dinamalar telegram
Advertisement

காட்டு பகுதியில் வீசப்பட்ட 90 கிலோ கஞ்சா பறிமுதல்

Share
நாகப்பட்டினம்:நாகை அருகே காட்டு பகுதியில் வீசப்பட்ட, 90 கிலோ கஞ்சா பார்சலை போலீசார் கைப்பற்றினர்.தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதும், தகவலறிந்து போலீசார் அங்கு செல்லும் போது, கஞ்சாவை வீசி விட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.இலங்கைக்கு கடத்துவதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், வெளிவயல் பகுதியில் படகில் பதுக்கி வைத்திருந்த, 170 கிலோ கஞ்சாவை நாகை, நுண்ணறிவு பிரிவு போலீசார், கடந்த சில மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கில், மதுரையைச் சேர்ந்த சிலோன் சேகர் என்பவரை சென்னை, சூளைமேட்டில் போலீசார் கைது செய்தனர். அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தமிழக கடலோரப் பகுதியில் பதுக்கி இலங்கைக்கு கடத்துவது தெரிந்தது.சிலோன் சேகருடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது போலீசாரின் பார்வை திரும்பியுள்ளது. இதையடுத்து, கஞ்சாவை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள், அவற்றை காட்டுப் பகுதியில் வீசி விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து வருவதாக கூறுகின்றனர்.நேற்று நாகை மாவட்டம், பெரியகுத்தகை காட்டுப் பகுதியில், 90 கிலோ கஞ்சா பார்சல் வீசப்பட்டு கிடப்பதாக, நாகை கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கஞ்சாவை கைப்பற்றி, நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சாவை வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement