Advertisement

புத்தக மகன் மோகன்

ஓய்வு பெற்ற பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் இரா.மோகன் இதுவரை, ஆய்வும், பதிப்பும், தொகுப்புமாக 100 புத்தகங்கள் எழுதியுள்ளார். நூறாவது நூல் "கவிதைக்களஞ்சியம்' அண்மையில் அமெரிக்காவில் வெளியானது. சொற்களின் அழகும், ஆழமும், ஆற்றலும், அழுத்தமும் அறிந்து, எழுத்தை ஆளுவதில் வல்லவர். பேசும் சொற்கள் எல்லாம், மேலோரின் மேற்கோளாக இருக்கும். இலக்கியச்சாறு பிழிந்து, தமிழ் சாரல் பெய்யும் எழுத்து நடை, இவருடையது. இவர் படித்து முடித்த புத்தகங்கள் எண்ணிலடங்கா; அதனால் தான் எண்ணத்தை எல்லாம் கொட்டி எழுதமுடிகிறது, என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவர். இவரோடு ஒரு நேர்காணல்:


உங்களின் நூறு புத்தகங்கள் வெளியாகி விட்டது. எப்படி திரும்பி பார்க்கிறீர்கள்?


1972 ம் ஆண்டில், "மு.வ.,வின் நாவல்கள்' என்ற என் முதல் ஆராய்ச்சி புத்தகம் வெளியானது. அறிஞர்கள் வாழுகிற காலத்தில், அவர்களைப்பற்றி அதிகம் நூல்கள் வெளியாகாத காலம் அது. நல்ல வரவேற்பு பெற்றது. நான் "ஏகலைவன் மாதிரி', மு.வ.,வை குருவாக்கி எழுத தொடங்கினேன். அப்போது என்னை "மு.வ.மோகன்' என்பார்கள். தொடர்ந்து இந்த 40 ஆண்டுகளில், ஆய்வுக்கட்டுரைகள், இலக்கிய திறனாய்வுகள், தொகுப்புரைகள், சுயமுன்னேற்ற நூல்கள், புதுக்கவிதை என புத்தகங்கள் வெளியாயின.


இதுவரை எழுதவில்லையே என ஏக்கம் தருவது...


திருக்குறள் பற்றி தனிநூல் எழுதவில்லையே என்று ஏக்கம் இருந்தது. "உலகக் குடிமகனை' பாடிய புலவர் திருவள்ளுவர். திருக்குறளில் "தமிழ்' என்ற வார்த்தை எங்கும் இருக்காது. அதனால் அது "உலகப்பொதுமறை' ஆனது. எனவே 101 வது படைப்பாக, "கணினி யுகத்திற்கு திருக்குறள்' என்ற புத்தகம் எழுதி வருகிறேன்.


அமெரிக்காவில் இரண்டு மாதம்தங்கி விட்டு வந்துள்ளீர்கள். படிக்கும் பழக்கம், வெளிநாடுகளில் எப்படி?
அவர்கள் புத்தகத்தை "உயிருள்ள பொருளாக' நினைக்கிறார்கள். அங்கு படிப்பது என்பது ஒரு "இயக்கம்'. என்ன தான் இணையதளங்கள் இருந்தாலும், விமானம், ரயில் என காத்திருக்கும் போது புத்தகத்தை புரட்டுகிறார்கள். புத்தக விற்பனை குறையவில்லை. தமிழின் பெருமையைச் சொல்லும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் வரவேண்டும். தமிழாசிரியர்களுக்கு ஆங்கில அறிவு அவசியம். என் கல்லூரி காலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள், பெட்ரன் ரசல், பெர்னாட் ஷா என அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்.


எழுதியவற்றில் மனநிறைவு தந்தது...


உலகம் முழுவதும் சுயமுன்னேற்ற நூல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால் தமிழில் பெருமளவில் இல்லை. வெளியாகும் நூல்களும், ஆங்கில புத்தக கருத்துக்களை பின்பற்றி வந்தன. ஷிவ் கெரா போன்றவர்களின், மொழிபெயர்ப்பு நூல்கள் இங்கு வரவேற்பை பெற்றன. சங்க இலக்கியங்களில், கொன்றை வேந்தனில், ஆத்திச்சூடியில், திருக்குறளில் இல்லாத தன்னம்பிக்கை சிந்தனைகளா?


"இன்பமே எந்நாளும்; துன்பம் இல்லை' -அப்பர் வாக்கு.


"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' -உலக நீதி


"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' -ஞானசம்பந்தர்


"எத்திசை செல்லினும் அத்திசை சோறே' - புறநானூறு


என தன்னம்பிக்கை கருத்துக்கள், தமிழ் இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன. வறுமையில் வாடிய போதும் பாரதி பாடினான்..."எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று! எனவே இவற்றை எல்லாம் படித்து "இன்பமே எந்நாளும், இனியவை நாற்பது, விரல்கள் பத்தும் மூலதனம், திறமை தான் நமக்கு செல்வம், விழிப்புணர்வு சிந்தனைகள்' என ஐந்து தன்னம்பிக்கை புத்தகங்கள் எழுதினேன். இதனை தமிழ் இளைஞர்கள் கூட்டம், இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்டது நிறைவு தருகிறது.


உங்களை சிந்திக்க வைத்த புத்தகம்...


சுயசரிதை, வாழ்க்கை வரலாறு புத்தகங்களை படிக்க வேண்டும்; அதுவே மாற்றத்திற்கான தூண்டுதல் என்று இளைஞர்களுக்கு நான் சொல்வேன். அந்த வரிசையில், என்னை சிந்திக்க வைத்தவை நாமக்கல் கவிஞரின் "என் கதை', உ.வே.சா.,வின் "என் சரித்திரம்'. பாரதியை தான் சந்தித்த நிகழ்வை, நாமக்கல் கவிஞர் "பாரதி தரிசனம்' என்றார். வார்த்தை நேர்த்தியை பாருங்கள்!


இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...


உங்கள் ஆளுமையை வளர்க்க புத்தகங்களால் மட்டுமே முடியும். நினைத்தது நடக்கவில்லை; சிக்கல் வருகிறது என்று நினைக்கிறீர்கள் என்றால் திருக்குறளை, விவேகானந்தர், கண்ணதாசன், கலீல் ஜிப்ரான் சிந்தனையை படியுங்கள்! உடன்பாடாக சிந்தித்து, உயரிய எண்ணங்களோடு, நகைச்சுவை உணர்வோடு இருந்தால் நிறைவாக வாழலாம்.


மேலும் பேச 94434 58286.


ஜிவிஆர்- ஆனா


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement