dinamalar telegram
Advertisement

தாய், மகனை கொன்று 17 கிலோ நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் பலி; 3 பேர் கைது

Share
மயிலாடுதுறை:சீர்காழியில், அதிகாலையில் வீடு புகுந்து தாய், மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து, 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளையர்களை, போலீசார் மூன்று மணி நேரத்தில் சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி, தப்ப முயன்ற கொள்ளையன் ஒருவரை, 'என்கவுன்டரில்' சுட்டு கொன்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிப்பவர் தன்ராஜ் சவுத்ரி, 50; மனைவி ஆஷா, 45; மகன் அகில், 24. இவருக்கு, கடந்த ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த நெகில், 21, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.மொத்த வியாபாரம்அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தன்ராஜ், சீர்காழி அருகே உள்ள தருமகுளம் கிராமத்தில் நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். நகை மொத்த வியாபாரமும் செய்துவருகிறார்.

நேற்று அதிகாலை, 6:00 மணியளவில், தன்ராஜ் வீட்டின் கதவை சிலர், பலமாக தட்டியுள்ளனர். ஆஷா கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள், ஆஷாவை வீட்டின் உள்ளே தள்ளி, தாக்கியுள்ளனர்.அலறல் கேட்டு, அவரது மகன் அகில், மருமகள் நெகில் மற்றும் தன்ராஜ் ஓடி வந்தனர்.நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி, நகைகள் இருக்கும் இடத்தை கேட்டு, கடுமையான ஆயுதங்களால் தாக்கினர். தன்ராஜ், நிகில் ஆகியோருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தன்ராஜ், நிகில் இருவரையும் கட்டுக் கம்பியால் கட்டிப் போட்டனர்.நகைகள் இருக்கும் இடத்தை அவர்கள் சொல்லாததால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தந்தை, மருமகள் கண் முன்னே தாய் ஆஷா, மகன் அகில் ஆகியோரின் கழுத்தை கொடூரமாக அறுத்து, கொலை செய்தனர்.தன்ராஜ், 'அவர்களை விட்டுவிடுங்கள். நகைகள் இருக்கும் இடத்தை சொல்லி விடுகிறேன்' என கெஞ்சி கதறியும், இரக்கமின்றி, கொள்ளையர்கள், இருவரையும் கொலை செய்துஉள்ளனர்.

அதிர்ச்சியடைந்த தன்ராஜ், நகைகள் பெட்ரூமில் கட்டிலுக்கு அடியில் இருக்கும் ரகசிய இடத்தை கூறினார். கொள்ளையர்கள், அங்கிருந்த, 17 கிலோ தங்க நகைகள், 6.90 லட்சம் ரூபாயை பையில் எடுத்து கொண்டனர்.

கேமரா உடைப்புவீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின், 'ஹார்ட் டிஸ்க்'கை உடைத்து எடுத்துக் கொண்டனர். வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த தன்ராஜின் காரில் தப்பி சென்றனர். மருமகள் நெகில், வீட்டிற்கு வெளியே வந்து கூச்சலிட்ட பின், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். எஸ்.பி., ஸ்ரீநாதா, சீர்காழி டி.எஸ்.பி., யுவப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் மாவட்ட எல்லையை தாண்டுவதற்குள் பிடிக்க, அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடலுார், விழுப்புரம், தஞ்சை, நாகை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்து, உஷார்படுத்தப் பட்டனர்.

இதற்கிடையே, கொள்ளையர்கள் தப்பிய கார், அத்தியூர் ஊராட்சி பனிக்கிருப்பு கிராமத்தில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்த தகவல் கிடைத்தது.போலீசார் சென்று காரை சோதனை யிட்டனர். காருக்குள் சிறு, சிறு நகைகள் சிதறி கிடந்தன. அப்பகுதி முழுதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். எருக்கூர் வீரனார் மேட்டுத்தெரு, சவுக்குத் தோப்பில், மூன்று வடமாநிலத்தவர்கள் மறைந்திருப்பதாக கிராம மக்கள், கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமையில் தனிப்படை, அதிரடிப்படை போலீசார், சவுக்கு தோப்பை சுற்றி வளைத்து, மூன்று பேரை கைது செய்தனர்.இதில், இரு கொள்ளையர்கள், நகைகளை எடுத்து தருவதாக கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்கினர். அதிரடிப்படை போலீஸ்காரர் முகமது சாலீக், 24, எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு சுதாகர் ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் செல்வம் துப்பாக்கியால் சுட்டதில், ஒரு கொள்ளையனின் மார்பில் குண்டு பாய்ந்து, கீழே விழுந்து இறந்தார். போலீசாரிடம் சிக்கிய இருவரிடமும் விசாரணை நடத்தினர்.இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஹிபால்சிங், மணீஷ், ரமேஷ், கர்ணாராம் ஆகிய நான்கு பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

சதித்திட்டம்நான்கு பேரும், 25- - 27 வயதுள்ளவர்கள். கர்ணாராம் தப்பிவிட, மற்ற மூவரும் போலீசில் சிக்கியது தெரிந்தது.போலீசாரின் என்கவுன்டரில் மஹிபால் உயிரிழந்தது தெரிந்தது. சில மணி நேரங்களில், கர்ணாராமை, கும்பகோணத்தில் கைது செய்தனர்.இவர்களில் மஹிபால் மற்றும் ரமேஷ்; கும்பகோணத்தில் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையிலும், மணீஷ், ஜெயங்கொண்டத்தில் பிளைவுட்ஸ் கடையிலும், வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

தன்ராஜ், தன் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் நடக்கும் விழாக்களில் பெரிய அளவிற்கு நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கி வந்துள்ளார்.இதை, இப்பகுதியில் வேலை செய்யும் சக வடமாநிலத்தவர் மூலமாக அறிந்து கொண்ட நான்கு கொள்ளையர்களும் சதித்திட்டம் தீட்டி, கொலை மற்றும் நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.கொள்ளையர்களிடம் இருந்து நகைகள், 6.90 லட்சம் பணம், இரண்டு கைத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொலை, கொள்ளை கும்பலை, மூன்று மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தப்பிய கொள்ளையர்சிக்கியது எப்படி?தன்ராஜ் வீட்டில் நகையை கொள்ளையடிக்க, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஹிபால்சிங், மணீஷ், ரமேஷ், கர்ணாராம் ஆகிய நான்கு பேரும் திட்டமிட்டுள்ளனர்.'கொள்ளையின் போது மொபைல் போன் பயன்படுத்தினால், போலீசிடம் சிக்கிவிடுவோம். எனவே யாரும் மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம். நான்கு பேரும் காரில் தன்ராஜ் வீட்டிற்கு செல்வது. அங்கு மஹிபால்சிங், மணீஷ், ரமேஷ் ஆகியோரை இறக்கிவிட்டு, கர்ணாராம் காரை எடுத்துச் சென்று, வேறு ஒரு இடத்தில் காத்திருப்பது' என, திட்டமிட்டனர்.

இதன்படி, மூவரையும் இறக்கி விட்டு, கர்ணாராம் காருடன் சென்றுவிட்டார். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல், தன்ராஜ் காரில் தப்பியது. மொபைல் போன் இல்லாததால்,கர்ணாராம் இருக்கும் இடம் தெரியாமல் நடுவழியில் நின்றுள்ளனர். இதனாலேயே, போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement