Advertisement

'மாயாஜால' மனசுக்குள் வெற்றியின் விதைகள்

மாணவர்கள் தேர்வில் சாதிக்க, இளைஞர்கள் வாழ்வின் இலக்கை அடைய தன்னம்பிக்கை அவசியம். தன்னம்பிக்கை தவறினால், தோல்விகள் நம்மை தழுவும். இன்று தன்னம்பிக்கை பற்றி பேசவும், எழுதவும் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். சிலர் பேசுவதை கேட்டால், நம்மில் இருக்கும் தன்னம்பிக்கை போய்விடும். சில தன்னம்பிக்கை புத்தகங்களோ, 'நம்பிக்கை டானிக்' தருவதற்கு பதில், விரக்திக்கு விரல் நீட்டுகின்றன.

ஆனால், அபாரமான தன்னம்பிக்கை கருத்துக்களையும், வெற்றிக்கான மந்திரங்களையும், தந்திரங்களையும், 'மேஜிக்' என்ற ஜனரஞ்சக கலையோடு கலந்து தந்து, சாதித்து வருகிறார் பெங்களூருவை சேர்ந்த பயிற்சியாளர் ராஜேஷ் பெர்னாண்டோ.தூத்துக்குடி, இவருக்கு சொந்த ஊர். எம்.ஏ., எம்.பி.ஏ., படித்தவர். பெங்களூரு கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றிய இவரின் இப்போதைய முழுநேரப்பணி, மேஜிக்குடன் கூடிய தன்னம்பிக்கை பயிற்சி நடத்துவது. எல்.கே.ஜி., மாணவர்கள் துவங்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் மேலாளர்களுக்கு வரை, அழகு தமிழிலும், சரளமான ஆங்கிலத்திலும், இவர் நடத்திஇருக்கும் நிகழ்ச்சிகள் இரண்டாயிரத்திற்கும் மேல்! இருபத்து நான்கு மணி நேரத்தில், 28 கருத்தரங்குகளை, 28 இடங்களில், 28 ஆயிரம் பேருக்கு நிகழ்த்தி, கின்னஸ், லிம்கா சாதனைகளில் இடம்பிடித்தவர்.

ஒரு சிறு காகிதத்தை எடுக்கிறார். அதில் தீயை பற்றவைக்கிறார். எரியும் தீ, கையைச்சுடும் நேரம், 'மேஜிக்' மூலம் அதனை 100௦௦ ரூபாய் நோட்டாக மாற்றி காட்டுகிறார். 'தன்னம்பிக்கை தவறாமல், கஷ்டங்களை கடைசி வரை தாங்கி பிடித்துக்கொண்டால், நல்லது நடக்கும்' என்ற நல்லக்கருத்தை இந்த காட்சி மூலம் விளக்குகிறார்.போக்குவரத்து சிக்னலில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகள் இருக்கும். அதற்கு விளக்கம் தருகிறார்...''சிவப்பு -நின்று யோசித்து தவறுகளை திருத்திக்கொள்ள. மஞ்சள் - அடுத்து நாம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிக்க. பச்சை - இலக்கை நோக்கி முன்னேற!''இந்த நிறங்களில், தனித்தனியே மூன்று டவல்களை எடுத்துக்கொள்கிறார். மேஜிக் மூலம் இவற்றை, மூன்று நிறங்களும் உடைய, ஒரே டவலாக மாற்றிக் காட்டி விட்டு சொல்கிறார்... ''நமது தவறுகளை திருத்திக்கொண்டு, யோசித்து, இலக்கை தீர்மானித்து முன்னேறினால், வெற்றிக்கதவு முழுமையாக திறக்கும்,''.
இப்படி பல்வேறு 'மேஜிக்குகள்' மூலம், அரிய கருத்துக்களை அள்ளி வீசுகிறார். அரங்கு ஆர்ப்பரிக்கிறது...அதே நேரம் சிந்திக்க வைத்த கருத்துக்களுடன் கலைந்து செல்கின்றனர் பார்வையாளர்கள்.

இந்த புதுமை எண்ணம் எப்படி தோன்றியது?
''நல்லக்கருத்துக்களை, மாணவர்கள் எளிதில் புரியும் வகையில் சொல்ல வேண்டும். 'மேஜிக்'- உற்சாக நிகழ்ச்சி. தன்னம்பிக்கை-சீரியஸ் நிகழ்ச்சி. உற்சாக நிகழ்ச்சியை பயனுள்ளதாக்கினால் என்ன? கவர்ந்திழுக்கின்ற கலையும், கருத்தும் இணையாக இருந்தால் நிறைய விஷயங்களை மனதில் திணிக்க முடியும். இதற்காக எம்.சி.சர்க்காரிடம் 'மேஜிக்' கற்றேன். 'சைக்கோ தெரபிஸ்ட்' பட்டம் பெற்றேன். 'மெசேஜை', மேஜிக் மூலம் சொல்ல ஆரம்பித்தேன். பள்ளி, கல்லுாரிகள், ஐ.டி., நிறுவனங்கள் என என் நிகழ்ச்சி பிரபலமாயிற்று.சோர்வு வேண்டாம்; தன்னம்பிக்கை அற்ற, தன்னையே வெறுக்கும் வாழ்வு வேண்டாம். நான் செய்த 'மேஜிக்' எளிது; ஆனால், சொன்னவை எளிதான விஷயம் அல்ல!'' என்கிறார் ராஜேஷ்.மாயாஜாலம் செய்யும் மனசுக்குள், வெற்றியின் விதைகள் விதைக்கும் இவரை தொடர்பு கொள்ள: 099456 96196.

ஜிவிஆர்., மற்றும் ஷஹில்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement