவி மீனா, 35, குழந்தையை விற்பனை செய்தது தெரிந்தது.தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில், நான்காவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

விரக்தியில் இருந்த தம்பதி, மற்ற பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காக, பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முடிவு எடுத்தனர்.ஏற்கனவே, திருச்சியில் கொத்தனார் வேலை செய்தபோது, மண்ணச்சநல்லுாரைச் சேர்ந்த முத்தையா, 52, என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, இது குறித்து சரவணன் தெரிவித்துள்ளார்.அவர், ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த ராஜேந்திரன், 56; செந்தில்குமார், 41, ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.அவர்கள், கோவையில் உள்ள தம்பதியிடம் பேசி, 2.75 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

ஜெயங்கொண்டம் வந்த அவர்கள், புரோக்கர் கமிஷன் 95 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, சரவணன், மீனா தம்பதியிடம் 1.80 லட்சத்தை கொடுத்து, கடந்த 17ம் தேதி, குழந்தையை வாங்கி சென்றது தெரியவந்தது.ஜெயங்கொண்டம் போலீசார், கோவை சென்று குழந்தையை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சரவணன், மீனா, புரோக்கர்கள் முத்தையா, ராஜேந்திரன், செந்தில்குமார் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன இன்ஜினியர் வெங்கடேசன், 41; மனைவி அமுதா, 37, ஆகிய ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement