Advertisement

லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது; அடுத்தது என்ன?

நாம் யாருக்கு ஓட்டளித்திருந்தாலும், 'நோட்டா'வை அழுத்தி இருந்தாலும், யாரோ ஒருவர், நம் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். ஆனால், நம் கடமை ஓட்டளித்ததுடன் முடியவில்லை. மக்களாட்சி வெற்றி பெற, நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இதுவரை செயல்பட்ட லோக்சபாக்களிலேயே, மிக அதிக எண்ணிக்கையில், சட்ட முன் வடிவங்கள் (மசோதாக்கள்) விவாதிக்கப்படாமல் காலாவதியானது, கடந்த, 15வது லோக்சபாவில் தான். எத்தனை மணி நேரம் பணியாற்றியது என்று பார்த்தாலும், மிகக் குறைந்த நேரம் தான் பணியாற்றி உள்ளது. சில கூட்டத் தொடர்களில், திட்டமிட்ட நேரத்தில், 20 சதவீத நேரம் கூட செயல்படவில்லை. அதே போன்ற நிலை இனி ஏற்படாது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும், 'நாங்கள் ஆட்சியில் இருந்தால் நேர்மை இருக்கும், ஊழல் இருக்காது' என்று கூறின. ஆனால், மக்களாட்சி தத்துவத்தின் படி யார் ஆட்சியில் இருந்தாலும், சட்டப்படி செயலாற்ற வேண்டும். அரசு அலுவலர்கள், ஊழலின்றி திறமையுடன் செயலாற்ற வேண்டும். இதை உறுதி செய்வது பார்லிமென்டின் கடமை.

இன்று தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் லோக்சபாவில், ஒவ்வொரு துறைக்கும் பணம் ஒதுக்கீடு செய்யும், திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன், துறையில் கடந்த ஆண்டு செயல்பாடுகளை அலசி ஆராய்வரா? வரும் ஆண்டு செயல்திட்டங்களின் நோக்கங்களை விவாதிப்பரா? இவற்றைச் செய்வதாக வாக்குறுதி அளித்து, அவ்வண்ணமே செயல்பட அவர்களை நாம் வற்புறுத்த வேண்டும்.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை, அரசு நிறுவனங்கள், துறைகள் மீதானவை. சில வழக்குகளில் இருவேறு அரசு துறைகள் அல்லது மாநில அரசுகள்; இந்திய அரசும் ஒரு கட்சிக்காரர். இந்த நிலை ஏன்? பல வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்குக் காரணம், அரசுத் துறையின் மெத்தனமே என்பது வெளிப்படை. இந்த மெத்தனப் போக்குக்கு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியிலேயே தீர்க்க, ஏதேனும் திட்டம் உண்டா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் பதில் என்ன?

அரசு எப்படி யாருக்காவது இலவசம் தரும்? வரி வாங்கித்தான் தர முடியும். மக்களில் சிலர் உழைத்து பொருள் ஈட்டி அரசுக்கு வரி செலுத்தினால் தான், அது, இலவசம் தர முடியும். மேலும் இலவசங்கள் தருவது எதற்காக? ஏழை மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து, அவர்கள் திறமைகள் வளர்ந்து, அவற்றின் பயனாக அவர்கள் பொருளாதாரம் மேம்படும் என்பதே குறிக்கோள்.இக்குறிக்கோள் நிறைவேற்றினால், காலப்போக்கில், ஏழை மக்கள் எண்ணிக்கை குறைய வேண்டும். ஆனால், நம் அரசின் வரவு செலவுத் திட்டத்தைப் பார்த்தால், இலவசங்கள் எதிர் நோக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே அல்லவா போகிறது! அதாவது, உழைக்காமல் இருந்தால், அரசு இலவசம் தரும் என்ற நிலை தொடருமானால், உழைக்காமல் இலவசம் பெறலாம் என்ற மனப்பான்மை சிறிது சிறிதாக பரவும். அப்போது நாட்டின் மொத்த உற்பத்தியும் குறைந்து, நாடே ஏழை ஆகிவிடும். ஆகவே தான், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை இலவசமாகத் தருவது தீர்வு ஆகுமா என்று கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.

ஆகவே, நிரந்தரத் தீர்வு தேவையான உணவுப்பொருள் விளைவதற்கும், உடைகள் உற்பத்தியாவதற்கும், குடியிருப்புகள் உருவாவதற்கும், திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும். உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படும் அளவுக்கு, உற்பத்தி செய்ய திட்டங்களை தீட்ட வேண்டும் என்று, நாம் எதிர்பார்க்கிறோம் என்பதை, புது எம்.பி.,க்களுக்கு, நாம் அறிவுறுத்த வேண்டும்.கல்வி என்பது திறமையை வளர்ப்பது. திறமை வளர்ந்தால் உற்பத்தி பெருகும். அனைத்து மக்களின் திறமையும் வளர்க்கப்பட்டால் தான், ஒரு நாடு சுபிட்சம் பெறும். ஆகவே, 'எங்கள் ஜாதிக்கு கல்வியில் இடஒதுக்கீடு பெற்றுத் தருவாயா?' என்று கேட்காமல், அனைவருக்கும் தேவையான கல்வி வசதிகளை செய்வதற்கு திட்டங்கள் என்ன என்ற கேள்வியையே, நாம் கேட்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் பெரிய தனியார் வங்கிகள், தேசிய வங்கிகள் ஆக்கப்பட்டன. அவ்வாறு தேசிய மயமாக்கப்பட்ட போது, அவை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் பங்கு கொள்ளும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று பெரும் நிறுவனங்களுக்கு, அவை கடன் தருகின்றன.

சில ஆண்டுகளுக்குப் பின், அக்கடன்களை வராக்கடன் என்று தள்ளுபடி செய்கின்றன. எந்த வளர்ச்சித் திட்டத்தில், அவை பங்கு பெற்றன என்பது, கடவுளுக்குத் தான் தெரியும். ஆகவே வங்கிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதும், அரசு விரும்பிய வண்ணம் கடன் தருவதும், தள்ளுபடி செய்வதும் சரியான கொள்கைதானா என்பது ஆராயப்பட வேண்டும்.இன்றைய பொருளாதார சீர்கேட்டுக்கு, வங்கிகளை அரசு கட்டுப்படுத்துவது ஒரு காரணமா என்பதை, வல்லுனர்களைக் கொண்டு ஆராய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.நாம் சுதந்திரம் பெற்ற பின், கடந்த ஆண்டுகளில் நாடு, வரவுக்கு மேல் செலவு செய்து வருகிறது. இப்போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்பதில், எந்த ஐயமும் இல்லை. ஆகவே, நம் வரவுக்கு உள்ளேயே, நம் திட்டங்கள் தீட்டப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது.

எம்.பி.,க்களுக்கு அவரது கடமைகள் தெரிந்து இருக்க வேண்டும். மேலும், ஆட்சியில் அமருபவர்கள், தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவராக இருக்க வேண்டும்.உறவினரா, நண்பரா, கட்சியா என்று வந்தால், கட்சி என்றும்; கட்சியா, நாடா என்று வந்தால், நாடு என்றும் முடிவு எடுக்க வேண்டும்.இத்தகையவராக, நம் பகுதி பார்லிமென்ட் உறுப்பினர் இருக்க வேண்டும் என்று, நாம் எதிர்பார்த்ததை அவருக்கு தெரிவித்து, அவரைச் சிந்தித்து செயல்பட ஊக்குவித்து அவர் தம் கடமையை ஆற்ற நாம் உதவ வேண்டும்.
'இ-மெயில்': muthukumaran28531yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement