Advertisement

தாய்மொழி தமிழ் கற்று கொடுங்கள் : டாக்டர். எச். பால சுப்ரமணியம்,டில்லி

தலை நகர் டில்லியில் டாக்டர் பாலசுப்ரமணியன், மயூர விஹார் பகுதி (1)குழந்தைகளுக்கு வார இறுதி நாட்களில் மிக எளிமையாக தாய் மொழியை கடந்த பல வருடங்களாக கற்பித்து வருகிறார் . டில்லியில் மயூர் விஹார் தென்னிந்திய கழகம், சங்கடஹர கணபதி ஆலயம், குர்காம் தமிழ் சங்கம் ஆகிய மூன்று இடங்களில் தமிழ் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்த ஆண்டு, 35 மாணவர்கள் தமிழக அரசு சார்ந்த தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சான்றிதழ் நிலைத் தேர்வு எழுதி உள்ளனர்.
உங்கள் பிறந்த ஊர் தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தது?

மேற்கு மலைத் தொடரின் மடிதனில் அகத்தியரின் பொதிகையின் இதமான அரவணைப்பில் அமுதத் தமிழோடு ஆழ்வார் குறிச்சி எனது பூர்விக கிராமம்.
தமிழ் இலக்கியத்தை மொழிபெயர்க்கும் ஈடுபாடு வந்ததன் பின்னணி என்ன?
தேசிய மொழியான இந்தியின் மூலம் இந்தியாவை ஒருங்கிணைக்க எண்ணினார் மகாத்மா காந்தி. காந்தியின் மீது கொண்ட அளப்பரிய அன்பின் காரணமாக இந்தியை கற்றுக் கொண்டு உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான உயிர்த் தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழ் இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.
உங்களுடன் பிறந்த உடன்பிறப்புக்கள் பற்றி சொல்லுங்கள்--
சகோதரர்கள் எச். பரமேஸ்வரன், எச். பத்மனாபன், சகோதரி அலமேலு கிருஷ்ணன் உட்பட குடும்பமே இந்தி, சமஸ்கிருதம் தமிழ், மலையாளம் என மொழி பெயர்ப்புகள் மூலமாக இந்திய இலக்கியத்திற்கு இன்னும் வளமூட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களையும் எம் மொழியையும் இந்தியப் பண்பாட்டையும் இந்தியச் சமுதாயத்தையும் மிகுந்த ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இதையே எங்களின் பங்களிப்பாக நம்புகிறோம்.
இப்படி தமிழ் மொழியை கற்பிக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது ?.
நீங்க காலையிலே என்ன ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டீங்க ? என்பது போன்ற சாதாரணமான கேள்வியல்ல இது. நாலா பக்கங்களிலிருந்தும் வந்துாநம்மைத் தாக்கும் கேள்வி . களத்துக்குக் களம் குரல் உரத்துக் கொண்டு வரும் கேள்வி. சிறுவயதில் எந்த மொழியைக் கற்கிறோமோ அந்தக் கலாச்சாரம் நம்மைப்பற்றிக் கொள்கிறது. மொழியும் பண்பாடும் ஒன்றோடொன்று இணைந்தவை. தமிழ் நெடுங்கணக்கில் 'ளு' என்ற எழுத்தை 'வள்ளுவர்' என்ற சொல்லுடன் பயிற்றுவித்தபோது மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவன் கேட்டான் ஒருகேள்வி. 'வள்ளுவர் ... ? யார் அவர்? இதைக்கேட்டு நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ தெரியாது. நான்திடுக்கிடவில்லை. எந்த மொழி கற்கிறோமோ அந்த கலாச்சாரம் தானேபிடிபடும்.. பிடிக்கும். இந்தச்சிறுவன் ஆங்கிலம் போதாதென்று பிரெஞ்சும் படிக்கிறானாம். பிரான்சு நாட்டுக் குட்டிக்கதைகள் எல்லாம் அத்துபடி.தமிழுக்கு கதி கம்பனும் திருவள்ளுவரும் தான் என்றார் பாரதியார் . அந்த வள்ளுவர் யார் என்று குழந்தை கேட்டால்?
உங்களின் ஆதங்கம் புரிகிறது .தற்போது தமிழ் கற்கும் ஆர்வம் நமது குழந்தைகளிடம் எந்த அளவு உள்ளது ?
போட்டிகள் நிறைந்த யுகத்தில் ஆங்கிலமோ, பிரெஞ்சோ கற்பியுங்கள் . கூடவே தாய்மொழியை வீட்டில் பயிற்றுவிப்பதுமிக மிக அவசியம். பெரியவர்களான பிறகு இந்த குழந்தைகள் போட்டியுகத்தில் இறங்கிவிடுவார்கள். பிறகு படிக்க நேரம் வாய்க்காது.பெற்றோர்கள் ஊக்குவிக்கிறார்கள்.குழந்தைகள் ஆர்வமுடன் வேகமாக புரிந்து கொள் கிறார்கள்.தாய் மொழியில் புரிதல் எளிதாகிறது .
குழந்தைகளை பெற்றோர்கள் தான் ஊக்குவிக்க வேண்டும் என்கிறீர்களா?

'இளமையில் கல்' என்ற முதுமொழிக்கு ஏற்ப இப்போதே இதற்கான ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும் . குழந்தைகளுக்கு டான்ஸ், பாட்டு, கராத்தே என்று பல்கலைகள் கற்பிக்க நினைக்கிறோம். தாய்மொழி அறிவு அமுதமானது , காலா காலத்துக்கும் பயன்படுவது என்ற நினைப்பு மட்டும்வருவதில்லை. அளப்பரிய சக்தி வாய்ந்தது மொழி. நாம் உண்ணும் உணவு நம்உணர்வுகளை நிர்ணயிக்கிறது. அதுபோலவேநாம் பயன்படுத்தும் மொழி நம்ஆளுமையைத் தீர்மானிக்கிறது. படிக்கும் புத்தகம் நம் சிந்தையைப்பாதிப்பது போல பயன்படுத்தும் மொழி நிச்சயமாக அதன் தாக்கத்தைஏற்படுத்துகிறது. மொழி என்பது வெறும் சொற்கோவை அல்ல, காலம் காலமாக நம் முன்னோர்களின் சிந்தனையில் முகிழ்ந்த பண்பாடு . திசூடியிலிருந்து ஆரம்பிக்கிறது நம் பண்பாடு. அஸ்திவாரத்தை உறுதி செய்த பிறகு எந்த மொழி கற்றாலும் -- பிற மொழிவாயிலாக எந்த அறிவைப் பெற்றாலும் -- அதனால் நம் மொழி, பண்பாடு ,சிந்தனை, ஆளுமை ஆகிய எதுவும் பாதிக்கப்படாது. மாறாக புதுவரவு நம்மொழிக்கு மேலும் வலு ஊட்டும்.
இறுதியாக உங்கள் அறிவுரை என்ன ?
நாம் இது வரையிலும் இளம் தலைமுறையினர் பற்றி கவலைப்படாமல்இருந்ததற்கு பிராயசித்தமாக ஒன்று மட்டும் செய்தால் போதும் . சமயம்,தத்துவம், இலக்கியம், இலக்கணம், மருத்துவம், வானவியல் என்றுபலதுறைகளிலும் இயங்கிய அரிய தமிழ்க் கருவூலத்தை வரும்தலைமுறைக்கு கைமாற்றம் செய்ய அவர்களுக்கு ஒரு கடவுச்சொல்அதாவது பாஸ்வேர்ட் மட்டும் தந்தால் போதுமானது. இந்தக் கடவுச்சொல் மூலம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால், கன்னிமாரா நூல்நிலையம்தொடங்கி தில்லி தமிழ்ச்சங்கம் வரையிலும் உள்ள தமிழ் பொக்கிஷத்தைஅடைய இயலும். அந்த கடவுச்சொல் பதினெட்டு மெய்களும் பன்னிரண்டு உயிரும்கொண்டது.
தற்போதைய தமிழ் கற்கும் ஆர்வலர்களுக்கு உங்கள் வழிகாட்டல் என்ன?
தமிழ்நாடு அரசு சார்ந்த தமிழ் இணையக்கல்விக் கழகம் இணையம் வழிஅடிப்படை நிலையிலிருந்து தமிழ் கற்பிக்கிறது. தமிழ் வழியும்ஆங்கிலவழியும் கற்கலாம். www.tamilvu.org என்று சொடுக்கினால் விவரங்கள்கிடைக்கும். ஆண்டில் இருமுறை தேர்வுகளும் உண்டு. பாடப்பகுதிகளைபதிவிறக்கம் செய்த பின் வீட்டிலோ அல்லது கூட்டாகவோ மாணவர்களுக்குவாரம் ஒருமுறை இருமுறை தமிழ் ஆர்வலர்கள் வகுப்பு நடத்தலாம்.
- நமது டில்லி செய்தியாளர் மீனா வெங்கி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement