Advertisement

மனிதனாவதற்கு காத்திருக்கும் மன்மோகன் சிங்: ஆர்.நடராஜன்

எல்லா துன்பங்களுக்கும் ஒரு விடிவு காலம் உண்டு என்பர் பெரியவர்கள். அடுத்த மாதம் அதுவரும் என, நம்பக் காத்திருக்கிறது இந்திய ஜனநாயகம். பத்து ஆண்டு காலம் இந்தியாவில், சோனியாவின் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வந்திருக்கிறது. லோக்சபா தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமைந்தால், ஆட்சி மாற்றத்தை நாட்டின் இரண்டாம் சுதந்திரமாகக் கொண்டாடுவர் மக்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்திலேயே(2004-2009), மன்மோகன் சிங் ஒரு பொம்மைப் பிரதமர், அசல் நிர்வாகம் சோனியாவின் வசம் என்று மக்களுக்கு தெரியவந்தது. இந்த அதிகாரத்தின் பிடி, ஐ.மு.கூ.,வின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் மேலும் இறுகியது. ராகுல் பிரதானப் படுத்தப்பட்டார். ராபர்ட் வாத்ரா ஊழலும், பிற ஊழல்களும் ெவளியே தெரியவந்தன. ஆனாலும் சோனியா அசரவில்லை. மன்மோகன் சிங்தான் பாவம், எதுவும் சொல்ல முடியாமல் தவித்தார்.

முதல் ஐ.மு.கூ., ஆட்சி துவங்கியபோது, முன்னாள் நிதி அமைச்சரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் பிரதமர் ஆவதால் நாடு சுபிட்சமாகும் என்று, மக்கள் நம்பினர். அவரை செல்லாக்காசு ஆக்கினார் சோனியா. பொறுப்பு அவருக்கு, அதிகாரம் தனக்கு என்ற புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினார். அரசியல் சாசனம் சொல்லாத, 'தேசிய ஆலோசனைக்குழு' என்ற, அமைப்பை ஏற்படுத்தி, அதற்குக் தலைவியாகி அதை ஒரு நாட்டாமை அமைப்பாக்கினார். பிரதமராக முடியாததால், பிரதமருக்கு மேலாக இருக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமே இதற்குக் காரணம். தான் உருவாக்கிக் கொண்ட புதிய பதவியின் மூலம், அரசு கோப்புக்களை பார்வையிடும் வசதிகளையும், அரசு கடிவாளத்தையும் உருவாக்கி கொண்டார்.

இந்த ஜனநாயகப் படுகொலை பற்றி, பிரதமர் அலுவலகத்திேலயே பத்திரிகைத் தொடர்பு ஆலோசகராக இருந்த, சஞ்சய் பாரூ என்பவர், ஒரு புத்தகம் எழுதிவிட்டதால் பரபரப்பு கூடியிருக்கிறது.

'த ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற சஞ்சய் பாரூவின் புத்தகம் மூலம், சோனியாவின் மோசடி நிர்வாக முறை மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது. சரியான நேரத்தில் ெவளிவந்துள்ள புத்தகம் என்பதே உண்மை. ஆனால் இது தருணமல்ல என்கின்றனர் எப்போதும் மக்களுடன் ஒத்துப்போகாத காங்கிரஸ் கட்சிக்காரர்கள். இந்தப் புத்தகத்தினால் ஓட்டுப்பதிவு, பல மாநிலங்களில் தமக்கு எதிராகப் போகுமோ என்ற கவலை சோனியாவுக்கும், அவரது கூட்டத்தாருக்கும் வந்துவிட்டது.

சஞ்சய் பாரூ என்ன எழுதியிருக்கிறார் என்பதை முழுமையாகப் படித்திருந்தால், புத்தகத்தில் உள்ள நிகழ்வுகள், கருத்துகள் பற்றியஎதிர்வாதத்தை இவர்கள் கிளப்பலாமே. அப்படிச் செய்யாமல், 'இந்த நேரத்திலா?' என்று கேட்கின்றனர்.

நேரம் பற்றியோ, மனிதர் பற்றியோ குறை சொல்லாமல், பாரூ சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்று காங்கிரஸ் தலைமை ஏன் துணிந்து சொல்லவில்லை? 'பிரதமர் அலுவலகக்கோப்புகளை சோனியா பார்வையிடவில்லை' என்றபடி மேலோட்ட மான ஒரு அறிக்கை, மத்திய அரசிடமிருந்து வந்தது, ஒரு தற்காப்புக்காக.

இரட்டை அதிகார மையம் தனக்கு உடன்பாடல்ல என்று, மன்மோகன் சிங் வருத்தப்பட்டதாகவும், நுாலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து தான் வருத்தப்பட்டதாக ஆலோசகரிடம் சொன்ன மன்மோகன் சிங், அதையே தன் கட்சித் தலைவியும் ஆட்சியில் முதலாளியுமாகிய (முதலாளி என்பதுதான் உண்மை ஐ.மு.கூ., ஆட்சி நடத்தவில்லை, வியாபாரம் தான் செய்தது), சோனியாவிடம் சொல்ல முடியவில்லையே. பயம் அல்லது பதவி மோகம் ஏதோ ஒன்றுதானே காரணம். பிரதமர் என்ற பதவிதான் அவரிடம் இருந்தது. அசல் நிர்வாகி சோனியா என்பது, அயல்நாட்டுத் தலைவர்களுக்கும் தெரிந்த பகிரங்க ரகசியம்.

மன்மோகன் சிங்கின் இயலாமை குறித்த நிகழ்வுகளை விளக்கியுள்ள சஞ்சய பாரூ, தன் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சம்பவங்கள், கருத்துகள் எல்லாமே, மன்மோகன் சிங்குக்குத் தெரிந்ததே என்கிறார். பா.ஜ., துாண்டிவிட்டு எழுதியிருக்கலாமோ என்ற சந்தேகத்தை, மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர்களான ஸ்வபன்தான், குப்தாவும், வினோத் மேத்தாவும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பட்டும் படாமல் குறிப்பிட்டனர். உண்மை அதுவல்ல. மன்மோகன் சிங் தான் எழுத வைத்திருக்கிறார். தான் சொல்ல முடியாதவற்றை தன்னை விமர்சிப்பது போன்ற பாணியில், சம்பந்தப்பட்ட வர்களை அடையாளம் காட்ட மன்மோகன் சிங், சஞ்சய் பாரூ என்ற இந்த முன்னாள் அதிகாரியைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்ற ஊகத்திற்கே வலு அதிகம்.

தான் விரும்பியவர்களை அமைச்சர்களாக நியமிக்க முடியவில்லை. சிலரை நீக்க முடியவில்லை. அமைச்சர்கள் பட்டியல் சோனியா தயாரித்து, இவர் பார்வைக்கு வந்திருக்கிறது. கவர்னர், துாதர் நியமனங்களும் சோனியாவின் விருப்பப்படியே நடந்தன. பிறகு ஏன் மன்மோகன் சிங் என்று ஒரு பிரதமர் பதவியில் இருக்க வேண்டும்? விவரம் தெரியாமல் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாது. கோப்புகளில் கையெழுத்திட ஒரு நபர் வேண்டாமா? அவருக்கு அதற்கான சாசன அங்கீகாரப் பதவி வேண்டாமா? அதற்காகவே மன்மோகன் சிங் தேவைப்பட்டார்.

ஜனாதிபதியின் கையெழுத்துக்குப் போன ஒரு மசோதாவை, 'நான்சென்ஸ்' என்று சொல்லி ராகுல் நிறுத்தினார். 'நீர் மானஸ்தராகவும் இருக்கக் கூடாது' என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்த மன்மோகன் சிங், மான அவமானம் காரணமாகராஜினாமா செய்ய முடியாமலும் தவித்தார். அவருக்கு இது இழிவு தான்.

மன்மோகன் சிங் அடிக்கடி, ஏதாவது ஒரு காரணம் சொல்லி, வெளிநாடுகளுக்குப் போய் வந்தார் ஏன்? இந்தியத் தலைநகரில் கிடைக்காத கவுரவமும், மரியாதையும் அவருக்கு வெளிநாடுகளில் கிடைத்தது. இவர் பொம்மை, சோனியா கையில் சாவி என்பது யதார்த்தம் என்றாலும், அயல்நாடுகளில் சம்பிரதாய பூர்வமாக கிடைத்த மரியாதையில், அவர் தலைநகரின் அவமானங்களை மறந்தார். என்ன கொடுமை இது.

நல்ல பிரதமராக இருக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்ததில்லை என்று சொல்ல முடியாது, இருந்தது. ஆனால் அவரை யாரும் அப்படி இருக்க விட்டதில்லை. அவருக்கு முன் பிரதமராக இருந்த பா.ஜ.,வின் அடல்பிஹாரி வாஜ்பாய், சக அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மரபுகளைப் பின்பற்றி எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, தன் முழு ஆளுமையுடன் ஆட்சி நடத்தினார். ஆனால், அப்படி ஆட்சி நடத்த மன்மோகன் சிங் அனுமதிக்கப்படவில்லை.

வாஜ்பாய்க்கு முந்திய காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், கட்சி, ஆட்சி இரண்டையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்திராவும், நேருவும் அப்படியே. கட்சியைப் பிடித்தும், நேரடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போன சோனியா, இந்திய மக்களை, இந்திய அரசை பழி வாங்குவதற்காகவே, மறைமுகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

நேருவும், இந்திராவும், நரசிம்மராவும் தம் செயல்பாடுகளில் சிலவற்றிற்கு நொண்டிச் சமாதானங்கள் சொன்னாலும், சிலவற்றிற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர். தம் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்தனர். நேரு தண்டனை பெற வில்லை. இந்திராவும், நரசிம்மராவும் நேரடி, மறைமுக தண்டனை பெற்றனர். சோனியா, பிறருக்கு தண்டனை தருபவராகவே இருந்து வருகிறார். தன்னைப் பிரதமராக ஏற்காத இந்திய ஜனநாயகத்திற்கு தண்டனை தந்தார்.

இந்தப் புத்தகத்திற்கே இவ்வளவு அலறுகின்றனரே காங்கிரஸ்காரர் கள். தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்கு வெளியான முன்னாள் நிலக்கரித் துறைச் செயலராக இருந்த பி.சி., பரேக் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, நிலக்கரித் துறையைத் தன் வசம் வைத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறாரே. அதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்? அந்தத் துறையின் செயலராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருந்த அவர் மீதும், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா மீதும் முறைகேடு என்று வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., ஏன் பிரதமரை விட்டு வைத்தது? அவரைத் தொட்டால் அவரது மேலிடத்தையும் தொட வேண்டும். சி.பி.ஐ.,யோ மேலிடத்தின் கைப்பிள்ளை. இதை உச்ச நீதிமன்றமே மறைமுகமாகச் சொல்லிவிட்டது. சோனியாவின் கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியில், மக்களுக்கு அவ்வப்போது கிடைத்து வந்த ஆறுதல், உச்ச நீதிமன்றத்தின் குறுக்கீடு. அது மட்டும் இல்லாமலிருந்தால், நினைக்கவே பயமாக இருக்கிறது.

நிர்வாகமும் செய்ய முடியாமல், ராஜினாமாவும் செய்ய முடியாமல், யார் எது செய்தாலும், அதைத் தட்டிக் கேட்கும் உரிமையும், அதிகாரமும் இல்லாத மன்மோகன் சிங் பற்றிய புத்தகத்திற்கு சஞ்சய் பாரூ, 'ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்று தலைப்பிட்டது தவறு. 'ஆக்சிடென்ட் பிரைம் மினிஸ்டர்' என்ற தலைப்பு பொருத்தமாக இருந்திருக்கும். இந்திய ஜனநாயகம் என்ற கார், மன்மோகன் சிங் என்ற ஓட்டுனரிடம் கொடுக்கப்பட்டது. பின் சீட் டிரைவர் சொன்ன படியெல்லாம் ஓட்ட வேண்டியிருந்ததால், கார் விபத்துக்குள்ளானது; கார் சேதமடைந்தது; டிரைவருக்கும் காயம். ஆனால், காரில் பயணப்பட்ட சோனியா குடும்பத்திற்கு எந்தச் சேதாரமும் இல்லை. அவர்கள் காரின் டிக்கியில் பதுக்கி வைத்திருந்த பொக்கிஷங்களுக்கும் இழப்பு இல்லை. தேர்தலில் தோற்பதால், அவர்களுக்கு நஷ்டமும் இல்லை. காயலான் கடைக்குப் போக இருக்கும் காரை, 'ரிப்பேர்' செய்யும் பொறுப்பு அடுத்து வரும் அரசுக்கு இருக்கிறது. அதில் சோனியா அங்கம் வகிக்க மாட்டார் என்று நம்பலாம். அப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவர் காரை விற்றுப் பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிட்டு விடுவார், ரொம்பவும் சந்தோஷமாக.இப்போது சொல்லுங்கள் மன்மோகன் சிங் ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டரா, ஆக்சிெடன்ட் பிரைம் மினிஸ்டரா?E-mail: hindunatarajanhotmail.com


ஆர்.நடராஜன்
கட்டுரையாளர் அமெரிக்கத் துாதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement