Advertisement

கரன்சி, கறுப்பு பணம், 'கவர்ன்மென்ட்': எஸ்.ராமசுப்பிரமணியன்

கடந்த, 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள், அவற்றை ஏப்ரல் 14க்குள், அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என, முதலில் அறிவித்தது. இரண்டே நாட்களில் ஒரு சூப்பர், 'குட்டிக்கரணம்' அடித்து, ஜூலை 1ம் தேதிக்குப் பிறகும், பொதுமக்கள், அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைகள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளும், வழக்கம் போல செல்லுபடியாகும் என்று அறிவித்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. லோக்சபாவுக்கான பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளிடமும், அரசியல் கட்சிகளிடமும், உறங்கிக் கொண்டிருக்கும் நோட்டுகள் அப்போது தான், உறக்கம் கலைந்து கண் விழித்து, பொதுமக்களின் கரங்களில் 'தவழ'த் துவங்கும்.ஏப்ரல் 2014 கெடுவை, ரிசர்வ் வங்கி அமலாக்க முயன்றால், பொதுமக்கள் அச்சிடப்பட்ட ஆண்டு இல்லாத நோட்டுகளை வாங்கியவுடன், 'செல்லாத நோட்டை கொடுத்து, யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? உங்களுக்கு கண்டிப்பா ஓட்டுக் கிடையாது. போங்கடா... நீங்களும் உங்க நோட்டும்' என்று கூறி, நோட்டுகளை கொடுத்த அரசியல் கட்சிகளின் முகத்திலேயே வீசி எறியும் அபாயமும் உள்ளது. அதனால் தான், ஏப்ரல் மாத கெடுவை, நைசாக, ரிசர்வ் வங்கி, ஜூலை மற்றும் அதற்கு பிறகும் என்று, காலக்கெடுவை நீட்டித்துஉள்ளது.

இங்கே நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசு வேறு, ரிசர்வ் வங்கி வேறு அல்ல. இரண்டும் ஒன்று தான். எப்படி சி.பி.ஐ., தேர்தல் கமிஷன் போன்றவை, சுதந்திரமான அமைப்புகள் என்று கூறப்பட்டாலும், அவை மத்திய அரசின் ஒரு அங்கமே. மத்திய அரசின் 'டியூனு'க்கு தக்கவாறு தான் அவை, 'டான்ஸ்' ஆடும்.கடந்த 2005ம் ஆண்டுக்கு, முந்தைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், காந்தி படமும், அச்சிடப்பட்ட ஆண்டும் இருக்காது. எனவே, அவைகளை அரசு, 'வாபஸ்' பெற விரும்புகிறது என்று ஒரு காரணமும், நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரவே என்று, ஒரு காரணமும் கூறப்படுகிறது. நாட்டில் உள்ள பொதுமக்களில், 90 சதவீதம் மக்களிடம் 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட, காந்தி முகமும், ஆண்டும் இல்லாத நோட்டுகள் சத்தியமாக இருக்கவே இருக்காது.

அப்படியென்றால், அவை யாரிடம் இருக்கும்? சந்தேகமே இல்லாமல், அவை அரசியல் கட்சிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் தான் இருக்கும். எனவே, ரிசர்வ் வங்கி (மத்திய அரசு)யின் அறிவிப்பை கேட்டு, அஞ்ச வேண்டியவர்கள் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தானே தவிர, பொதுமக்கள் அல்ல.அரிய தபால் தலைகள் சேகரிப்பவர்கள் மாதிரி, நாணயங்களையும், நோட்டுகளையும் சேகரிப்பவர்களிடம் வேண்டுமானால், அதுபோன்ற நோட்டுகள் இருக்கலாம். அவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், அவற்றின் மதிப்பு, சேகரிப்பவர்களிடையே கூடுமேயன்றி குறையாது. சுவிஸ் வங்கிகளில் குவித்து (பதுக்கி) வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, ஆட்சிக்கு வந்ததும், ஆறே மாதத்தில் திரும்பக் கொண்டு வருவோம் என்று, 2009 லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக (பா.ஜ.,வுக்கு போட்டியாக) அறிவித்தது.நான்கே முக்கால் ஆண்டுகள் ஓடி விட்டன. அந்த கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, காங்கிரஸ் அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவேயில்லை.இடைப்பட்ட காலத்தில் அந்த சுவிஸ் வங்கிகளில், முதலீடு செய்திருந்த இந்திய கறுப்புப் பண முதலைகள், அவற்றை நைசாக அங்கிருந்து கிளப்பி, வேறு நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி விட்டன.

இத்தனைக்கும் சுவிஸ் அரசு, அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருந்தவர்களின் பெயர்களையும், முதலீடு செய்திருந்த தொகையையும் கூட மத்திய அரசுக்கு கொடுத்து விட்டது. விவசாயக் கடன் வாங்கி, கட்டாத விவசாயிகள் வீடுகளை ஜப்தி செய்து, உழவுக் கருவிகளையும், காளை மாடுகளையும் கைப்பற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விஜய் மல்லையா போன்றோர், வாங்கும் லட்சக்கணக்கான கோடி கடன்களை, சந்தடியில்லாமல், 'தள்ளுபடி' செய்கின்றனவோ, அதுபோல, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும், கறுப்புப் பணம் குறித்து அரசு மூச்சு விடுவதில்லை. ரகசியம் காக்கிறது.இப்போது, உள்ளூரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரவே, இந்த, 'செல்லாத நோட்டு' அறிவிப்பாம்.இந்திரா காலத்திலேயே 'தோல்வி'யடைந்து, 'மண்ணை'க் கவ்விய திட்டம் இது.

இந்திரா காலத்தில் இத்திட்டம், வேறு ஒரு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.அஞ்சலகங்களில், 'தேசிய சேமிப்புப் பத்திரம்' என்ற பெயரில், ஒரு பத்திரம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அந்த பத்திரத்தை வாங்க, பெயர், விலாசம், நாமினேஷன், லொட்டு, லொசுக்கு போன்ற பல விவரங்கள் தேவையாக இருந்தன. தவிர, அப்பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, வருமான வரிச் சட்டம், 80டியின் படி வருமான வரி விலக்கு, 20 சதவீதம் உண்டு. மாத சம்பளக்காரர்கள் வருமான வரிச் சலுகைக்காக, தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். இதில் ரகசியம் கிடையாது. பத்திரம் வாங்க விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும். விலாசம் எழுத வேண்டும். கையெழுத்துப் போட வேண்டும் என்று, 108 சடங்கு சம்பிரதாயங்கள் உண்டு.

இந்த நிலையில் தான், உள்நாட்டுக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, இந்திரா பெயரிலேயே (கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசின் திட்டங்களை தங்கள் தங்கள் பெயரிட்டுக் கொள்ள, இந்திரா காந்தியின் இத்திட்டம் ஒரு முன்னோடி என்றும் சொல்லாம்)'இந்தர விகாஸ் பத்திரம்' என்ற பெயரில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தில் முதலீடு செய்ய மனுவோ, விலாசமோ, வாங்குபவர் கையெழுத்தோ, ஒரு புண்ணாக்கும் தேவையில்லை. 'கையில காசு; வாயில தோசை' என்கிற கதையாக, பணம் கொடுத்தால் பத்திரம், அந்தப் பணம் ஐந்தே ஆண்டுகளில், இரண்டு மடங்காக திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை கையில் வைத்திருந்தவர்களும், பெட்டியில், பீரோவில் தூங்கிக் கொண்டிருக்கும் பணம், ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகிறதே என்ற நப்பாசையில், மெதுவாக அதிலிருந்து, ஒரு 2,500 ரூபாயை எடுத்து வந்து, ஒரு, 5,000 ரூபாய் பத்திரத்தை வாங்கினர்; வாங்கிய பின் திகைத்தனர்.ஆம்! ரூபாயைக் கொடுத்து வாங்கிய பத்திரத்தை திருப்பினால், அதில் முதலீட்டை திரும்பப் பெறும்போது, கையெழுத்துப் போட்டு, விலாசம் எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள், 'உஷார்' ஆயினர். ஆஹா! அரசு பொறி வைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நம்மை, 'தாளிக்க'ப் போகிறது என்று உணர்ந்தனர். நைசாக நழுவிப் பின் வாங்கினர். அரசின் திட்டம் அம்போ ஆனது. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர முயன்றது, 'அம்பேல்' ஆனது.

இதனிடையே, சில அஞ்சலக அலுவலர்கள், 1,000 ரூபாய் பத்திரத்தை, 1,000 ரூபாய்க்கு விற்ற கொடுமையும் நடந்தது. சில அறிவு ஜீவிகள், போலிப் பத்திரம் தயாரித்து, அரசை (அஞ்சலகத்தை) மோசடி செய்த அவலமும் அரங்கேறியது. ஆக, கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர, இந்திரா தீட்டிய, 'இந்தர விகாஸ் பத்திரம்' திட்டமும் வெற்றிகரமாக தோல்வியை தழுவியது. இப்போது சில ஆண்டுகளுக்கு முன் அஞ்சல் துறை, அத்திட்டத்தையே நிறுத்திக் கொண்டு விட்டது.கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டு மென்பது தான் அரசின், அதாவது ரிசர்வ் வங்கியின் நிஜமான நோக்கம் என்றால், மார்ச் 31, 2014க்கு பிறகு 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.அறிவிக்குமா? அறிவிக்காது. ஏன்? அப்புறம் தேர்தல் நிதியை காங்கிரஸ் கட்சி யாரிடம் சென்று கேட்கும்?
போன் நம்பர்: 98407 19043

- எஸ்.ராமசுப்பிரமணியன் -எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement