dinamalar telegram
Advertisement

வேலூரில் கோட்டை விட்ட பா.ஜ.,-தி.மு.க.,:உள்ளடி வேலை காரணம் என தகவல்

Share
வேலூர்: தி.மு.க., கோட்டை எனக் கூறப்படும், வேலூர் லோக்சபா தொகுதியில், கோட்டை விட்டதும், நாடு முழுவதும், மோடி அலை வீசிய போதும், இங்கு பா.ஜ., கோட்டை விட்டதும், உள்ளடி வேலைகளால் என தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் செங்குட்டுவன், தி.மு.க., கூட்டணி சார்பில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி., அப்துல் ரகுமான், பா.ஜ., சார்பில், ஏ.சி., சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த, ஐந்து ஆண்டுகள், எம்.பி., யாக இருந்தவர் அப்துல் ரகுமான். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, மக்களிடம் கெட்ட பெயர் உள்ளது என்பதால், இந்த முறை, அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என, ஆரம்பம் முதலே, தலைமையிடம், வேலூர் மாவட்ட தி.மு.க.,வினர் கூறி வந்தனர்.
தி.மு.க., நடத்திய நேர்காணலில், மாஜி அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சீட் கேட்டு, 135 பேர் பணம் கட்டினர். கதிரும், தேர்தல் பணிகள் துவங்கி இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், கூட்டணியில் இருந்த, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இங்கு, மீண்டும் அப்துல் ரகுமானே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். இதனால், தி.மு.க.,வினர், தலைமை மீது அதிருப்தி அடைந்தனர். கே.வி.குப்பத்தில், தேர்தல் பிரச்சாரத்துக்கு, அப்துல் ரகுமான் சென்றபோது, தி.மு.க., அதிருப்தியாளர்கள், அவரது கார் கண்ணாடியை உடைத்தனர்.
குடியாத்தத்தில், அப்துல் ரகுமானுக்கு, கண்டன பேனர் வைத்தனர். மேலிடம் விசாரித்து, நீண்ட காலம், தி.மு.க.,வில் இருந்த துரைமுருகன் ஆதரவாளர்கள், 25 பேரை, கட்சியில் இருந்து, தற்காலிகமாக நீக்கப்பட்டனர். அதனால், தொகுதியில் உள்ள ஒட்டு மொத்த தி.மு.க., வினரும், அப்துல் ரகுமான் மீது அதிருப்தி அடைந்தனர்.
இதனால், பெயரளவுக்கு, தி.மு.க.,வினர், தேர்தல் வேலை செய்தார்களே தவிர, பெரும்பாலான தி.மு.க.,வினர், மாற்று கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டனர். இதை, அப்துல் ரகுமான் தெரிந்து கொண்டாலும், தன் சமுதாயத்தில் உள்ள, இரண்டு லட்சம் ஓட்டுக்கள் தனக்கு கிடைத்தாலும், தி.மு.க., விசுவாசி ஓட்டுக்கள், இரண்டு லட்சம் கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால், அவரது சமுதாய ஓட்டுக்கள் மட்டுமே, அவருக்கு முழுமையாக கிடைத்தது. இதனால் அவர், 2,05,896 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார்.
அதேபோல், நாடு முழுவதும், மோடி அலை வீசி வருவதால், சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என, வேலூர் லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நினைத்தார்.
பா.ம.க.,-தே.மு.தி.க., மற்றும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த புதிய நீதிக் கட்சி ஓட்டுக்களை பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், பா.ம.க., ஓட்டுக்கள் மட்டும், அவருக்கு கிடைத்தது. மோடி அலை வீசியதால், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஓட்டு, தாமரைக்கு கிடைக்கவில்லை. வன்னியர் - தாழ்த்தப்பட்டவர்கள் மோதல்கள் நடந்து வந்ததால், அவர்களது ஓட்டுக்களும், இவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
தே.மு.தி.க.வினர், முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. ஏ.சி.சண்முகம் அகமுடைய முதலியார் இனத்தை சேர்ந்தவர். ஆனால், குடியாத்தத்தில் செங்குந்த முதலியார் ஓட்டுக்கள், 40,000 உள்ளது. இதனால், அவர்களை பல முறை சந்தித்துப் பேசினார். செங்குந்த முதலியாரைச் சேர்ந்த, அ.தி.மு.க ., செங்குட்டுவன், குடியாத்தத்தில் உள்ள, தன் சமுதாயத்தினரிடம் பேசியதின் பலனாக, 40,000 செங்குந்த முதலியார் ஓட்டுக்கள், அவருக்கு கிடைத்தது.
ஏ.சி.சண்முகம், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த, ஒரு சில நிர்வாகிகளை மட்டும் நம்பி, பணத்தை வாரி இறைத்ததால், மற்ற நிர்வாகிகள், அதிருப்தியில் இருந்தனர். அவர் சார்ந்துள்ள சமுதாயத்தைச் சேர்ந்த சிலரும், அவர்கூட தேர்தல் பணியாற்ற வந்த அவரது அலுவலகத்தைச் சேர்ந்த சிலரும், பணத்தாசையினால், உள்ளடி வேலைகள் செய்ததும், தோல்விக்கு காரணம்.
இதனால், தோல்வி நிலையில் இருந்த செங்குட்டுவன், 59,393 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement