Advertisement

'விதேசி நோய்க்கு சுதேசி மருந்து': ஆர்.நடராஜன்

தமிழகத்தில், சராசரி ஓட்டு பதிவு சதவீதம் ஓரளவு உயர்ந்திருக்கும் நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளும், வெற்றி தமக்கே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. கூடுதல் ஓட்டு தமக்கே சாதகமாகுமென்று எல்லா வேட்பாளர்களும் நினைக்கின்றனர். இது சொற்பமான உயர்வே.

வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வால் ஓட்டுப்பதிவும் உயர்ந்திருக்கிறது. தீவிர தேர்தல் பிரசாரம், மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற பலரது துடிப்பு, புதிய வாக்காளர்களில் பலர், முதல்முறையாக வாக்களிக்கும் படித்த இளைஞர்கள் என்ற காரணங்களினால், ஓட்டுப் பதிவு சதவீதம் ஏதோ கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. மற்றபடி இது வரலாற்றைப் புரட்டிப் போடும் அளவுக்குக் கணிசமான உயர்வு அல்ல.யார் வென்றாலும், மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு, புதிதாக அமையவிருக்கும் ஆட்சியில், தமிழகத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி அமையுமா என்பதே. பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைந்து, வானவில் கூட்டணியிலிருந்து ஓரிருவர் அமைச்சர் பதவிகள் பெறுவதால் மட்டும் மாநிலத்தின் நலன் முழுமையாகக் காக்கப்படுமா என்று சொல்ல முடியாது.பா.ஜ., கூட்டணியில், தி.மு.க., வோ, அ.தி.மு.க.,வோ இருந்திருந்தால், நிலைமை மாறியிருக்கும்; கூடுதல் ஓட்டு நிச்சயம், பா.ஜ.,வுக்கே சாதகமாகியிருக்கும். தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி காணத் தடையாக இருந்தது, '2ஜி' அலைக்கற்றை விவகாரமும், அதில் அப்போதைய, தி.மு.க., அமைச்சர் ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று கோரிய, பா.ஜ.,வின் நிலையுமே.

அ.தி.மு.க., கூட்டணிக்கு அந்தக் கட்சியே தடை. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன், ஜெயலலிதா பிரதமராவார் என்ற முழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் எழுப்பினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பல ஊர்களில், கட்சி, பெரிய அளவில் போஸ்டர் அடித்து ஒட்டியது. அதாவது பிரமாண்டமான அந்தச் சுவரொட்டியின் காட்சி: பின்புலத்தில் நாடாளுமன்றக் கட்டடம், செங்கோட்டை, ஜெயலலிதா பிரதமராகக் கொடியேற்றுவது, மன்மோகன் சிங்கும், சோனியாவும், 'சல்யூட்' அடிப்பது. (கொடிக்குத்தான்!) இது ஜெயலலிதாவின் மனதில் ஆழப்பதிந்திருந்த ஆசை. அதை உரக்கப் பேசின அ.தி.மு.க., சிறு தலைகள்.மே 16ம் தேதிக்குப் பிறகு, ஜெயலலிதா பிரதமர் என்ற கற்பனையில் மிதக்கின்றனர் அ.தி.மு.க.,வினர். ஒரு மாநில முதல்வர் பிரதமராவதற்கு ஆசைப்படுவதில் தவறில்லை. மூப்பனாருக்குக் கையருகே வந்த வாய்ப்பு நழுவி விட்டது. அதே நிலை ஜெயலலிதாவுக்கும். முதலில் அத்தைக்கு மீசை வரைய மருமகன்களும், மருமகள்களும் ஆசைப்பட்டனர் என்று நினைத்தோம்; பிறகு புரிந்தது அத்தைக்கே அந்த ஆசை இருக்கிறது என்று.

நரசிம்மராவின் ஆட்சிக்குப் பிறகு, மத்தியில் நிலையற்ற அரசுகள் வருவதும், போவதுமாக இருந்த காலகட்டத்தில், ஜெயலலிதா பிரதமராகியிருக்கலாம்; ஆடம்பரம், லஞ்சம் என்ற இரண்டிற்கும் இடம் கொடாமல் ஆட்சி செய்திருந்தால், மக்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்தும், கொடுத்த ஆட்சியைக் கெடுத்துக்கொண்ட அவர், இன்று அந்த வாய்ப்பைப் பெறுவது கடினம். 'ஏதாவது சில காரணங்களினால் மோடி பிரதமராகாவிட்டால்...' என்று சில பா.ஜ., தலைவர்களே கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் போது, ஜெயலலிதாவுக்கு பிரதமர் பதவி மீது கண் இருப்பதில் தவறென்ன?இன்றைய சூழ்நிலையில், பா.ஜ.,வுக்கு பக்கபலமாக இருந்து, மத்திய அரசில் அங்கம் வகிப்பது புத்திசாலித்தனம். அது மாநில நலனுக்கு நல்லது என்று ஜெயலலிதா நினைக்காமல் இருந்திருப்பாரா? தான் ஜெயித்த பிறகு, ஐ.மு.கூ., ஆட்சியில் தமிழகம் கவனிக்கப்படவில்லை என்ற தர்ம சங்கடத்தை அவர் மறுக்க முடியுமா? அதை ஒரு குறைபாடாகவே உரக்கச் சொன்னார். பின் ஏன் அவர் தன் நண்பரான மோடியை ஆதரிக்கவில்லை? அவரது பிரதமர் ஆசை நாடகமாக இருக்க முடியாது. ஆனால், அவரது மோடி எதிர்ப்பு, ஒரு நாடகமோ என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

ஓட்டளித்தவுடன், ஒரு பேட்டியில், 'தேர்தல் முடிவுகள் வெளியிடும்வரை கருத்துகள் ஏதும் கூறப் போவதில்லை...' என்று ஜெயலலிதா சொன்னது பணிவா, உத்தியா என்பது புரியவில்லை. பணிவு அவருக்கு வசப்படாதது. உத்தி அவர் அரிதாக யோசித்துப் பார்ப்பது, பிறர் சொல்லிக் கேட்பதுமல்ல.மோடி பிரதமரானால், எந்த மாநில முதல்வரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா யோசித்துப் பார்த்திருப்பது:
1. தான் அங்கம் வகிக்கா விட்டாலும், மோடி பிரதமரானால், பா.ஜ., பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை,
2. நிலைமை சாதகமாக இருந்தால், விபரீத ராஜ (ராணி) யோக நியதிப்படி தானே பிரதமராகலாம் என்ற நப்பாசை. அதுமட்டுமல்லாமல் தன் தீவிரத் தேர்தல் பிரசாரம் பா.ஜ., தமிழகத்தில் காலுான்றாத நிலை, அதன் நெல்லிக்காய் மூட்டைக் கூட்டாளிகள் - எல்லாமே தன் பிரதமர் கன வை நனவாக்கும் என்று நினைத்திருப்பார் .

மோடியைப் பிறகு ஆதரிப்பதில் ஜெயலலிதாவுக்குச் சில ஆதாயங்கள் இருக்கலாம். ஆனால், இப்போது மோடியை எதிர்ப்பதனால் அவர் நிச்சயம் நஷ்டப்படப் போவதில்லை. எனவே, இன்றைய எதிர்ப்பு நாளைய ஆதரவாகவும் மாறலாம். தேர்தலில் போட்டியிட்ட அணிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அப்படியே தொடர வேண்டிய அவசியமில்லை; அதற்குச் சட்டப்பூர்வமான தடை இல்லை என்பது ஜெயலலிதாவுக்கும், பிறகுக்கும் சாதகமான அம்சங்களாகலாம்.வாக்காளர்களுக்கே, தி.மு.க., மீது இன்னமும் வெறுப்பு இருக்கிறது. மக்கள் '2ஜி' அலைக்கற்றை ஊழலை மறந்தாலும், தி.மு.க., குடும்பக் கூடாரமாகி விட்டது என்பதை கட்சி அனுதாபிகளே மறந்திடவில்லை தி.மு.க., சந்திக்கப்போகும் தொய்வுக்கு இதுவே முக்கிய காரணம் தி.மு.க.,வின் சரிவு, ஊழலால் அல்ல, குடும்ப ஆட்சியால் என்பதை லோக்சபா தேர்தல் நிச்சயம் உணர்த்தும். ஒரு வேளை நீலகிரித் தொகுதியில், தி.மு.க.,வின் ஆ.ராசா வெற்றி பெற்றால், அதைத் தி.மு.க.,வின் வெற்றியாகக் கருத முடியாது. அங்கே பா.ஜ.,வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது என்பது ஒரு துரதிர்ஷ்டம். ராசா மட்டுமே இந்த ஊழலைச் செய்திருக்க மாட்டார். அவர் வாயைத் திறந்திருந்தால், வேறு யார் யார் மாட்டிக் கொண்டிருப்பர் என்ற ஊகங்கள் அவருக்கு அனுதாப ஓட்டுகளைப் பெற்று தரலாம்.

தமிழகத்தில், எல்லாத் தொகுதிகளிலும், நிச்சயமாகப் பெருந்தோல்வியைச் சந்திக்கப் போகும் கட்சி எது என்று கேட்டால், அது, காங்கிரஸ் என்று தயங்காமல் சொல்லாம். பிற மாநிலங்களிலும் கூட அப்படித்தான். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி அதிக ஓட்டுகள் பெறும் என்பதில், அரசியல்வாதிகளிடமும், தேர்தல் கருத்துப் கணிப்பாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொள்ளும் உண்மை, காங்கிரஸ் தேறாது என்பதே. எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸ், இரட்டை இலக்க சீட்டுகளைத் தாண்டாது என்ற ஊகத்திற்கு வலு இருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்கள் டிபாசிட்டைத் தக்க வைத்துக் கொண்டால், கட்சியை மீறியபடி வேட்பாளர்கள் சாதனை என்று கருதப்பட வேண்டும்.

இந்நிலையில், நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'காங்கிரசுடன் சேர்ந்ததனால் தோற்ற கட்சி எதுவும் இல்லை' என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அது உண்மையின் ஒரு பக்கம்; மறுபக்கம் என்னவென்றால், காங்கிரஸ் தமிழகத்தில் இதுவரை பெற்ற வெற்றிகள் எல்லாம் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வின் தயவினால். இந்த முறை, தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரமுடியாமல் போனதற்குக் காரணம், தற்காப்புக்காக, '2ஜி' அலைக்கற்றை ஊழலின் முழுப் பழியையும் காங்கிரஸ், தி.மு.க., மீதே சாய்க்க முனைந்தது தான்.தி.மு.க., மீதான வெறுப்பை விட, மக்களுக்கு, காங்கிரஸ் மீதான வெறுப்பே அதிகம் என்று தோன்றுகிறது. அதற்கு சோனியா காரணமில்லை என்று சொல்ல முடியுமா?

வெளிநாட்டுப் படைப்பு போல் தோன்றினாலும், வலைத்தளத்தில் உலா வரும் ஒரு கார்ட்டூன், மக்கள் காங்கிரஸ் கட்சி பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 'ஒரு பெண்மணி, பாதிரியாரிடம், தேவாலயத்தில் பாவமன்னிப்பு கோரும் கூண்டில் ஏறி, தந்தையே, நான் ஒரு காங்கிரஸ்காரரைக் கொன்று விட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்கிறார். அப்போது பாதிரியார் சொல்கிறார்: 'மகளே, இங்கே நான் உன் பாவங்களை மட்டும்தான் கேட்டுக்கொள்வேன். உன் தேச சேவையை அல்ல' என, பதில் சொல்கிறார்.இங்கே காங்கிரஸ்காரர் என்று சொல்லப்படுவது, அமெரிக்க சாசனப்படி, சட்டமியற்றும் அமைப்புகளின் உறுப்பினர். ஆனாலும், நம் காங்கிரசைக் குறிப்பிட்டே, நண்பர் ஒருவர், இதை வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.தேசிய ஆட்சியில் தமிழகத்தின் பங்கு என்ன என்பது இப்போதைக்கு ஒரு ஊகமே. இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளாக, ஒரு விதேச வியாதி இந்திய ஜனநாயகத்தை, 'கோமா'வில் வீழ்த்திவிட்டது என்பது, ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. இந்திய ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கக்கூடிய சுதேச மருந்து, புடம் போடப்பட்டு வருகிறது. அது ஆறு நிலைகளைக் கடந்து விட்டது. இன்னும் மூன்று நிலைகளே பாக்கி. இந்த மருந்தினால் நம் ஜனநாயகம் மே16ம் தேதிக்குப் பிறகு, 'கோமா'விலிருந்து எழும் என்று எதிர்பார்க்கலாம். காத்திருப்போம் அதுவரை.
இ-மெயில்: hindunatarajanhotmail.com

ஆர்.நடராஜன்
கட்டுரையாளர் அமெரிக்கத் துாதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement