Advertisement

உணர்வுகள் இசையானால்..!

இசைஞானியின் இசைமழையில் நனைந்து இருப்பீர்கள்தானே? அதனால், ஒளிர் நிலவு, குளிர் தென்றல் உலவும் மலர்ச் சோலையில், பனிக்காலையில், தளிர் மேனியுடன் நடந்த பரவசத்தை நிச்சயம் அனுபவித்து இருப்பீர்கள். வெளியுலகமே தெரியாத கிராமத்தில் கிளம்பி, வேற்றுலகத்தையும் தன்வசம் திருப்பிய, அந்த இளையராஜாவின், மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா. நாடி நரம்புகளில் இசை ரத்தமே ஊடுருவிச் செல்வதால், இந்த யுவராஜாவும், சங்கீத சாஸ்திரத்தில் சளைக்காத வித்தகராக பரிணமித்து உள்ளார்.
மதுரை வந்த அவரிடம், கிடைத்த சிலநொடிப் பொழுதில்எடுத்த பேட்டி:
கிராமிய இசையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார் உங்கள் தந்தை. அப்பணியில் இன்று இடைவெளி ஏற்பட்டுள்ளதா?
உண்மைதான். அப்பாவை பொறுத்தவரை, பண்ணைப்புரம், மதுரை என்று, அந்த மண்சார்ந்த மக்களோடு, மக்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளார். அதனால் அந்த மக்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது எனத் தெரியும். மற்றவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை. ஒரு வீட்டில் தயாராகும் ரசம், வேறு வீட்டில் ருசியில் வேறுபடத்தான் செய்யும். ஆனால் சுவை நன்றாகவே இருக்கும். அதுபோல, ஒரு வீட்டில் இருக்கும் சுவையே மறுவீட்டிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கலாமா?
உங்கள் தந்தையைப் போல சாதிக்கும் எண்ணம் உள்ளதா?
ஏன், இல்லை. சாதனை புரிவதற்கான வெறியே உள்ளது. ஆனால், அப்பா மாதிரி சாதிப்பது என்பது நடக்காத காரியம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருவர் தான் அப்பா போல பிறப்பர். இருந்தாலும் எனக்குள் ஆர்வம் இருக்கிறது. நீங்கள் கூறுவதுபோல, இப்படி எத்தனை பேர்தான் சாதித்து இருப்பார்கள்?
இளையராஜா லட்சியமாகக் கொண்டு 'சிம்பொனி' அமைத்ததுபோல, உங்களுக்கும் தோன்றுவதுண்டா?
எனக்கு அப்படி ஆசையெல்லாம் இல்லை. ஆனால் 'ஆல்பம்' வெளியிடும் ஆசை உள்ளது.
மேல்நாடுகளில் இசை ஆல்பங்கள் அதிகம் வெளியாகி பிரபலமாவது போல, தமிழில் அதிகம் இல்லையே?
அங்கு ஒரு ஆல்பம் வெளியாகி, 'ஹிட்' ஆனால், அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிடும். தமிழகத்தில் அந்தளவு ஆல்பம் வரவில்லை தான். இங்கு சினிமாவில் இருந்தால் தான் ஆடியோவை நன்கு விற்க முடியும்.
உங்கள் சகோதரர், யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து சாதனை புரியும் வாய்ப்புள்ளதா?
இன்னும் அதுபற்றி யோசிக்கவில்லை. அதற்கான சூழலும் வரவில்லை. வந்தால் பார்க்கலாம்.
இசைஞானியைத் தவிர, உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள்?
ஆர்.டி.பர்மன், ஜி.ராமனாதன் ஆகியோர் உட்பட அனைத்து இசையமைப்பாளரையுமே பிடிக்கும்.
உங்கள் தந்தையின் இசையில், பாடல்கள் என்றும் ரசிக்கும்படி உள்ளது. இன்று இசையின் ஆதிக்கத்தால் பாடலும் புரியாததோடு, நிலைத்து நிற்பதுமில்லையே?
எனது தந்தையின் இசையில் கிராமியம், வெஸ்டர்ன் கிளாசிக்கல், ஜாஸ் என பலவும் இருந்தது. இப்போது கம்ப்யூட்டர் வந்துவிட்டதால், நான் உட்பட அனைவரிடமும், இசையின் பரிமாணம் மாறிவிட்டது எனலாம். அதாவது 'பாஸ்ட்புட்' மாதிரி.
அடுத்து உங்களின் லட்சியப் பயணம் எப்படி இருக்கும்?
நான் எனது உணர்வுகளை இசையாக கொண்டு செல்ல வேண்டும் என கருதுகிறேன். அதாவது இன்று நான் மகிழ்ச்சியாக, கோபமாக அல்லது எந்த உணர்வுடன் உள்ளேனோ அதை இசையாக்கும் வகையில் இருக்கும்.
இவரை வாழ்த்த: raajakarthik@me.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement