Advertisement

அதிரடி விலை உயர்வு; நடுங்கும் மத்திய அரசு: வி.சண்முகநாதன்

அத்தியாவசியப் பொருட்களின் அதீத விலையேற்றத்தால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 2004ம் ஆண்டிற்கும், 2013ம் ஆண்டிற்கும் இடையே, உணவு பொருட்களின் விலை, 157 சதவீதம் உயர்ந்துள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வு, காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப் பெரிய தோல்வி. துரதிருஷ்டவசமாக, இந்த அரசு, ஏழைகளின் துன்பத்தை ஏறெடுத்தும் கூடப் பார்க்கவில்லை. இதனால், போதிய வருமானம் இல்லாத, நடுத்தர மக்களும், உழைக்கும் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைக் குடும்பங்கள், விலைவாசி ஏற்றத்தால், உணவு உண்பதையே குறைத்து வரும் நிலை உருவாகி உள்ளது. பற்றாக்குறையாலும், தடையில்லா பதுக்கல்களாலும், ஏற்படுத்தப்பட்ட இந்த விலையேற்றம், மக்களை, விடையில்லா துன்பத்தில் ஆழ்த்திஉள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கடி விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். அவரது உறுதி மொழிகளை பரிகசிப்பது போல், பல ஆண்டுகளாக இந்த விலையேற்றம் தொடர்ந்து வருகிறது. வாங்குவோரை மட்டுமின்றி விற்பனை செய்யும் சிறு வணிகர்களையும், 'பணவீக்கம்' பெருமளவில் பாதித்துள்ளது. வியாபாரிகளின் கையிருப்பில் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், நீண்ட காலம் பாதுகாக்க முடியாத பொருட்கள், விரைவிலேயே கெட்டுப் போய் விடுகின்றன. பல குடும்பங்கள் வழக்கத்தை விட அளவிலும், தரத்திலும் குறைந்த உணவு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு விட்டனர்.

நுகர்வோர் தேவைக்கும், விளைப் பொருட்கள் வரவிற்கும் உள்ள இடைவெளி மட்டுமே, விலையேற்றத்திற்கு காரணம் என, கூற இயலாது. பொருட்களின் சீரற்ற வரத்து, சந்தைகளின் ஒழுங்கு முறையற்ற தன்மை, சமூகப் பொறுப்பற்ற சிலர், விற்னையை கட்டுப்படுத்தும் போக்கு, ஆகியவை விலையேற்றத்திற்கு காரணிகள் ஆகின்றன. விவசாய துறைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும், இந்த நிலைமைக்கு மற்றும் ஒரு காரணி. மத்திய அரசு, விலையேற்றத்தை தடுக்கவோ, அவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவோ, எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. வளரும் பொருளாதாரமே, விலை உயர்வுக்கு காரணம் என, மத்திய அரசு, மிக சாமர்த்தியமாக சமாதானம் சொல்லி வருகிறது. வியாபார நுணுக்கமோ, சந்தை விவரங்களோ, அவற்றில் ஏற்படக்கூடிய அபாயங்களை சந்திக்க முடியாத பெரும்பாலான விவசாயிகள், விளைபொருட்களின் விற்பனையில் ஏதும் செய்ய இயலாமல் உள்ளனர். வியாபாரிகள், சிறு குழுக்களாக சந்தைகளில் கூடி, விளைபொருட்களை ஒன்று சேர்த்து தரவாரியாகப் பிரித்து, பல்வேறு பகுதிகளுக்கு பலவாறு விலை நிர்ணயித்து அனுப்புகின்றனர். பெரும்பாலான வர்த்தகத்தை இடைத் தரகர்களும், கமிஷன் ஏஜன்டுகளுமே நடத்துகின்றனர். மேலும், இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ஊக வணிகம் மற்றும் எதிர்கால வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர். இவை பொருளாதாரம் சமநிலையில் பங்கிடுவதை, மிக மோசமாக தடுக்கிறது. இந்த பிரச்னை வெகு அபாயகரமானது. உற்பத்திக்கும், விற்பனைக்கும் இடையில், சில தந்திரசாலிகள், தங்கள் விருப்பப்படி சந்தையை இயக்குகின்றனர். அவர்கள் செயற்கையான முறையில் பொருட்களை பதுக்கி, கறுப்பு சந்தையில் விற்று, கொள்ளை லாபம் அடைகின்றனர். இந்த வித விலை உயர்வுக்கு விளைச்சல், பங்கீடு, பருவ காலங்கள் அல்லது வேறெந்த காரணமும் சொல்ல முடியாது.

பல்வேறு காரணங்களால், விவசாயி கள், தங்கள் விவசாய பொருட்களை தாங்களே விற்க முடிவதில்லை. உண்மையான விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் விற்ற விலையில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, தங்கள் கடின உழைப்பின் பலனாக பெறுகின்றனர். நடுவில் உள்ளவர்களும், பெரும் வியாபாரிகளுமே மீதமுள்ள பெரும் லாபத்தை அடைகின்றனர். இதை தடுப்பதற்கு, அரசிடம் எந்த விதமான உறுதியான நடவடிக்கையும் இல்லை. சிறு விவசாயிகள், தாங்களாகவே தங்கள் விளைபொருட்களை சந்தைகளில் நேரடி விற்பனை செய்வது, விவசாயிகளுக்கு போதுமான வருமானத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் தரமான பொருட்கள் சரியான விலையில் கிடைப்பதற்கு வழி வகுக்கும். சிறிய விவசாயிகள், தங்கள் விவசாய உற்பத்தியை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போது, செலுத்த வேண்டிய வரி, தீர்வைகளை ரத்து செய்யவோ, குறைக்கவோ அரசு முன் வர வேண்டும். கறுப்பு சந்தையை ஒழிக்க உதவும் வகையில், சேமிப்புக் கிடங்குகள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட வேண்டும். பொருட்கள் கிடங்குகளில் பதுக்கப்படுவதன் மூலம் உண்டாகும் செயற்கையான தட்டுப்பாட்டை, அரசு அனுமதிக்கக் கூடாது. சரியான முறையில் சந்தையை கண்காணித்து, நாட்டில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், அரசு, அதிரடி சோதனையை மேற்கொண்டாலே, உணவு பண வீக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். விவசாயப் பொருட்களின் வளமான உற்பத்தி, அவற்றை சரியான முறையில் பங்கிடுதல், இவை மட்டுமே, பணவீக்கம் இன்றி, வளரும் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் வழி. அப்போதுதான், மக்கள் நலம் பாதுகாக்கப்படும் என்பதே உண்மை. இ-மெயில்: vsnathan7666gmail.com

வி.சண்முகநாதன், அரசியல் ஆலோசகர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement