Advertisement

உரத்த சிந்தனை: எட்டி உதைத்த இளவரசர்...- ஆர்.நடராஜன் -

மன்மோகன் சிங்கின் எதிர்பாராத அதிர்ஷ்டம், அவர் பிரதமரானது. போனஸ், இரண்டாம் முறையும் பிரதமரானது. எதிர்பாராத அதிர்ச்சி, ராகுல் தலையீடு. 'இந்திரா சொன்னால் விளக்குமாறு எடுத்துப் பெருக்குவேன்' என்று, ஜெயில் சிங் போல் சொல்லவில்லையே ஒழிய, 'இளவரசருக்கு அடிபணிவேன்' என்று வெளிப்படையாக சொன்னார் மன்மோகன் சிங். ஆனாலும், பாவம்... அவருக்கு இப்படி ஒரு அகவுரவபங்கம் வந்திருக்க வேண்டாம். அதுவும், உலக நாடுகள் அவரை கவனித்துக் கொண்டிருந்த போது.

'குற்றப்பின்புலம் உள்ளவர்கள், தேர்தலில் நிற்கக் கூடாது' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிலிருந்து அரசியல்வாதிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள துடித்தனர்.இந்த நேரத்தில், 'அவசர சட்டம் முட்டாள்தனமானது; கிழித்து எறியப்பட வேண்டியது' என்று சொல்லி, மன்மோகன் சிங்கையும், மூத்த அரசியல்வாதிகளையும், அமைச்சர்களையும் அதிர வைத்தார் ராகுல். இதைவிட மோசமாக, அவர் வேறு ஏதாவது சொன்னாலும், தேவதா விசுவாசம் கொண்ட காங்., கேட்டுக் கொள்வர்.எது எப்படி இருந்தாலும், ராகுல் சொன்னதை எல்லாரும் கேட்டனர். ராகுலா சொன்னார். குரல் அவருடையது. வசனம், டைரக் ஷன், சோனியா!சோனியாவின் மனம் தெரியாமல் அவர் ஒப்புதல் இல்லாமல், ராகுல் இப்படி பேசியிருப்பாரா? அவரை களத்தில் இறக்கியவர் சோனியா என்று சொல்வதில் அறிவுஜீவிகளுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் என்ன தயக்கம்?
'பிரதமருக்கு அவமானம் இழைத்து விட்டார் ராகுல்' என்று, பிரதமரைத் தவிர, எல்லாரும் சொல்லி விட்டனர். 'கட்சித் துணைத்தலைவர் சொன்னது சரியல்ல' என்று, கட்சியின் தலைவர் - தலைவி சொல்ல வில்லை. 'அவசர சட்டம் கூடாது' என்று, அவர் பிரதமரிடம் லேசாக முணுமுணுத்திருந்தால் கூடப்போதுமே, ஜனாதிபதிக்கு முறையீடு போயிருக்காதே, ஜனாதிபதிக்கு, ராகுல், டெலிபோனில் பேசினாலே போதுமே... என்று, மற்றவர்கள கூறினர். ஆனால், சோனியா சொல்லவில்லை.

ராகுல் வீசிய சொற்களின் அழுத்தம், வேகம், நேரம் இவற்றை பார்க்கும்போது, மாக்கியவில்லிய மண்ணின் ராஜதந்திர உத்தி என்பது புரிகிறது. நாட்டை ஆள்வது கூட்டணி; அதில் முக்கிய கட்சி காங்கிரஸ். அதற்கு தலைவி இருக்கிறார். அதன் சார்பாக பிரதமர் இருக்கிறார். ஆனால், கட்சியின் துணைத் தலைவர் சொன்னவுடன், அரசு முடிவுகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மாறி விடுகிறதே. அவருக்கு தனியே, 'வீட்டோ' அதிகாரம் இருக்கிறதோ என்று கேட்பவர்களுக்கு புரியாத விஷயம்... அரண்மணை நாய்க்
குட்டியின் வால், தளபதி வாளை விடக் கூர்மையானது என்பது.நிலைமை இப்படி இருக்க, இங்கே ஜனநாயகம் இருப்பதாக இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவோம்.சோனியா ஏன் இப்போது இப்படி செய்ய வேண்டும்? ராகுலை பிரதமராக்கி விட்டு, தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றா? அப்படியல்ல... ராகுல் விரும்பினால், எந்த நேரமும் பிரதமராகலாம். ராகுலுக்காக மன்மோகன் சிங்கை விலகச் சொல்வது எந்த விதத்திலும் கஷ்டம் இல்லை. அடுத்த நொடியில் அவர் இடத்தை காலி செய்து விடுவார். ஆனால், பரபரப்பு நாடக அம்சம் மக்களின் கவனத்தை கவர்வது போன்று எதுவுமே இராது. ராகுலுக்கு இப்போது பெரிய விளம்பரம் கிடைத்து விட்டது.

தான் கொஞ்சமும் சம்பந்தப்படாதபடி காட்டிக் கொண்டு, அவசர சட்டத்தை விலக்கிக் கொள்ள செய்த இவரே தான், அவசர சட்டத்தின் சூத்திரதாரி. தன் கட்சி மற்றும் தோழமை கட்சிக்காரர்களை, தேர்தல் நேரத்தில் காப்பாற்ற உதவும் என்று முன்பு முடிவு எடுத்த சோனியா, பிரதமர், பின் அமைச்சரவை எல்லாவற்றையுமே பாசாங்கு சடங்குகளாக்கும் படி திடீரென்று மனம் மாறினார். ஏன்? தன் கட்சி எம்.பி., ரஷீத் மசூத் வழக்கு, முடிவுக்கு வந்த போதே, அவர் மனம் சஞ்சலப்பட்டது. லாலு பிரசாத் மாட்டிக் கொள்வார் என்பதை, மோப்பம் பிடித்த அவர், இது தான் சரி என்று தேர்தலுக்கு முன்னதாக ஜமீன்தார், ஜமீன்தாரிணி கட்சித் தலைவர்களை, 'உள்ளே' தள்ளி விட்டால், அதே கட்சிகளின் அடுத்த நிலை தலைவர்கள் கூட்டணிக்கு உடன்படுவர் என்று நம்பினார். முன்பு மாமியார் செய்த தந்திரம் இது! ஆனால், அது அப்போது, 'உள்ளே' தள்ளப்பட்ட தலைவர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.

இதுதவிர, இன்னொரு கணக்கும் போட்டார்... இந்த தேர்தலில், புதிதாக வாக்களிக்கும் இளையவர்கள் அதிகம். அவர்கள் ஐ.மு.கூ., ஆட்சியைக் கண்டு நொந்து போயிருக்கின்றனர். பா.ஜ., அபிமானத்தையும் தாண்டி, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இந்த நிலையில், அதிரடியாக ஏதாவது செய்து, ராகுலைக் களத்தில் நிறுத்தி, அமோக ஆதரவு பெற சோனியா நடத்தியுள்ள, ராஜதந்திர நாடகமே இது.நரேந்திர மோடி, 'திருவாளர் பரிசுத்தம்' என்ற புகழுடன் போட்டியிடும் போது, எங்களிடமும் ஒரு திருவாளர் பரிசுத்தம் இருக்கிறார், அவர் இளையவர், மதச்சார்பு தீட்டப்படாதவர் என்று மக்களிடம் சொல்லி, ஓட்டு கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். அதற்கான திடீர் நாடகமே, ராகுலின் பத்திரிகையாளர் சந்திப்பு. இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பையும், விவாதத்தையும், விளம்பரத்தையும், காங்கிரஸ் வேறு வழியில் பெற்றிருக்க முடியாது.

ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் அடித்திருக்கிறார் சோனியா. முதியவர்களை விலக்கி விடுவது. கட்சியையும், ஆட்சியையும் இளைஞர்கள் வசம் கொடுப்பது; எதிர்க்கட்சிகளை மிரட்டி, வழிக்கு வரச் செய்வது. காங்., கட்சியின் முதியவர்கள், மான அவமானம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு பதவி இருந்தால் போதும். வெளியே போய் செல்லாக் காசாக இருப்பதை விட, இங்கே தேய்த்த காசாக இருக்கலாம் என்பது அவர்கள் எண்ணம். மன்மோகன் சிங்கா, ராகுலா என்றால், மன்மோகன் சிங் உட்பட அனைவரின் ஆதரவும் ராகுலுக்கே. பின் ஏன் இப்படி?ராகுலை சோனியா முன்னிறுத்தி விட்டு போகட்டும். அவர் பிள்ளை, அவர் நாடு, அதற்காக மன்மோகன் சிங்கை அவமானப்படுத்தலாமா என்று காங்கிரஸ்காரர்கள் யாரும் கேட்கவில்லை. அதிகாரிகளையும், அமைச்சர்களையும் தன் ஏவலாட்களாக நடத்தி பந்தாடுவது காங்., கட்சியின் நெடுங்காலப் பழக்கம்.

காங்கிரஸ், எத்தனை பேரை எப்படி அவமானப்படுத்தியது என்பதை பலர் மறந்து போயிருக்கலாம். ரயில்வே வாரியத் தலைவராக இருந்த, பி.சி.கங்கூலி, தன் பேச்சை கேட்கவில்லை என்பதால், அலுவல் முறையில், அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில், வேலை நீக்க உத்தரவை ஒட்டச் செய்தார் இந்திரா. அப்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் அஞ்சையாவை, பொது இடத்தில் அவமானப்படுத்தினார் பிரதமர் ராஜிவ்.ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், வெளியுறவுச் செயலரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே, 'அடுத்த வாரம் வெளியுறவு துறைக்கு புதிய செயலர் இருப்பார்' என்று சொன்னார் அப்போதைய பிரதமர் ராஜிவ். அப்போது வெளியுறவுத் துறை செயலராக இருந்தவர், அப்பழுக்கற்ற மனிதரான, ஏ.பி.வெங்கடேஸ்வரன். அவர் உடனே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

ராகுல், எல்லா ஊழல்களையும் தீர விசாரித்து, கட்சிக்குள், ஆட்சிக்குள் தவறு செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, தண்டித்து, ஜனநாயக மாதாவைக் காப்பாற்றினாரா? அவருக்கு முக்கியம் சொந்த மாதா; ஜனநாயக மாதா அல்ல, பாரத மாதாவும் அல்ல.இப்போதைக்கு, சாணக்கியரின் மண்ணில், மாக்கியவில்லி ஜெயித்திருக்கிறார். அடுத்த ரவுண்டு எப்படியோ?
e-mail:hindunatarajanhotmail.com

- ஆர்.நடராஜன் -

கட்டுரையாளர் அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • sethu - Chennai,இந்தியா

  நேதாஜி அவர்களே ,நாம வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிய திருடனிடம் அல்லவா கொடுத்துள்ளோம் ,பின்னே அவன் எப்போது விரும்பினாலும் சாவிபோட்டு அனைத்தையும் அள்ளிக்கொள்வான் ,( சட்டம் இயற்றும் உரிமை யாரிடம் உள்ளது யோசித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் ,வேட்பாளர் மறுப்பு ஓட்டுக்களை அதிகம் போடுங்கள் தானாக நல்லவர்கள் எம்பி எம் எல் எ ஆக வருவார்கள் )

 • nagainalluran - Salem,இந்தியா

  ப ஜ எதிர்த்ததால்தான் ஜனாதிபதி திருப்பி அனுப்பினார். பிறகு நடந்ததுதான் நான் சென்ஸ் நாடகம். சும்மா ரீல் விடாதீங்க. நாங்களும் எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

 • attlu attlu - San Francisco,யூ.எஸ்.ஏ

  Mr. Natarajan, Please do not spread lies. Mr. Venkateshwaran told the press where Mr. Rajiv Gandhi will visit next (without consulting Mr. Gandhi) in the presence of Mr. Gandhi. That is why Mr. Gandhi said there will be new Secretary at the Externnal Affairs Ministry the following week. Mr. Venkateshwaran wanted to show the world he was a smart-alec. Mr. Gandhi put him in his place.

 • NavaMayam - New Delhi,இந்தியா

  இந்த அவசர சட்டத்தை உங்கள் மோடியோ , அல்லது அம்மாவோ எதிர்த்து ராகுல் பேசியதற்கு முன் பேசினார்களா ... ராகுல் பேசிய பிறகுதானே பேசினார்கள் ....பிஜேபி அனைத்து கட்சி கூட்டத்தில் இதை எதிர்த்து குரல் கொடுத்ததா , அல்லது வெளி நடப்பு செய்ததா....இந்த இளவரசர் கிராமத்துக்கு செல்ல கூட காரில் பயணம் செய்கிறார்...அனால் உங்கள் ஏழை பங்காளன் எங்கு சென்றாலும் , அது கட்சி வேலையாக இருந்தால் கூட தனி விமானம் தான்.... மண் மோகன் சிங் கட்சியை வளர்த்து பிரதமர் ஆனவர் இல்லை ... கட்சியின் அதாரவால் பிரதமர் ஆனவர்...அனால் உங்கள் அத்வானி தன கடின உழைப்பால் இந்த பிஜேபி கட்சியை வளர்த்தவர்....அனால் அவர் சொல்லான , மாநில தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை அறிவிக்கலாம் என்று கூறியதை ஏற்காமல் , அவரை அவமான படுத்திய போது எங்கே சென்றது இந்த அவமான அரசியல் ...அது மக்களின் விருப்பம் என்றால் , இந்த சட்டத்துக்கு மக்களில் வெறுப்பை தானே ராகுல் எடுத்து கூறி தடுத்தார்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement