Advertisement

கலைத்து விடுங்கள் காங்கிரஸ் கட்சியை...!- வி.கோபாலன்,வங்கி அதிகாரி (பணிநிறைவு)

கடந்த, 1947 ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தேசபிதா காந்திஜி, அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கு, ஒரு யோசனை கூறினார்.'காங்கிரஸ் துவக்கப்பட்டதன் நோக்கம், இந்திய சுதந்திரம். இதற்கான போராட்டத்தில், காங்கிரஸ் தன்னை பூரணமாக ஈடுபடுத்தி, பல சோதனைகளுக்கும், இடர்பாடுகளுக்கும் பிறகு, பிரிட்டிஷ் அரசிடம்இருந்து சுதந்திரம் பெற்றது. நாடு சுதந்திரம் பெற்றதனால் நோக்கம் நிறைவேறி விட்டது. இனி, கட்சியை கலைத்து விட வேண்டும். கட்சி தலைவர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் பரிசீலித்து, சீக்கிரமே ஒரு முடிவு எடுக்க வேண்டும்...' என்றார்.

பிற்காலத்தில் காங்., தலைவர்கள், சுதந்திர போராட்டத்தில், காங்., கட்சியின் செயல்பாட்டை நினைவுபடுத்தி, அதன் பெருமையை எடுத்துரைத்து, அந்தக் காரணத்தால், காங்., கட்சிக்கு மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கக் கூடும். இது தவறு. தடுக்கப்பட வேண்டும், என்று காந்திஜி நினைத்து, தன் யோசனையை தெரிவித்து இருக்கக் கூடும்.அன்றைய காங்., தலைவர்கள், காந்திஜியின் இந்த யோசனையை ஏற்கவில்லை. காங்., கட்சியை கலைக்க, அவர்கள் சம்மதிக்கவில்லை. தேர்தல் களத்தில் காங்கிரஸ் குதித்தது. கடந்த, 1950, ஜன., 26ம் தேதி, இந்தியா, குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய தினத்தில்இருந்து, இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த அரசியல் சட்டத்தின்படி, மத்தியில் பார்லிமென்டும், மாநிலங்களில் சட்டசபைகளும், அமைக்கப்பட்டன. அவற்றிற்காக தேர்தல்கள் நடத்தவும் வகை செய்யப்பட்டது.நம் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மேற்சொன்ன தேர்தல்களின் போது, காங்., கட்சி, அதன் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் படி, மக்களை அணுகியது.

அதன் சாதனையாக, சுதந்திர போராட்டத்தில் அதன் பங்கையும், நேரு குடும்பத்தினர் இதற்காக செய்த தியாகங்களையும், பெரிதாக எடுத்துச் சொல்லி, வாக்காளர்களை கவர்ந்தது. சுதந்திரம் அடைந்து, 30 ஆண்டு காலம், காங்., கட்சி மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி, கோலோச்சி வந்தது. இந்த கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த காங்., கட்சியினுள் அதிகார போதை, கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கியது. இதைத் தொடர்ந்து, ஊழலும் சிறிது சிறிதாக ஆட்சியில் பிரவேசித்தது.சுதந்திர போராட்டத்தின் போது, காங்., கட்சியில் இருந்த தலைவர்கள், அப்பழுக்கற்ற தேசிய வாதிகள். சுதந்திர வேள்வியில் அவர்கள் குதித்த போது, நாட்டிற்கே தங்களது சொத்து சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்தனர்; தங்களது குடும்பத்தையும் மறந்தனர்.அப்பேர்ப்பட்ட தலைவர்களின் தியாகத்தால், நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டில் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி நடைபெற்றது. அப்போதைய திறமை வாய்ந்த தலைவர்களில் (ஆட்சியாளர்கள்) முக்கியமாக குறிப்பிடத்தக்கவர் சர்தார் வல்லபாய் படேல். அவர் முயற்சியா லும், சாதுர்யத்தாலும் தான், இந்தியா வில் இருந்த, 500க்கும் மேற்பட்ட சிற்றரசர்கள், தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை, இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்தனர்.

நேரு காலத்தில் தான், இந்திய- - ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்தியாவின் ஆபத்பாந்தவனாக ரஷ்யா இருந்தது. அதே மாதிரி மற்ற தலைவர்களும், முக்கியமாக, அபுல் கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத், இவர்கள் சிறப்பாக தொண்டாற்றினர். இந்தியா பல துறைகளில் முன்னேறத் துவங்கியது.ஆனால், இந்தத் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு, அடுத்த தலைமுறை அதற்கு அடுத்த தலைமுறை என்று பதவி வகித்தவர்கள், நேர்மை பாதையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, பதவியையே குறிக்கோளாக வைத்து, நிர்வாகத்தில் ஊழலுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில், சிறிய அளவில் இருந்த இந்த ஊழல், கொஞ்சம் கொஞ்சமாக பெருக ஆரம்பித்தது.தேர்தல் வரும் போதெல்லாம், அப்போது இருந்த காங்., தலைவர்கள், காங்கிரசின் சுதந்திர போராட்டத்தின் சாதனையையும், நேரு குடும்பத்தின் தியாகத்தையும் திரும்பத் திரும்ப சொல்லியே, ஓட்டு வேட்டையாடத் துவங்கினர். ஆனால், காலப் போக்கில் மக்கள், இவர்களின் உண்மை சொரூபத்தை தெரிந்து, அவர்களுக்கு ஓட்டளிப்பதை தவிர்த்தனர். இதன் விளைவு, மத்தியில், 30 ஆண்டுகள் தொடர்ந்து, ஆட்சியில் இருந்த காங்., பதவி இழக்க நேரிட்டது.

புதிதாக தோன்றிய பல மாநில கட்சிகள், ஆட்சியை கைப்பற்றின. இருந்தாலும், இன்றும் இந்தியாவில் காங்., கட்சி, ஒரு பலமுள்ள தனி கட்சியாக விளங்குகிறது. அதேசமயம், அந்தக் கட்சி ஆட்சியில் செய்த பல ஊழல்களை மறைக்க, முயற்சி செய்கிறது.காங்கிரஸ், இனியும் தன் பழைய பெருமையை சொல்லி, மக்களை ஏமாற்ற முடியாது. சுதந்திர போராட்டத்தின் போதும், சுதந்திரம் பெற்று, சில ஆண்டுகள் வரையிலும் இருந்த காங்கிரஸ் வேறு, இன்றைய காங்கிரஸ் வேறு.இதை மனதில் நிறுத்தி, இன்றைய காங்., தலைவர்கள், முக்கியமாக சோனியா, அன்றைய தினம் காந்திஜி, சொன்ன யோசனையை ஏற்று, காங்கிரசை கலைத்து விட வேண்டும். வேறு பெயரில் புதியதாக, ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். சோனியா பிறவியில் இத்தாலி நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், இன்று ஒரு முழு இந்தியர். அதனால், ஒரு புது அரசியல் கட்சியை இந்தியாவில் ஆரம்பிக்க, எல்லாத் தகுதியும் பெற்றவர்.காங்., கட்சியே ஒரு வெள்ளைக்காரரால் ஆரம்பிக்கப்பட்டது தானே. அந்த முடிவை அவர் எடுப்பாரானால், இந்தியாவில் ஜனநாயகம் செழித்து வளர. ஒரு சிறந்த சேவை செய்தவராவார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement