Advertisement

எங்கே எழுத்து சுதந்திரம்? மனுஷ்ய புத்திரன் விளாசல்

"எழுத்து என் நிலைப்பாடுகளின் நிழல்' என நினைப்பவர். "எழுத்து வாழ்வை சந்திக்கும் வழிமுறை' என வழிமொழிபவர். படிப்பது, எழுதுவது, பேசுவது என்று பொழுது எல்லாம் வார்த்தைகளால் வாழ்பவர். "எழுத்தை தீராத பழக்கமாக கொண்டவனே எழுத்தாளன்' என்று உரக்க சொல்பவர். உரத்த சிந்தனையாளர். உயிர்மை பதிப்பகம் மூலம் இவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் எல்லாமே, உயிர் உள்ளவை. இவரை பிடிக்காதவர்கள், இவரை படிக்காதவர்கள்; அல்லது படித்து முரண்பட்டவர்கள். விமர்சனங்களும், விவாதங்களும் இன்று இவரை, சிந்தனையாளர்கள் வரிசையில் முன்னணியில் வைத்துள்ளது. இவர்... மனுஷ்ய புத்திரன்! மதுரை புத்தகத் திருவிழா நாளில், புத்தகங்களுக்கு இடையே இளைப்பாறிய, மனுஷ்ய புத்திரன் மனம் திறந்த நிமிடங்கள்...
மனுஷ்ய புத்திரன் யார்?


ஜாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு என் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக "அப்துல் ஹமீது', மனுஷ்ய புத்திரன் ஆனேன்! என் 16 வது வயதில், முதல் படைப்பினை, "மனுஷ்ய புத்திரன் கவிதைகள்' என்ற புத்தகமாக மணிமேகலை பிரசுரம் வெளியிட்டது.


பள்ளிசெல்லும் பதினாறு வயதினிலே... உங்களை எழுத தூண்டியது யார்?


பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு, புத்தகப்படிப்பை தொடர்ந்தவன் நான். பின்னர் தான், பல்கலையில் பட்டங்கள் பெற்றேன். சுஜாதாவை படித்ததே என் எழுத்திற்கு <உரம். அவரின் எழுத்து "ஸ்டைல்' என்னை ஈர்த்தது. பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது.


சமகால எழுத்தாளர்களில் உங்களை கவர்ந்தவர்...


எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன். இந்த படைப்பாளிகளின் மொழிநடை அபாரம்.


ஜெயமோகன் திரைத்துறைக்கு வந்து விட்டாரே... நீங்கள் ..?


திரையுலகில், எழுத்தாளர்களின் எழுத்தாளுமையை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை. ஜெயமோகன் போன்றவர்களும், படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக தானே அறியப்படுகிறார்கள்.


தமிழ் வாசிப்பு உலகில், எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறதா?


மதிப்பு, மரியாதை உள்ளது. அடையாளம் தெரியவில்லை. எழுத்தாளனுக்கும் சமூகத்திற்கும் இடையில் இடைவெளி தான் பிரச்னை. புத்தக கண்காட்சிகளில், எழுத்தாளனைத் தேடி வரும் வாசகர்கள் தான் அதிகம்.


எழுத்தாளர்களுக்கும் ஊடக வெளிச்சம் அவசியமா?


நவீன எழுத்தாளர்கள் பலர், வெகுஜன ஊடகத்தில் எழுத ஆரம்பித்த பிறகு தான் அடையாளம் காணப்பட்டார்கள். ஆனால், எழுத்தாளர்கள் மீது ஊடகங்களின் கவனம் இல்லை.


சமூக வலைதளங்கள், "குட்டி எழுத்தாளர்களை' உருவாக்குகிறதா?


"பேஸ்புக்கில்' எழுத எந்த தகுதியும் தேவை இல்லை. அதற்காக, எல்லா தகுதிகளும் இருக்கின்றன என்று நினைத்து எழுதக்கூடாது. மொழித்திறன், பயிற்சி இல்லாமல் எழுதுகிறார்கள். சமூக விரோத, ஜாதி, மத வெறி கருத்துக்களை பரப்புகின்றனர். ஒருவர் எழுதும் அபத்தமான வார்த்தைகளை தான் பலரும் கையாள்கிறார்கள். நகல் எடுப்பவர்களால், நல்ல எழுத்தாளர் ஆக முடியாது. என்றாலும் சிந்தனையாளர்களுக்கு நல்ல களம் அது. "பேஸ்புக்கில்' படைப்பாளிகள் உருவாகிறார்கள். ஆனால், அங்கேயே அவர்களது சிந்தனை மடிந்து விடுகிறது. அதனை தாண்டி, புத்தகங்கள் எழுத வருவது இல்லை.


"பேஸ்புக்' போன்றவற்றால், புத்தக விற்பனை குறைந்துள்ளதா?


படிப்பு ஆர்வம் உள்ளவர்கள், புத்தகத்தை விட்டு வலைதளங்களுக்கு செல்ல மாட்டார்கள். "பேஸ்புக்' விவாதங்கள் காரணமாக, இலக்கிய புத்தகங்கள், சில நேரங்களில் அதிகம் விற்கின்றன.


இளைஞர்கள் புத்தகங்கள் படிக்கிறார்களா?


அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது; நேரம் இல்லை. தொடர்ச்சியாக அமர்ந்து வாசிக்க முடியவில்லை; இதனால், பெரிய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன.


இணையதளங்களால், பதிப்பகங்களுக்கு பாதிப்பா?


பாதிப்பு தான் என்றாலும், படிப்பவர்களுக்கு நல்லது. ஐந்தாயிரம் புத்தகங்களை, கையடக்க கணினியில் படிக்க முடியும். பதிப்பாளர்களும் மாறிக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். தமிழ் புத்தகங்கள் "இ-புத்தகங்களாக' மாறுவது காலத்தின் கட்டாயம்.


தமிழில் பெண் எழுத்தாளர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள் குறைவாக உள்ளனரே...


துணிச்சலாக எழுதும், பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாவலாசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் இல்லை. இதனால், பெண்களின் வாழ்க்கையை வெளி கொண்டு வர முடியவில்லை. பெண்ணிய ஆய்வு அதிகரித்துள்ளது. ஆனால் மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை.


கவிதை-கட்டுரை, எதனை எழுத விரும்புவீர்கள்?


கவிதை எழுதுவது அந்தரங்க விருப்பம். உரைநடை எழுதுவது சமூக கடமை. இது துயரங்களின் காலகட்டம். அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகிறோம். மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு தேவை. எனவே உரைநடைக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன்.


"எழுத்து சுதந்திரம்' இருக்கிறதா?


நம் எழுத்தாளர்கள், எங்கே சுதந்திரமாக எழுதுகிறார்கள். யார் உண்மையை எழுதுகிறார்கள்? எழுதி "டெஸ்ட்' செய்தால் தானே, சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று தெரியும்! எழுத்தாளர்களே எல்லையை வரையறுத்து, தணிக்கை செய்துகொள்கின்றனர். சமூக அநீதி தொடர்பான பார்வை இல்லை; அரசியல் பார்வை இல்லை. இருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்துவது இல்லை; "குடும்பக் கதைகள்' தானே எழுதிக்கொண்டுள்ளனர்.


மேலும் கருத்து பகிர manushyaputhirangmail.co


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஈரோடுசிவா - erode ,இந்தியா

    இந்த ஆள் ஒரு டுபாக்கூர் ...

  • இளங்கோ - chennai,இந்தியா

    இவருடைய வாத திறமை பிடிக்கும்.பெரும்பாலான இவருடைய கருத்துக்களும் ஏற்புடையவே.மற்றவர்கள் பேசும்போது அதிகம் குறுக்கிடாமல் இருந்தால் இரு தரப்பு வாதங்களையும் மேலும் ரசிக்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement