Advertisement

விலகிச் சென்ற விளக்குமாறு: ஆர்.நடராஜன்

அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி முதல்வராகப் பொறுப்பேற்ற போதே பலர், 'இந்த நாடகம் அந்த மேடையில் இன்னும் எத்தனை நாளம்மா?' என்று, நினைத்தனர். ஐம்பது நாட்களுக்கு முன்னதாகவே நாடகம் முடிந்து விட்டது. தான் முதல்வரானதே ஒரு அதிசயம் என்பதை உணர்ந்திருந்த கெஜ்ரிவால், நிர்வாகம் செய்யத் தெரியாமல், விட்டால் போதும் என்ற நிலையில் கவுரவமாக வெளியேறுவதற்கு, ஜன் லோக்பால் மசோதாவை கையிலெடுத்தார். தோற்றார், பதவி விலகினார்.

டில்லி தேர்தலில் பா.ஜ., தனிப் பெரும் கட்சியாக வர, 28 இடங்களுடன் ஆம் ஆத்மி கட்சி, இரண்டாவது இடத்தை பிடித்த போதே கெஜ்ரிவால் பேச வேண்டாதனவற்றையும், பேசக் கூடாதனவற்றையும் பேசினார். பா.ஜ., தன்னுடன் கூட்டாட்சிக்கு பேரம் பேசியது, காங்கிரஸ், பா.ஜ., இரண்டுமே தன் எதிரிகள் என்றார். எந்தக் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை துவங்கினாரோ, எந்தக் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேர்தல் பிரசாரம் செய்தாரோ, அதே காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார். இது கெஜ்ரிவால் செய்த முதல் தவறு. தன்னை விட அதிக இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.,வே ஆட்சி அமைக்க தயங்கிய போது, 'எங்களை விட அதிக இடங்கள் பெற்ற கட்சியே ஆட்சி அமைக்க முன் வரவில்லை, எனவே, நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை' என்று சொல்லியிருக்க வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால், மறு தேர்தலில், சாய்ந்தால் சாய்கிற பக்கம் என்ற மக்களின் மந்தை மனப்பான்மை, 'ஓஹோ பக்கத்து தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஜெயிக்கும் போலிருக்கிறதா, நாமும் அவர்களையே தேர்ந்தெடுப்போம்' என்று இன்னும் பத்து தொகுதிகளில் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை ஜெயிக்க வைத்திருக்கக் கூடும். படித்தவர்கள், நல்ல பதவியில் உள்ளவர்கள் மற்றும் உயர் நடுத்தர மக்களின் ஆதரவையும் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு இது கூடத் தெரியாதா? காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று முடிவு செய்த போதே, 'ஆம் ஆத்மி' மீதிருந்த நம்பிக்கை சிதைந்து விட்டது.

சரி, இவர்கள் காங்கிரஸ் ஆட்சி செய்த ஊழல்களை கிளற மாட்டார்கள். இவர்களது ஊழல் எதிர்ப்பெல்லாம் வெறும் பிரசார உத்தி என்று மக்கள் நினைத்தனர். இது, ஆம் ஆத்மிக்கு புரியவில்லை என்று சொல்ல முடியாது. இருந்தாலும் தன் ஆசைக்கு அணை போட்டுக் கொள்ள விரும்பவில்லை. காங்கிரஸ் ஏதாவது தகராறு செய்து ஆட்சியை கவிழ்த்தால், அதையே காரணம் காட்டி மறு தேர்தலில் ஜெயிக்கலாம் என்று நினைத்தது. இருந்தாலும், பதவிக்காக மக்கள் மன்றத்திடம் கருத்து கேட்கிறோம் என்று சொல்லி ஒரு தெருக்கூத்தை நடத்தியது.


இதையடுத்து ரயில் பயணம், பொது இடத்தில் பதவியேற்பு என்றபடி, மலிவான விளம்பரத்திலேயே குறியாக இருந்த கெஜ்ரிவால், தனக்கு செக்யூரிட்டி வேண்டாம், பெரிய வீடு வேண்டாம், பாதுகாப்பு வேண்டாம் என்றார். வி.ஐ.பி., கார்களில் கொம்பு முளைத்தது போல் சிவப்பு விளக்கு இருக்காது என்று அறிவித்தார். இவை எல்லாமே தீராத விளையாட்டுப் பிள்ளையின் திருவிளையாடல்கள் என்று எடுத்துக் கொண்ட மக்கள், ஜீரணிக்க முடியாமல் போன மற்ற விஷயங்கள்: சட்ட அமைச்சர்கள், தமிழ் சினிமாக்களில் வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஏன் ஒரு படத்தில் வரும் தேர்தல் கமிஷனர் போல், நேரடியாகக் களத்தில் இறங்கியது. இதில் ஆட்சியின் மாண்புகள் அடிபட்டுப் போயின. அமைச்சரின் நேரடித் தலையீடு என்பது சினிமாவுக்குச் சரிப்பட்டு வரலாம்; வாழ்க்கைக்கு ஒத்து வராது.

போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய விஷயத்தில் தானே கைது செய்யும் போலீஸ்காரராகவும், விசாரணை அதிகாரியாகவும், பிராசிக்யூஷன் தரப்பு வக்கீலாகவும், நீதிபதியாகவும் நடந்து கொண்டுவிட்டு, டில்லி போலீசைக் குறை கூறிய நிகழ்வு வேண்டத் தகாதது. எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். எதைச் செய்ய சொல்ல வேண்டுமோ, அதைச் செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தால் போதும். இது
புரியாதவர் என்ன நிர்வாகி? சட்ட அமைச்சர் செய்தது சம்பிரதாய அத்துமீறல் மட்டுமல்ல, சட்ட மீறலும் கூட. இதைக் கண்டித்திருக்க வேண்டிய முதல்வர், இனி இப்படி எதுவும் நடக்காது என்று உறுதி கூறாமல், மத்திய அரசை எதிர்த்து தர்ணா செய்வதாக சொல்லி வீதிக்கு வந்தார். தெருவிலேயே அலுவலகத்தை நடத்தினார். தெருவிலே படுத்துத் தூங்கினார். தெருக்கூத்து என்றால் என்ன என்பதைச் சரியாக விளங்க வைத்தார்.ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மட்டும் என்றால் போராடட்டும் தவறில்லை. ஆனால், முதல்வராக இருந்து கொண்டு கோஷம் எழுப்பித் தெருக்கூத்து செய்தது எதற்கு?

ஆர்ப்பாட்டம் செய்து பிரபலமாகி, அரசியல் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடித்த பிறகும், நிர்வாகம் செய்யாமல் ஆர்ப்பாட்டமே செய்வது என்று நடந்து கொள்பவர்களுக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை மட்டுமே தருவர், ஆனால், ஆட்சியைத் தரமாட்டார்கள். விளக்குமாறு தான் இந்தக் கட்சியின் சின்னம். விளக்குமாற்றை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே தான் வைப்பர் மக்கள்.

இத்தனைக்கும் கெஜ்ரிவால், கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திய விவரமறியாதவர் என்று சொல்ல முடியாது. அனைத்திந்தியப் போட்டித் தேர்வு எழுதி இந்திய, 'ரெவின்யூ' பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி செய்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதற்கேற்ற, கவுரவம், கண்ணியம் அவரிடம் இல்லையே. ஒரு விரல் பிரட்டி நபர் கலெக்டரிடம் முறையீடு செய்வதென்றால் கூப்பாடு போடலாம், அநாகரிகமாக நடந்து கொள்ளலாம். ஒரு உயர் அதிகாரி அப்படிச் செய்யலாமா? செய்தார் என்றால் அவரை அதிகாரியாக நீடிக்க விடலாமா?குறுகிய சிந்தனை வட்டத்தைத் தாண்டாதவர், கெஜ்ரிவால். இல்லையென்றால், கட்சிக்கு நல்லதாக ஒரு பெயர் வைத்திருக்க மாட்டாரா? இந்தி பேசாத, இந்தி புரியாத மக்களிடமும் பழகக்கூடிய அளவுக்கு ஒரு பெயர் தேர்ந்தெடுத்திருக்க மாட்டாரா? 'ஆம் ஆத்மி' உட்பொருள் சரிதான். எங்கும் செல்லுபடியாகும்படியான பெயர் வைத்திருக்க வேண்டாமோ?

அது போகட்டும் ஒரு கண்ணியமான சின்னத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சாமானியனின் புத்திசாலித்தனம் கூட இல்லாமற் போயிற்றே.கடற்கரையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவனிடம் ஒருவர் கேட்டாராம்: 'திடீரென்று உனக்கு லாட்டரியில் ஒரு கார் பரிசாகக் கிடைத்தால் என்ன செய்வாய்?' பிச்சைக்காரன் பதில் சொன்னான். 'காரில் போய் பிச்சை கேட்பேன்!' காரை விற்றுக் காசாக்கி ஒரு சிறு வியாபாரம் துவங்கி, கவுரவமாக வாழ்வேன் என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட பிச்சைக்காரனாக, பதவி கிடைத்தும், ஆர்ப்பாட்டக் காரராகவே இருந்தார் கெஜ்ரிவால். அரசியல் சாசனப்படிப் பதவி ஏற்ற பிறகுசட்டத்தை மீறி சண்டித்தனம் செய்தால், அதற்காகவே ஜெயிலுக்குப் போக வேண்டியவராகிறார். அவரது சகாக்களும் ஒரு கோமாளியின் கூட்டாளிகளாகவே நடந்து கொண்டனரே ஒழிய, அமைச்சர் என்ற பதவிப் பொறுப்பின் கன்னியத்தைக் காக்கவில்லை.

ஒரு கட்டத்தில் தான் செய்தது கோமாளித்தனம் என்பது கெஜ்ரிவாலுக்கே புரிந்தது. நிர்வாகத்தை நடத்த முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி பதவி விலகுவது அகவுரவம் என்பதால், எல்லாவிதமான சட்டபூர்வமான அமைப்புகளையும் விமர்சனம் செய்தார், உதாசீனப்படுத்தினார்.'ஜன் லோக்பால்' மசோதாவுக்குத் கவர்னரின் ஒப்புதல் முதல் கட்டத்திலேயே தேவைப்படும் என்ற சட்ட நுணுக்கத்தை அவரிடம் யாரும் கூறியிருக்க மாட்டார்கள் என்று நினைப்பதற்கு இடமில்லை. இருந்தும் வேண்டுமென்றே இந்த விதிமீறலைச் செய்து, தான் ஏதோ லட்சியத்திற்காக வெளியேறியது போல் நாடகம் போட்டுள்ளார். வேண்டுமென்றே ஒரு சாசனக் குருடாக நடந்து கொண்டார். நிஜமாகவே ஆட்சி நடத்த விரும்பியிருந்தால், மைனாரிட்டி அரசையும் முறைப்படிச் செயல்படும் அரசாகவே நடத்தியிருக்கலாம்.

ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் தயவை நாடிய போதே இவர் சந்தர்ப்பவாதி, ஊழலுக்கு எதிரானவர் அல்ல என்பது மக்களுக்குப் புரிந்து போயிற்று. சரி ஒரு சாணக்கிய உத்தியாகக் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தார். ஆட்சி அமைத்தவுடன் முந்திய காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களை ஆதாரங்களுடன் நிரூபித்தார். ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தார் என்றிருந்தால், மக்களுக்கு அவர் மீது அனுதாபம் பிறந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. கை தட்டி அவரைப் பதவியில் அமர்த்திய அதே டில்லி மக்கள் இன்று கைகொட்டிச் சிரிக்கின்றனர். ஏனென்றால், இவர் நடத்தியது சர்க்கார் அல்ல, சர்க்கஸ். மக்களைக் கேட்டே எல்லாவற்றையும் செய்வேன் என்றவர், மக்களைக் கேட்டே பதவியேற்றவர், மக்களைக் கேட்டுப் பதவி விலகவில்லையே. விளம்பரங்களே வியாபாரமாகி விடாது.

ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற சட்டச் சிக்கல் ஏதேனும் இருந்தால் அதைச் சரி செய்து மீண்டும் தாக்கல் செய்திருக்கலாமே. பா.ஜ., அதைத் தானே கூறியது. கவர்னரின் ஒப்புதல் பற்றிய தாவா இருந்தால், அதை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்து கூறலாமே. சண்டை போடுவதென்றாலும் அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. கெஜ்ரிவால் சத்தம் போட்டார், சண்டை போடவில்லை.டில்லியில் பதவியேற்ற உடனே, 'பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவோம், அறுதிப் பெரும்பான்மை பெறுவோம், ஆட்சி அமைப்போம்' என்ற உரக்கக் கூவினரே ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள். அறையில் ஆடிய போதே காலொடிந்து விழுந்த கெஜ்ரிவால் அம்பலத்தில் ஆடமுடியுமா? ஏன், 28ஐ தேர்ந்தெடுத்தோம் என்று சங்கடப்படும் மக்கள், இனி, 280ஐ தேர்ந்தெடுப்பார்களா?விளம்பரக் கூச்சல், தற்பெருமை, நடைமுறைகள் மீது கவனமின்மை, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையின்மை, அனுபவமின்மை போன்ற பல காரணங்களினாலே, ஆம் ஆத்மி ஆட்சி கவிழ்ந்தது. டில்லியில் மறுதேர்தலில் அந்தக் கட்சி குறைவான இடங்களையே பெறும். ஆம் ஆத்மியின் கூத்து, பா.ஜ., ஜெயிப்பதற்கு உதவும்.
email:hindunatarajanhotmail.com

ஆர்.நடராஜன்
கட்டுரையாளர் அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (10)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement