Advertisement

உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன்

"எண்ணற்ற வாசக இதயங்களை உடையார்; சோழ தேசத்தின் மீது காதல் உடையார்; காவிரியின் மீது காமம் உடையார்'' என்றெல்லாம் "உடையார்' நாவல் மீது பித்து கொண்டு, உடையார் புனைந்தவரை வர்ணிக்கிறார்களே... அப்படி அதில் என்ன இருக்கிறது? என, மனதிற்குள் ஒரு ஆர்வம்! 2733 பக்கங்கள் கொண்ட ஆறு பாகங்களை, துளியும் சோர்வுறாமல் வாசித்து முடித்தபோது, ஒருவிதமான கிளர்ச்சி! மனம் முழுக்க திருப்தியடையாத நிலை! அந்த காவிய ஊற்றில் இருந்து, இன்னும் பருக வேண்டும் என்ற சபலம்! அந்தநொடியிலேயே... "உடையார்' எழுத்துக்கு உடையார் பாலகுமாரனை சந்திப்பது என முடிவெடுத்தோம்! சந்தித்தோம். வெண்தாடியை மென்மையாய் கோதியபடியே, சோழதேசத்திற்குள் ஆரவாரமாய் பயணப்பட்டார்.
* உடையாருக்கான அச்சாரம்?


நான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்ச நேரம். என் சித்தப்பா கூட, முதன்முறையா தஞ்சை கோவிலுக்குப் போறேன். "இது உனக்கு பரிச்சயமான இடம்தான்'ன்னு, மனசு சொல்லுது! "இங்கே சிவலிங்கம் இப்படித்தான் இருக்கும்'னு நினைக்கிறேன். அப்படியே இருக்குது. "அர்ச்சகர் இப்படி இருப்பார்'னு நம்புறேன். அவரும் அப்படியே இருக்கிறார். நிறைய பேர்கிட்டே விசாரிச்சேன். யாருக்கும் ஒண்ணும் தெரியலை. "இவ்ளோ பெரிய கோவில்! ஆனா, இதோட வரலாறு யாருக்கும் தெரியலையே'ங்கற வருத்தம் ஏற்பட்டது. கோவிலைச் சுத்தி வரும்போது, "இது ரொம்ப அநாதையா இருக்கு. இந்த கோவில் இப்படி இருக்கக்கூடாது'ன்னு அழுதேன்! ஆனா, அந்தசமயத்துல கூட, இந்த கோவிலைப்பத்தி எழுதணும். இதை நாவலாக்கணும்னு எனக்கு தோணவேயில்லை. ஆனா, தினமும் யோசிச்சேன். இதை எப்படி கட்டியிருப்பான்?ன்னு யோசிச்சேன். கல்வெட்டுக்களை தேடிப் படிக்கணும்னு முடிவு பண்ணுனேன்.


* உங்கள் தேடலுக்கான விடைகளை கல்வெட்டுகள் தந்தனவா?


என் 27 வயசுலதான், முதல் கல்வெட்டு படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. "நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்'ங்கற ஒரு கல்வெட்டை, கையில புத்தகம் வைச்சுக்கிட்டு தடவித் தடவி படிச்சு முடிச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படி, பல கல்வெட்டுக்களை படிச்சேன். அதுமூலமாத்தான் ராஜராஜனை விட, கிருஷ்ணன்ராமன் என்னை அதிகமாக ஈர்த்தான்.


* கிருஷ்ணன்ராமன் யார்?


அவன்...பிரம்மராயன். ராஜராஜனோட சேனாதிபதி. ஒரு பிராமணன் எப்படி சேனாதிபதியா இருந்திருக்க முடியும்?ன்னு, எனக்குள்ளே ஒரு ஆச்சர்யம்! அவனது சொந்த ஊரான அமண்குடியை தேடிப் போனேன். அங்கே, அற்புதமான காளி கோவில் இருக்கு. அது, அவன் கட்டின கோவில். அந்த கோவிலை நான் ரசிச்சுட்டு இருந்தப்போ, 90 வயசு கிழவர் ஒருத்தர் அப்படியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தார். "இத்தனை நாளாச்சா வர்றதுக்கு?'' அவர் கேட்டவுடனே, ஒரு நிமிஷம் எனக்கு வயிறு கலங்கிடுச்சு. அந்த கிழவர் அப்படியே நடந்து, கருங்கல் சுவத்துக்குள்ளே புகுந்து போயிட்டார். அந்த நிமிஷத்துலதான்...சோழனைப் பத்தி எழுதணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும்கூட, "கிருஷ்ணன்ராமன் இல்லையெனில் ராஜராஜன் இல்லை'ன்னு, என் மனசுக்கு உறுதியா தோணுச்சு! அவனைப் பத்தின தகவல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்.


* "பஞ்சவன்மாதேவி இல்லையென்றால் ராஜராஜன் இல்லை' எனும் உணர்வுதான், "உடையார்' வாசிக்கையில் வருகிறது. அப்படியிருக்கையில்... கிருஷ்ணன்ராமன்?


"பஞ்சவன்மாதேவி, ராஜராஜனோட துணைவி. ஆனால், அவள் எப்படிப்பட்டவளாக இருந்திருந்தால், ராஜராஜனின் மகன் ராஜேந்திரன், தன் தாய் அல்லாத அவளுக்கு பள்ளிப்படை கோவில் எழுப்பியிருப்பான்? இந்த அடிப்படையில் அவளும் முக்கியம்தான்!


* சோழதேசம் மீது ஏன் இந்த பாசம்?
உண்மைதான். அதுக்கு காரணம் இருக்கு. கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுன தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான் ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்த கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழ தேசத்தின் மீது எனக்கு காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களை தேட ஆரம்பிச்சேன். சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவு பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறது காதல் அல்ல...வெறி!


*"உடையார்' படைக்க ஏன் இத்தனை தாமதம்?


அது...ஒரு எழுத்தாளனுக்கு உள்ளே நிரம்பணும். எனக்குள்ள நிரம்புனது போதுமானதா எனக்குத் தெரியலை. ஒவ்வொரு தடவை தகவல்களை தேடி போற போதும், புதுசு புதுசா கிடைக்குதே! அப்புறம் எப்போ நிரம்புறது? ஆனாலும், ராஜராஜனைப் பத்தி சேர்த்து வைச்சதை, மனப்பாடம் பண்ணினதை எதுலேயாவது பதிவு பண்ணிடனும்னு ஆசைப்பட்டேன்.


* "உடையார்' நாவலை பொறுத்தவரை, எது வரலாறு? எது கதை?


உடையாரை பொறுத்தவரைக்கும், முதல் வரியிலேயே கதையும் துவங்குது. வரலாறும் துவங்குது. அது அப்படித்தான்! ராஜேந்திர சோழனுக்காக, கங்கை கரை வரைக்கும் போயிட்டு வந்திருக்கேன். ராஜராஜன் மரணச்செய்தி எழுதுறப்போ, குலுங்கி குலுங்கி அழுதிருக்கேன். உடையார் வெறும் நாவல் இல்லை. தமிழகத்தினுடைய வரலாற்றுப் பதிவும் இல்லை. கடவுள் நூல்! ராஜராஜனின் உள்மன அலசல்! இதை... யாருமே மக்களுக்கு சொல்லலை! நான் " உடையார்' மூலம் சொல்லியிருக்கிறேன்!''


* அப்புறம்...?


தொண்டை மண்டலத்தை பத்தி எழுதணும்னு ஆசை. என் குரு யோகிராம் சுரத்குமார் அருளால, அது நிச்சயம் நடக்கும்.

------------------


உடையார் - 6 பாகங்கள் - ரூ 1615


விசா பப்ளிகேஷன்ஸ்


044-2434 2899

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • Indhean - Chennai,இந்தியா

  நாம் நம்மை முன்னிலை படுத்தும்போது நான் அறிவாளி என்று மற்றவர்கள் உணரவேண்டும் என்ற நோக்கம் அதனுள்ளே இருக்கும். அப்படி சொல்லும்போது சொல்லவந்த விஷயங்கள் நல்லவை ஆக இருந்தாலும், கூட வரும் நோக்கம் மேலோங்கி விடுவதால் சாரம் தொலைந்துபோகிறது. அதே சமயம், நான் அறிவாளி என்று சொல்ல மற்றவர்கள் முட்டாள்கள் என்று சொல்லும்போது இன்னும் நாம் தாழ்த்து போகிறோம். நமது நோக்கம் சொல்ல வந்த கருத்தை நெறி பிறழாமல் சொல்ல முயற்சிப்போம். அது பாலகுமாரன் போன்ற மிக பெரிய எழுத்தாளர்களுக்கு உதவினால், அவரின் அடுத்த படைப்புகளில் அது புலப்படும். அது நம் வருங்கால சந்ததிகளுக்கு பயனுறும். நன்றி.

 • Indhean - Chennai,இந்தியா

  நீங்களும் நானும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை பாலகுமாரன் செய்திருக்கிறார். அதற்காக அவரை சிரம் தாழ்த்தி வணங்குவோம். நமது மிக சிறந்த வரலாறுகள் அதன் பலம் தெரியாமல் கூலாகி பாலகிபோனவை பல பெரிய மனித ரகசியங்கள். 16 ஆம் நூற்றாண்டில் சைகாலஜி பற்றி உலக நடப்புகள் ஆரம்பம் ஆனதாக சொல்கிறார்கள். மனிதனின் நடத்தைகளையும் அதற்க்கான காரணங்களையும் 18 நூற்றாண்டில் அமெரிக்கர்களும், கேர்மநியர்களும் கண்டுபிடித்ததாக இன்று நாம் படிக்கும் நூல்கள் உரிமை கொண்டாடுகிறது. ஆனால் நம் வள்ளுவன் மனித நெறிமுறைகளை நெறிபடுத்த 1330 குரல்களை அதற்க்கு முன்பே கொடுத்துவிட்டான். அப்படி இருக்க எப்படி ஒரு தவறான வரலாறு நிலைகொண்டுள்ளது. அதை நாமும் படிக்கிறோம், அதுபோன்ற தவறான வரலாறுகளை நாம் படிக்க வேண்டியுள்ளது இதுபோன்ற எழுத்தாளர்கள் நம் வரலாற்றை திருத்த முன்வரும்போது, அவரை பாராட்டி வரவேற்போம். அதே சமயம் மாற்று கருத்து இருந்தால், அதை அந்த எழுத்தின்மீது சொல்வோம். எழுதியவர்மீது அல்ல. அப்படி சொல்லும்போது, அந்த செய்திகளில் சாரம் இருந்தால் அது வரவேற்க்கப்படும், மாற்றங்கள் எழிதாகி விடும். எனவே நாம் புண்படாமல் கருத்து கூறி, ஆசிரியரை ஊக்கப்படுத்தி நன்றிசொல்வோம். நீங்களும் நானும் ஒரே மாதிரி இருந்தால், எப்படி இருவராய் இருக்கமுடியும். அது போலதான், நமக்குள் கருத்து வித்தியாசங்கள் வரலாம், அனால் வேற்றுமை அல்ல. ஊக்கப்படுத்துவோம், உருதிபெருவோம், நிலைபெருவோம். அனைவரின் கருத்தும் சரியே, சொல்லும் விதம்தான் மாறுபடுகிறது.

 • Jayaraman Sekar - Bangalore,இந்தியா

  எந்த படைப்பிலும் படைப்பாளி தெரிய கூடாது . பொன்னியின் செல்வன் படிக்கும் பொது எங்கேயுமே கல்கி தெரிய மாட்டார். இவர் கொஞ்சம் உணர்ச்சி களை தூண்டும் போது அபின் கலந்த பாலகுமாரனின் எழுத்துகள் தெரிந்கின்றன. உயர்ந்த முயற்சி .கொஞ்சம் சுய கர்வம் தெரிகின்றது அவர் பேச்சில் . இவை எல்லாம் கல்கியின் பேச்சிலோ பல வரலாற்று புதினம் படைத்த சாண்டில்யன் அவர்களிடமோ இருந்தது இல்லை .

 • Sathish Kumar S - Bangalore,இந்தியா

  ஒரு கலைஞனுக்கு சிறிதளவேனும் கர்வம் வேண்டும் . அப்பொழுது தான் அவன் படைப்பில் ஒரு உன்னதம் இருக்க முடியும் என்பது என்னது கருத்து . இளையராஜாவை பற்றியும் இப்படி தான் சொல்லுகிறார்கள். ஒரு எழுத்தாளனின் படைப்பை பற்றி மட்டும் பேசுங்கள் . அவரை பற்றி குறை கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . உடையார் ஒரு அற்புதமான படைப்பு. மனித உணர்வுகளை தொட்டு பார்க்கும் எழுத்துக்களை கொண்ட ஒரு உன்னதம்.

 • VinothB - Tamil Nadu,இந்தியா

  நன்றி Mr "so.annamalai" Vishnu வுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள் ... சோழ மன்னர்கள் தாங்கள் கட்டும் கோயில்களில் மூல கோபுரத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ராஜ கோபுரத்தை சிறியதாகவே அமைப்பார்கள். ஆனால் மற்ற மன்னர்கள் அப்படி அல்ல. ராஜ கோபுரத்தை பெரியதாக அமைத்து தாங்கள் கடவுளை விட பெரியவர்களாக காட்டி கொள்வார்கள்... இதிலிருந்தே சோழர்களின் உயர்வை நாம் உணரலாம்.

 • K.vijayaragavan - chennai,இந்தியா

  பாலகுமாரனிடம் ஜனரஞ்சகமான எழுத்து நடை உள்ளது. இடையிடையே சில நல்ல தகவல்களும் அவரது எழுத்துகளில் காணக்கிடைக்கும். உடையார் அக்கால சோழர் நாகரீகத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், எழுத்தாளராக இருந்தாலும், யாராக இருந்தாலும் தன்னைப்பற்றியோ தன் செயலைபற்றியோ தானே வியந்து கொள்ளக்கூடாது. தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றி கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய பல் பொருள் வெஹ்கும் சிறுமையும், இம்மூன்றும் எஞ்சான்றும் இடும்பை தரும். இதை பால குமாரனுக்கு யாராவது எடுத்து சொல்வது நல்லது. அதோடு, ஞான மார்கத்தில் துறை போகியவரை போல் பொது இடங்களில் நடந்து கொள்வது பேசுவது இதெல்லாம் இவரின் அரை வேக்காட்டுத்தனத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உண்மையான ஞானம் ஆரவாரிக்காது. ஆரவாரம் அகங்காரத்தின் அடையாளம். பாலகுமாரனிடம் ஆரவாரம் தான் அதிகமுள்ளது. இதை உணர்ந்து அடக்கத்தை கொள்வது அவருக்கு நல்லது. ஒரு திறமையான எழுத்தாளர் நாலு பேரின் பரிகாசத்துக்கு ஆளாகி விடக்கூ\டாது என்ற அக்கறையில் எழுதுகிறேன். புரிந்துகொண்டு மாற்றிக்கொண்டால் அவருக்கு நல்லது.

 • Raja Kumar Thangarajan - saalmiya,குவைத்

  தஞ்சை கோயிலுக்கு போகும் பொது, இது போன்ட ஒரு படைப்பு யாராவது ,படைப்பார்கள என்டு ஏங்கினேன்,இப்போது மனதுக்கு சந்தோசமாக உள்ளது. இந்த இமாலய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

 • Muba - BADDI, HIMACHAL,இந்தியா

  "உடையார்" வெறும் புதினம் அல்ல, சோழ சரித்திரத்தை - குறிப்பாக ஈராயிரம் ஆண்டு முன்பே தமிழன் தலைநிமிர்ந்து வாழ்ந்ததை - தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் தஞ்சைக் கோபுரம் நமக்கு குறிப்பால் சொல்லும் கதை. எழுத்துச்சித்தர் அவரே சொன்னதுபோல் என் தேசம், என் நதி, என் நிலம் என்ற உணர்வோடு பயணித்து பற்பல செய்திகளை சேகரித்து ஒரு நாவலாக நமக்கு தந்திருக்கிறார். அவருக்கு கோடானு கோடி நன்றி. இன்றைக்கும் தஞ்சை கோவிலிலும், அமண்குடி மற்றும் உள்ளிட்ட சில இடங்களிலும் மாமன்னன் ராஜராஜனும், மதில் எடுத்துவித்த கிருஷ்ணன் ராமனுமான பிரம்மராயரும் உலவிய இடங்களின் அதிர்வுகள் உங்களை நிச்சயம் உணரவைக்கும்.

 • VinothB - Tamil Nadu,இந்தியா

  மாம்பழம் சாப்பிட தோட்டத்திற்கு வந்திருக்கிறாய். அங்கு இருக்கும் மரங்களையும் இலைகளையும் எண்ணிக்கொண்டிருப்பதால் என்ன பயன் என்ற ... பரமஹம்சரின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது ... இதற்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா ... மாலைகள் சுகம் அல்ல சுமைகள் என்று உணர்த்திய குரு நல் வழி காட்டட்டும் ... ஓம்

 • கூடல்நகர் வெ இராசா இராமன் - சென்னை,இந்தியா

  "நான் கொடுத்தனவும், நம் மக்கள் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்" அய்யா பாலகுமாரன் அவர்களே... தங்களின் "உடையார்" புதினத்தை 4 வருடங்களுக்கு முன்னர் நான் படித்தபோது கதறி கதறி அழுதுள்ளேன். இராச இராசன் இந்த கல்வெட்டை படித்து அதனை ஆரத்தழுவினார் என எழுதியிருந்தீர்கள். என் கண்களில் கண்ணீர் கங்கை ஆறாக ஓடியது. மேலும் கருவூர் தேவர், இராச இராசனின் ஆசை கிழத்தி பரத மாமணி, மற்றும் அவர் தம் மகன் இராசேந்திர சோழன் குறித்தும் அறிந்ததொடுமட்டுமல்லாமல் அவர்களுடன் வாழ்ந்தேன் என்பது தான் நிஜம். படித்து முடிக்க 6 நாட்கள் (வேலை நேரம் போக) ஆயின. அந்த 6 நாட்களும் சொர்க்கமையா சொர்க்கம். நீவிர் வாழ்க பல்லாண்டு.

 • nagainalluran - Salem,இந்தியா

  முதலில் இது ஒரு பெரு முயற்சி. பொன்னியின் செல்வன் கதை நடப்புக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம். அதில் பல கற்பனை கதா பாத்திரங்கள், இதில் குறைவே. எனினும் எல்லா பாத்திரங்களுக்கும் அனுக்கி என்று ஒருவரை நியமிப்பது தேவை இல்லை, இது ஆசிரியரின் தவறான மன போக்கு. கதா பாத்திரங்கள் contradictory ஆக செதுக்க பட்டுள்ளனர். உதாரணம் கருவூரார் முக்காலமும் உணர்ந்தவர். அடிக்கடி அவரை ஒரு விஷயத்தை பற்றி எண்ணி கவலையானார் என்று வருகிறது, முக்காலமும் உணர்ந்தவருக்கு எதற்கு கவலை வர வேண்டும். சரியான எண்ண ஓட்டம் அல்ல இது. பல கதா பாத்திரங்களின் அறிமுகம் எதற்கு என்றே புரிபடவில்லை, பிறகு எனன ஆனார்கள் என்றும் தெரியவில்லை, ஓவியன் சீராளன், ராஜா ராஜி போன்ற முக்கியமான கதா பாத்திரங்களை கூறலாம். அவசர அவசரமாக முடிக்கப்பட்டு இருக்கிறது. முடிவும் இழுக்க பட்டு இருக்கிறது என்று சொல்ல தோன்றுகிறது. மேலை சாளுக்கிய யுத்த விவரணை மிக அற்புதம், சிவகாமியின் சபதம் வாதாபி போர் வர்ணனையை விட மிஞ்சியது என்றே சொல்லலாம். ஆசிரியரின் கற்பனைக்கு ஒரு சபாஷ். சமூகத்தின் இணக்க பிணக்க நிலைகள், போரின் பொது ஒன்று சேர்வது போன்ற கற்பனைகள் அபாரம். அந்தணரின் நிலை படி படியாக வேத முறை வாழ்க்கையில் இருந்து பிறழ்ந்து, நாகரிக வருமானம் ஈட்டும் வாழ்க்கை முறைக்கு மாறியதை மிக அழாகாக படம் பிடித்து காட்டியுள்ளார். சில குறைகள் தென் பட்டாலும் முதலில் சொன்ன படியே இது ஒரு பெரு முயற்சி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

 • Sound Saroja - Thangachimadam,இந்தியா

  அருமை, அருமை சகோதரர் வீர நாகராஜ் அவர்களே. பாலகுமாரனின் அடுத்த முகத்தையும் தங்களின் இரு கருத்துகளின் மூலம் நினைவு கூர்ந்துள்ளீர்கள்.

 • Ghiramathan Tamizhan - Dammam,சவுதி அரேபியா

  கல்கியின் பொன்னியின் செல்வனை நினைவு கூர்ந்து இருக்கலாம்

 • vina - cpt,இந்தியா

  அருமை அய்யா, என்றென்றும் உங்களை மறக்காது தமிழ் மண். " தொடரட்டும் உங்கள் பணி "

 • m.s.kumar - chennai,இந்தியா

  பாண்டிய மண்டலம் பற்றி தங்கள் ஏன் எழுதவில்லை ??? தமிழ் வளர்த்த பாண்டிய மண்டலம் தவறு செய்து விட்டதா ???

 • Sathish - Chennai,இந்தியா

  உடையாரை எழுதியது பாலகுமாரன் அல்ல. ஈஸ்வரனும், ராஜராஜனும் பாலகுமாரனின் உள்ளத்துள் இருந்து எழுதியது என்றே படித்தவர்கள் எண்ண தோன்றும். உடையார் பாலகுமாரன் அவர்களின் classical பீஸ்.

 • விழியப்பன் - Caparica,போர்ச்சுகல்

  அருமை ஐய்யா தொடரட்டும் உங்கள் பணி "தோண்ட மண்டலத்தை"யும் தாண்டி

 • Veera Nagaraj - Sydney,ஆஸ்திரேலியா

  ஆவல்..ஆவல்.. தாய் வீடு/நாடு சென்றிருக்கும் துணைவியிடம், ஆசிரியரை நேரில் சென்று பார்த்து, உடையார் அனைத்து பாகங்களையும், கையொப்பமிட்டு பெற்று வர கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. அவர்களின் வரவுக்காக தவமிருக்கிறேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement