Advertisement

மோடியின் முதலடிகள்!

தெற்காசிய நாடுகளின் (சார்க்) தலைவர்களை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்து, மறுநாள் அவர்களுடன் தனி தனியாக பேச்சு நடத்தி, தான் ராஜ தந்திரி என்பதை, முதல் நாளிலேயே நிரூபித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

சில அயல்நாட்டு தலைவர்களுக்கு, இந்தியாவின் சில பகுதிகளில், எதிர்ப்பு இருந்தது. அவர்கள் நாடுகளிலும், சில அமைப்புகள் எதிர்த்தன. ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அல்லது கவலைப்பட்டதாக காட்டிக் கொள்ளாமல், அவர்கள் வந்தனர்; மகிழ்ந்தனர்; சென்றனர். வராமல் இருந்திருந்தால், அவர்கள் கெட்ட பெயர் சம்பாதித்திருக்க நேரிடும். அப்படி ஒரு நிர்பந்தத்தில், அவர்களை வகையாக சிக்க வைத்தார் மோடி. அது, அவர்களுக்கும் தெரியாமலில்லை. 'சார்க்' நாடுகளின் தலைவர்கள் வருவரா, இல்லையா என்பது உறுதிப்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள, இந்திய துாதரகத்தின் மீது தாக்குதல், காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகளின் ஊடுருவல், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு என்ற துயர சம்பவங்கள், இந்திய அரசையும், சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களையும் சங்கடப்படுத்தின. வந்தோம், விருந்தில் கலந்து கொண்டோம், திரும்பினோம் என்றபடி, தலைவர்கள் தம் பயணத்தை அமைத்துக் கொள்ள முடியவில்லை. இரவு தங்கியிருந்து, மறுநாள் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டிய நிர்பந்தத்திலிருந்து, அவர்கள் நழுவிக் கொள்ள முடியவில்லை.

மோடியும், 'இந்தியா எதிர்பார்ப்பது என்ன' என்பதை, சொல்ல வேண்டிய முறையில், அவர்களிடம் சொல்லி விட்டார். இந்த சந்திப்பால், நமக்கு உடனடியாக பயன் ஏற்பட்டு விடும் என்று, சொல்ல முடியாது. ஆனால், மோடி சுயமாக சிந்தித்து செயல்படும், மன உறுதி வாய்ந்த தலைவர் என்பதை, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு, இந்த சந்திப்பு உணர்த்தி விட்டது. பத்திரிகைகளில் மோடியை பற்றி படித்து, தெரிந்து கொண்டிருந்தாலும், நேரில் சந்திப்பதன் முக்கியத்துவம் தனி. அது உணர்வுப்பூர்வமானது. அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான அபிப்ராயத்தை, மோடி தான் பதவியேற்ற தினத்திலேயே, இவர்களிடம் உருவாக்கி இருக்கிறார். இந்த அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தால், சந்திப்பு நிகழாமல் இருந்தால், மோடி, இதற்கான வாய்ப்பை, தேடிப் போக வேண்டியிருக்கும். அதற்குள் இங்கே என்னென்னவெல்லாம் நடந்திருக்குமோ. நாம் போகாமலேயே, அவர்களை அழைக்க கிடைத்த அருமையான வாய்ப்பு, பதவியேற்பு விழா. அதைப் பாங்காக பயன்படுத்திக் கொண்டார் மோடி. அதுமட்டுமல்ல, இதுவரை நடந்துள்ளது போல், இழுபறி பேச்சு இனி இருக்காது. கறாரான பேச்சுக்கு, தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ள, இந்திய அதிகாரிகள், அதையே சக வெளிநாட்டு அதிகாரிகளுக்கும், புரிய வைத்திருப்பர்; அந்த அதிகாரிகள், அதை தம் தலைவர்களுக்கு உடனே உணர்த்தியிருப்பர். அந்த அளவிலும், இந்த சந்திப்பு வெற்றியே.தாம் இனி பேசப் போவது பொம்மை பிரதமரிடம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே, பகை நாடுகளின் தலைவர்கள், இறங்கி வருவர். கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு உடன்படுவர்.

'நீங்கள் பார்க்கப் போவது புதிய இந்தியா; புதிய வலுவான பிரதமர்' என்பதை, அண்டை நாடுகளுக்கு உணர்த்தி, முதலடியிலேயே, தன் ராஜதந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நரேந்திர மோடி.மோடியின் உத்திகளும், புத்திசாதுர்யமும், அவர் தன் அமைச்சரவையை அமைத்த விதத்திலும் வெளிப்பட்டது. மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்தார்; இளைஞர்களுக்கு பொறுப்புகளை கொடுத்தார். மூத்த தலைவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளை, தொலைவில் நிறுத்தியிருக்கிறார். நபருக்காக பதவி இல்லை; பதவிக்கு தகுதியான நபரே தேவை என்ற, தன் கொள்கையை சொல்லாமல் சொல்லி விட்டார். நபர்கள், பதவிகள் பற்றிய குமுறல், பா.ஜ.,வில் இருந்திருக்கலாம். அது வெளியே வரவில்லை. இன்னொன்றையும் துணிந்து செய்தார் மோடி. அமைச்சகங்களை கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இனி தேவைக்கேற்றபடி மேலும் மாற்றி அமைப்பார். 'மத்திய அமைச்சர்கள், 100 நாட்களுக்குள் எதை சாதிக்கப் போகின்றனர் என்பதைத் திட்டமிட வேண்டும்; அதை தனக்கு தெரிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டிருக்கிறார் மோடி. அதுமட்டுமல்ல, உறவினர்களை, உதவியாளர்களாக வைத்துக் கொள்ளாதீர்கள் என்ற தாக்கீது அனுப்பி இருக்கிறார் காக்காய் பிடிக்க விரும்புபவர்களைத் தொலைவில் நிறுத்தி விட்டார்.பா.ஜ., ஆளும் குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் மோடியின் உழைப்பும், உயர்வும் பாடப் புத்தகங்களில் பாடமாக வைக்கப்பட வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. 'வாழும் தலைவர்களின் சாதனைகள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டாம்' என்று, ஒரே போடாக போட்டு விட்டார்.

ஒரு பேச்சுக்கு என்று வைத்துக் கொள்வோம்... காங்., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், சில நபர்களுக்கென்றே, புதிய அமைச்சகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள், பதவிப் பிரமாண விழாவை புறக்கணித்திருப்பர். வெளியே வந்து ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்திருப்பர். மோடியின் பதவியேற்பில் அப்படி எதுவும் நிகழவில்லை.
தேர்தல் பிரசாரம் செய்த அதே சுறுசுறுப்புடன், பிரதமர் பொறுப்புகளை நிறைவேற்ற துவங்கி விட்டார் மோடி. அமைச்சரவை கூட்டத்தில், இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தார். முதலாவது, நம்மவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த, கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவது. அடுத்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தனி சலுகையை, விலக்கிக் கொள்வது. இது நாளையே நடந்து விடும் என்று சொல்ல முடியாவிட்டாலும், உடனே முயற்சியை துவங்கியதற்கும், சொன்னதை செய்வேன் என்று செயலில் இறங்கியதற்கும், மோடியை பாராட்ட வேண்டும்.

பா.ஜ., அமைச்சரவையை, காங்கிரசார் முதல் நாளே விமர்சித்தனர். காங்கிரசை சேர்ந்த, அஜய் மக்கான் என்ற முன்னாள் அமைச்சர், 'கல்வித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒரு பட்டதாரி கூட இல்லையே' என்று, விமர்சனம் செய்திருக்கிறார்.இதற்கு ஸ்மிருதி இரானி பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. காங்., வரலாற்றிலேயே, இதற்கு பதில் உண்டு. நரசிம்மராவ் ஆட்சியில், ஐந்து ஆண்டு காலம் நிதி அமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் இருந்துள்ள மன்மோகன் சிங்கின் ஐ.மு.கூ., ஆட்சியில், 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது, அவரை ஆட்டிப்படைத்த சோனியாவும், ராகுலும் எந்தத் துறை பட்டதாரிகள் என்பதை சொல்ல முடியுமா? அது கூட தேவையில்லை. ராகுலையும், ஸ்மிருதி இரானியையும் பொது விவாதத்திற்கு அழைத்து, 'சுதந்திர இந்தியாவில் கல்வியின் நிலை, தேவைப்படும் மாற்றங்கள்' என்ற பொருளில் விவாதம் செய்ய மேடை கொடுத்தால், ஸ்மிருதி இரானியை தோற்கடிக்கும் அளவுக்கு, வலுவான வாதங்களை முன் வைத்து, ராகுலால் பேச முடியுமா? அவர் பெற்று வரும் மரியாதை எல்லாம், ராஜா வீட்டு கன்றுக்குட்டி என்ற பந்தாவில் தான். ராஜாவோ, ராணியோ இனி அரண்மனை பக்கம் வர முடியாது என்ற நிலையில், கன்றுக்குட்டியும் ஒதுக்கப்படும்.

பிரமாதமான கல்வித்தகுதிகள் இல்லாத அந்தக்காலத்து காங்., தலைவர்களுக்கு தலைமை பண்புகள் இருந்தன. இப்போது அதிகம் படித்து விட்டு, கட்சியில் சேர்ந்து தோற்றுப் போனவர்களுக்கு, அடிமைப் பண்புகள் இருக்கின்றன. தேர்தலில், பத்தில் ஒரு பங்கு கூட இடங்களை பெற முடியாத அளவுக்கு தேய்ந்து போன பின்னும், இவர்களுக்கு, போலி கவுரவம் போகவில்லை.ஒரு காலத்தில் மிகப் பெரிய தலைவர்கள் இருந்த காங்., கட்சியில், இன்றைய நிலை இதுதான் என்பது வருத்தத்திற்குரியது. தேர்தலில் படுதோல்வி கண்ட பின்னும், பெரும்பாலான மக்களால் ஒதுக்கப்பட்ட பின், கொஞ்ச காலம் வலியை பொறுத்துக் கொண்டிப்பதே காங்கிரஸ்காரர்களுக்கு கவுரவம். அப்படி அவர்கள் கவுரவம் காக்க மாட்டார்கள் போலிருக்கிறது.கட்சி தலைமையை மாற்ற வேண்டும் என்று காங்கிரசாருக்கு தோன்றவில்லை. ராகுலின் வாரிசுகளுக்கும், பிரியங்காவின் வாரிசுகளுக்கும் காத்திருக்கின்றனர். அப்படியென்ன அடிமைத்தனம்.
'இ-மெயில்': hindunatarajanhotmail.com

- ஆர்.நடராஜன் -
கட்டுரையாளர் முன்னாள் அமெரிக்க அரசியல் ஆலோசகர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement