Advertisement

மாசில்லா மதுரை; மதுரையின் பசுமை காக்க மாணவர் படை தயார்

மாசில்லாத, தூய்மையான மதுரையை பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. அரசும், மாவட்ட நிர்வாகமும் தூய்மையை வலியுறுத்தி பல திட்டங்களை செயல்படுத்தினாலும், மக்களிடம் முழுமையாக விழிப்புணர்வு ஏற்பட வைப்பது அவசியம். இதற்கு தீர்வாக மதுரை அமெரிக்கன் கல்லூரி பி.காம்., முதலாம் ஆண்டு மாணவர்கள் "ஆட்டிடியூட் மைண்ட் யங் ஜெனரேஷன் கிளப்' என்றஇயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறுகையில், "இந்த இயக்கத்தின் மூலமாக பல சமூக சேவையை செய்துவரும் எங்கள் கல்லூரி மாணவர்கள், நகரில் ஏற்படும் ஒலி மாசு மற்றும் மரம் வளர்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களின் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து அதை இலவசமாக வழங்கி வருகிறோம்,'' என்றார். கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கம் உருவாக காரணமான மாணவர் கவுதம் கூறுகையில், " மாசு எப்படி ஏற்படுகிறது என்று ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். உதாரணமாக ஒரு வீட்டில் 2 கார் இருக்கிறது, அதை தனித் தனியாக ஒருவர் மட்டும் பயன்படுத்தாமல், ஒரு காரை மட்டும் பயன்படுத்தலாம். இதனால் காற்றில் கலக்கும் கார்பன் அளவு குறைந்து, காற்று மாசுபடுவது தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் இரைச்சல் ஒலியையும் கட்டுப்படுத்த முடியும். அவசர காலத்தில் மட்டும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி, மற்ற நேரங்களில் பொது வாகனங்களை பயன்படுத்தலாம். இது தவிர, வீடுகள் கட்டும் போது, மரங்கள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் உருவாக்கிய பசுமை திட்டத்தின் மூலம் மீண்டும் மரம் வளர்த்து அதை முறையாக பராமரித்து அதன் மூலம் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்க முடியும் என்பதை மக்களிடம் எடுத்து கூறி வருகிறோம்,'' என்றார்.

சுற்றுச்சுழல் மாசு ஏற்படுத்தும் "பிளக்ஸ்' போர்டுகள்:மதுரை என்றாலே எங்கு திரும்பினும் "பிளக்ஸ்' போர்டுகள் தான்! இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து என்கிறார் மதுரை காமராஜ் பல்கலை சுற்றுச்சூழல் துறை தலைவர் முனைவர் முத்துச்செழியன். அவர் கூறியதாவது:
"பிளக்ஸ்' தயாரிக்க பயன்படும் "பாலிவினைல் குளோரைடு" ஆயிரக்கணக்கான மூலக்கூறு கலவைகள் சேர்ந்தவை. இதை தயாரிக்க "வினைல் குளோரைடு, மோனோமெர், எத்திலின் டை குளோரைடு, பாதரசம் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் "பிளக்ஸை" எரித்தாலோ அல்லது வேறு வகையில் அழித்தாலோ, இவற்றிலிருந்து வெளியாகும் "குளோரினேட்டட் டை ஆக்ஸின்' வளி மண்டலத்தில் புகுந்து, உணவுச்சங்கிலியை முற்றிலும் அழிக்கும். இதை எரிக்கும் போது வெளிப்படும் ரசாயனத் துகள்கள் மூலம், மக்களுக்கு ஆஸ்துமா, தோல், கண் எரிச்சல் ஏற்படும். பிளக்ஸில் எழுதப்பயன்படும் பெயிண்டில் நுரை தரக்கூடிய ரசாயனக்கலவைகள் சேர்க்கப்படுகின்றன. மேலும் பாலிமர்கள் அதிகமாக உபயோகப்படுத்தபடுகின்றன. இவை மண்ணில் கரையக்டியன. கரைந்தால், தாவரம், நுண்ணுயிர்கள், நீர்நிலைகளை பாதித்து நோய்களை ஏற்படுத்தும். முன்பு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட "பயோ' அல்லது "ஆர்கானிக்' பெயிண்ட்களை பயன்படுத்தி,துணி, பேனர், மூங்கில், பனையில் செய்யப்பட்ட பேனர்களை வைத்தனர். அதை பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, "பாலிதீன்' பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது போல, "பிளக்ஸ்' போர்டுகளை பயன்படுத்த மாட்டோம் என அனைவரும் உறுதி அளிக்க வேண்டும், என்றார்.

குப்பைக்கு எதிரான விழிப்புணர்வு: கைகோர்க்கும் கல்லூரி மாணவர்கள்:மதுரை சென்ஸ் தொண்டு நிறுவனம், கல்லூரிகளோடு இணைந்து குப்பைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டத்தை துவக்கியுள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனர் எஸ்.வி.பதி கூறியதாவது:மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டாலும், சமீபத்தில் இணைந்த அனைத்து பகுதிகளிலும் குப்பைகள்
முழுமையாக அள்ளப்படுவதில்லை. மாநகராட்சியில் இணைவதற்கு முன்பாவது, பஞ்சாயத்துகள் மூலம் குப்பைகள் அள்ளப்பட்டன. 5000 வீடுகள் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், தினமும் 5 டன் குப்பைகள் சேர்கின்றன. இதேபோல, 23 குடியிருப்பு பகுதியிலிருந்து தினமும் 100 டன் குப்பைகள், மாநகராட்சிக்கு கொண்டு வரப்படுகின்றன. இது தேவையில்லை. அங்கங்கே உற்பத்தியாகும் குப்பைகளை, அங்கேயே அகற்ற வேண்டும். வெள்ளக்கல் கொண்டு சென்று, குப்பையை தேக்குவதால் பயனில்லை.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். அதற்காக, கல்லூரிகளோடு இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, மதுரை பாத்திமா கல்லூரியில் இதுகுறித்த, விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம். மாணவிகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் சமூகப் பிரச்னைகளையும், அவற்றை தரம்பிரித்தால் கிடைக்கும் லாபத்தையும் விளக்க உள்ளோம். என்னென்ன குப்பைகளை எப்படி பிரிக்கலாம் என்பதை கண்காட்சியாக நடத்துவோம். சமையலறைக் கழிவுகளை வீட்டிலேயே உரமாக்க பயிற்சி தருகிறோம். மற்ற கழிவுகளை பிரித்து அவற்றை விற்றோ, மறுசுழற்சி செய்தோ குப்பையில்லாத சமுதாயமாக மாற்றலாம். மற்ற கல்லூரிகளும் முன்வரலாம், என்றார்.
போன்:82200 13008.

மூலிகை செடிகள்... அழகு தாவரங்கள்; அசத்தும் மாநகராட்சி பள்ளிமதுரையில் பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தால், சிறு குப்பையை கூட பார்க்க முடிவதில்லை. பசுமையை நேசிக்கும் ஆசிரியர்கள், சுற்றுச்சூழலை பாதுகாத்து, மூலிகை செடிகள், அழகு தாவரங்கள், பல வகை மரங்களை... வைத்து, நம்மை
வரவேற்கின்றனர். கூடுதலாக, படிப்பதற்கான அமைதியான சூழலை உருவாக்கி "அசத்தி' வருகிறது, தலைமையாசிரியைகே.கல்யாணி மற்றும் ஆசிரியர்கள் "டீம்' கல்யாணி கூறியதாவது:வளாகத்தில் பிரண்டை, துளசி, தூதுவளை உட்பட 10 வகை மூலிகை செடிகள், லில்லி, கள்ளி, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் செம்பருத்தி, பவள மல்லி, டேபிஸ் ரோஸ், ஆப்ரிக்கா டூலிப், மே பிளான்ட் என 20 வகை அழகு தாவரங்களும், வேம்பு, வாகை, புங்கை உட்பட 10 வகை
மரங்களையும் வளர்க்கிறோம்.பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களின் நிதிமூலம் இதை பராமரித்தாலும், எனது சொந்த செலவிலும், ஆசிரியர்கள் பங்களிப்பு நிதியிலும் இவற்றை பாதுகாத்து வருகிறோம். மரக்கன்றுகளை மாணவர்கள் கொண்டு வந்து, நட்டு பராமரிக்கின்றனர். ஆசிரியர்களும் அரிதான செடிகளை வெளியில் வாங்கி வந்து, இங்கு வளர்க்கின்றனர். பூத்துக்குலுங்கி கீழே விழும் ஒவ்வொரு வகை பூக்களையும் மாணவர்கள் சேகரித்து, பள்ளி நுழைவு வாயில் முன் தினமும் ஒரு வண்ணக்கோலத்துடன், பூக்களால் "டெகரேட்' செய்து, காட்சிக்கு வைக்கின்றனர். இந்த வித்தியாச பழக்கத்தால் பெற்றோர் பார்த்து வியந்து செல்கின்றனர், என்றார்."பசுமைப்பள்ளி'யை 94435 77062ல் வாழ்த்தலாம்.

பாம்பு பிடித்து வனம் காக்க நாங்கள் தயார்:பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். ஆனால் உண்மையில் பாம்பு வன உயிரின பாதுகாப்புக்கு முக்கியமானது.
"மற்ற விலங்குகளை காட்டிலும், பாம்புகளை பற்றிய அறியப்பட்ட உண்மைகள் குறைவு. பெரும்பாலான பாம்புகள் தீங்கற்றவை. சில வகை கடும் நஞ்சு தன்மை கொண்டவை. எனவே பாம்புகளை கண்டால், அடித்து கொல்லாதீர். அவை குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும். நாங்களே வந்து அவற்றை பிடித்து வன அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறோம். தவிர்க்க முடியாத பட்சத்தில் அடர்ந்த வன பகுதியில் கொண்டு சென்று விடுகிறோம். அதுமட்டுமின்றி அனுமதியின்றி காட்டு முயல், உடும்பு, கீரி, மயில் போன்ற விலங்குகளை பிடிப்பது தெரிந்தால், அவற்றை மீட்டு, வனத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம்,'' என்கிறார் தமிழ்நாடு பாம்பு மற்றும் வனவிலங்குகள் மீட்பு காப்பகத்தை சேர்ந்த மணிமேகலை.அவர் கூறுகிறார்: வனங்கள் நாட்டிற்கு வரப்பிரசாதம். ஆனால் நம் நாட்டில் வனபரப்பு குறைந்து கொண்டு வருகிறது. வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வனபராமரிப்பு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் படித்த, வீட்டு குடும்ப தலைவிகளை உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பை 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினோம். குறிப்பாக சிறிய வயதிலிருந்து விலங்குகள் மீது பிரியம் அதிகம். இதற்காக பத்தாம் வகுப்பு முடித்த கையுடன், நேதாஜி பாம்பு டிரஸ்ட்டில் இணைந்து செயல்பட்டேன். பாம்புகளை கண்டு அஞ்ச வேண்டாம். வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் கண்டால், எந்த நேரத்தில் எங்களை தொடர்பு கொண்டாலும், நாங்களே வந்து பிடித்து விடுவோம். இதற்காக கட்டணம் வசூலிப்பதில்லை. அவற்றை வன அதிகாரிகள் அல்லது அவர்கள் அனுமதி பெற்று, வனத்தில் விடுவோம். மூன்று ஆண்டுகளில் மட்டும் 140 பாம்புகள், 8 குரங்குகள், 5 கீரிகள், 20 அணில்கள், 70 கிளிகள், 3 மயில்கள், 49 முயல்களை மீட்டு வனத்தில் விட்டுள்ளோம், என்றார்.பாம்பு பிடிக்க, மணிமேகலையை 96880 71822ல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement