Advertisement

இருசொட்டு கண்ணீர்: எச். ராமகிருஷ்ணன்

தலைநகர் டில்லியில், 1958ம் ஆண்டு, அரசுச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மாமாவின் வீட்டிற்கு, கல்லூரி விடுமுறையில் சென்றிருந்த நேரம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மக்களவைக்கான நுழைவுச்சீட்டை அவர் பெற்றுத் தந்தார். அவை நடவடிக்கைகள் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, நான் நுழைவு வாயிலில் ஆஜர் ஆனேன். என்னைப் பார்வையாளர் மாடத்திற்கு அழைத்துச் சென்றனர். சபாநாயகர் வந்து அமர்ந்த உடன், அவை நடவடிக்கைகள் துவங்கின. அப்போது, எம்.அனந்தசயனம் அய்யங்கார் தான் சபாநாயகராக இருந்தார். ஜவகர்லால் நேரு, பிரதமர். எதிர்வரிசையில் ஆச்சார்ய கிருபளானி. நேரு மருமகன் இந்திராவின் கணவர்- பெரோஸ் காந்தி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஹரிதாஸ் முந்த்ரா சம்பந்தப்பட்ட, 'ஊழல்' விவகாரத்தை எழுப்பிய நேரம். (இதையடுத்து, அமைச்சர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பது வேறு விஷயம்!) நான் பார்வையாளர் மாடத்தில், காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தேன். அவையின் அலுவலர் ஒருவர் என்னிடம் வந்து, 'காலுக்கு மேல் கால் போட்டு இங்கு உட்காரக் கூடாது; உங்கள் காலையோ, காலணியையோ உயர்த்துவது அவமரியாதை என, என் காதருகே, பணிவாக, ஆனால், கண்டிப்புடன் கிசுகிசுத்தார். நானும், என்னுடன் அமர்ந்திருந்த ஒருவரும் அவையில் நடப்பதைப் பற்றி, பிறருக்குச் சற்றும் கேட்காத குரலில் பேசிக் கொண்டிருந்தோம். அலுவலர் ஒருவர், எங்களிடம் வந்து, 'தயவு செய்து இங்கே பேசாதீர்கள்' என்று பணிவுடன் எச்சரித்துச் சென்றார். அவையில், பேசுபவரின் குரல் தவிர, எந்த ஓசையும் கிடையாது. அவ்வப்போது சபாநாயகர் ஐயங்கார் மட்டும் இடைமறித்து, ஏதேனும் பேசுவார். பிரதமர் நேரு, அவைக்குள் வரும் போதும் சரி, அவையிலிருந்து வெளியே செல்லும் போதும் சரி, அவைத் தலைவரை நோக்கி, தலை குனிந்து வணங்குவார். அவையை விட்டுச் செல்லும் போது, இரண்டொரு அடி பின்னோக்கியே சென்றுவிட்டுத் தான் திரும்புவார். கிருபளானி போன்றவர்கள் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டு, அதற்கு மிகுந்த பணிவுடன் பிரதமர் பதிலளிப்பார்.

இவையெல்லாம், மக்களவையின் இருக்கைகளின், நிறமான பச்சை நிறத்தை போன்றே, என் உள்ளத்தில் இன்றும் பசுமையாக உள்ளன. இவற்றுக்கு நேர் மாறாக இருக்கிறது, இன்றைய நிலைமை. பல ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்தின் எஞ்சியிருக்கும் மாண்பு, கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுவதை, மிகுந்த மன வேதனையுடன் தான், நாம் பார்த்து வருகிறோம். மிகுந்த கண்டனத்திற்குரிய கூச்சல் குழப்பம், அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் அவையின் மையப் பகுதிக்குச் செல்வது, கூச்சல் போடுவது, காகிதங்களை கிழித்து எறிவது இவையெல்லாம், ஒரு செய்தியே அல்ல என்ற அளவுக்கு, அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங், 'என் இதயத்தில் ரத்தம் வடிகிறது' என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அந்த அளவுக்குக் கேவலமான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்தன, அண்மை நிகழ்வுகள். 'வெட்கப்படக்கூடியவை, நம்மைத் தலைகுனிய வைப்பவை' என, சபாநாயகர் உட்பட, பல தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு உறுப்பினர் மிளகுப் பொடி தூவுகிறார். தற்காப்புக்காக அதைத் தூவியதாக அதை நியாயப்படுத்துகிறார். இவரது செயலால், சபாநாயகர் உட்பட பல உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மற்றொரு உறுப்பினர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறுகின்றனர் (தான் அப்படிச் செய்யவில்லை என்றும், மைக்கையே தான் கையில் வைத்திருந்ததாகவும் அவர் கூறிக்கொள்கிறார்! அப்படியே என்றாலும், மைக்கை ஏன் அவர் பிடுங்கி எடுக்க வேண்டும்?). இதெல்லாம் தெலுங்கானா மசோதாவைக் கொண்டுவரக்கூடாது என்பதற்காக! இதற்கு முன்பே, மற்றொரு உறுப்பினர், இந்த மசோதாவைக் கொண்டு வந்தால், அவையிலேயே தீக்குளிக்கப் போவதாக எச்சரித்திருந்தார். ஆயினும், பல்வேறு ஆயுதங்கள், நாடாளுமன்ற மண்டபத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்று, எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அண்மைக்கால நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் எவரும், கேவலமான நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று கணித்திருப்பர்; ஆனால், இவ்வளவு கேவலமான நிகழ்வுகள் நடைபெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள். 'அமைதி காக்க வேண்டும்' என்று, சபாநாயகர் மீரா குமார் அவ்வப்போது மன்றாடிக் கேட்டுக் கொள்வதை நாம் தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறோம். இந்த விவகாரத்தை அவர் இதோடு விட்டு விடாமல், இந்திய குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, நாடாளுமன்ற நோக்கர்களின் கருத்து. இத்தகைய நிகழ்வுகளால், நாடாளுமன்றத்தின் செயல்பாடு ஸ்தம்பித்து விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலில் ஈடுபடும் அல்லது காகிதங்களைக் கிழித்தெறியும் உறுப்பினர்கள், அதாவது, அவையின் அமைதியான நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவிப்போர், மீண்டும் எந்தத் தேர்தலிலும் நிற்க முடியாது என்று சட்டம் இயற்ற வேண்டும். நாடாளுமன்றத்தின் முக்கிய நோக்கம், சட்டங்களை இயற்றுவது, அதற்கான, ஆரோக்கியமான ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள விவாதங்களை நடத்துவது ஆகியவையே. வன்முறை இவற்றைத் தடுக்கின்றன. 'தெலுங்கானா மசோதா கொண்டு வரப்பட்டு விட்டது என்றும், அது இப்போது அவையின் சொத்து' என்றும் உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறும் அதேவேளையில், 'அந்த மசோதா கொண்டு வரப்படவே இல்லை' என, எதிர்க்கட்சித் தலைவர் சாதிக்கிறார். மாநிலங்கள் அவையில், ஒரு உறுப்பினர், அவையின் தலைமைச் செயலருடன் மல்லுக்குச் செல்கிறார். என்னே மக்களாட்சி! நாடாளுமன்றத்திற்கு இரு சொட்டு கண்ணீர்த் துளிகள் உரித்தாகுக! நம் மக்களாட்சி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. மக்களாட்சியே நீடிக்க வேண்டும் என்பதில், இரு கருத்துக்கு இடமில்லை. ஆயினும், எத்தகைய மக்களாட்சி முறை என்பதை, நாம் முடிவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால், நாம் நமக்காகவே ஏற்படுத்திக் கொண்டுள்ள அரசியல் சாசனத்தை உரிய வகையில் திருத்த வேண்டும். எத்தகையவர்களை நமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களுக்கான தகுதிகளை எவ்வாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதை ஆராய்வதற்கான தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. E.mail: ramakrishnan.hgmail.com

எச். ராமகிருஷ்ணன், முன்னாள் செய்தி ஆசிரியர், சென்னைத் தொலைக்காட்சி; சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement