Advertisement

உரத்த சிந்தனை:வருமா ஜாதியற்ற ஒரு காலம்:- சி.கார்த்திகேயன்

"ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற ஒரு தமிழனின் குரல், அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எட்டியது. ஆனால், இங்குள்ள நம்மிடம் எட்டவில்லை.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர், இதர என்று, 360க்கும் குறையாமல் ஜாதிகள் இருக்கின்றன. இவைகளில், இரண்டு வகுப்பினர்களுக்கு மட்டும், இந்தியா முழுவதும் சுதந்திரம் அடைந்து, ஐம்பது ஆண்டுகள் வரை அனைத்து வகைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு, அரசியல் சட்டத்தின் மூலம் செய்துள்ளது. இது காந்தி கண்ட கனவு.பல்வேறு விஷயங்களில், அமைதிப் பூங்காவாக கருதப்படும், நம் தமிழகம் ஜாதி ரீதியாக, அரை நூற்றாண்டாக வன்முறைக்கு இடம் அளிப்பது, தென் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்குத் தான் அதிகம் தெரியும்.வட தமிழகத்திலும், சமீப காலமாக குறிப்பிட்ட, இரு தரப்பினரிடையே மோதல்கள், கலவரங்களாக முடிந்துள்ளன. கல்வியறிவில், தமிழகம் முதல் பத்து இடங்களுக்குள் பிடித்ததில், அர்த்தமில்லாமல் போய்விட்டது. ஆதி முதல், அந்தம் வரையிலும் அனைத்து விஷயங்களும், ஜாதியை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. முன்பெல்லாம், இன மோதல்கள் பெரும்பாலும், திருவிழாக்களின் போது தான் வரும்.

இப்போதோ, காதல் மற்றும் காதல் திருமணங்களிலும் வருகிறது. வட தமிழகத்தில் ஒரு விதமாகவும், தென் தமிழகத்தில் வேறு ஒரு விதமாகவும் வருகிறது. சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய தியாகிகள், சமூக நல்லிணக்கத்திற்காக உயிர் நீத்தார்கள். இன்று, அந்தந்த ஜாதிகளுக்கு தலைவர்களாக சித்தரிக்கப்படும் வேளையில், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுவதால், சமூக நலன் மறைந்து சமுதாய நலன்களாக மாறிவிட்டது.பள்ளி, கல்லூரி பருவங்களில், பாலின ரீதியாக ஏற்படும் காதல், தருமத்தை மாவட்டத்தின் பெயரில் இருந்து அகற்றி, அதர்மபுரியாக மாற்றியுள்ளது. மாணவ சமுதாயத்திலும் ஜாதி, மத உணர்வுகளே மேலோங்கி நிற்பதை காட்டுகிறது. இந்தியாவில், புராண காலத்தில் இருந்தே, காதல் செழிப்புடனே இருந்தாலும், அவைகளும் மோதல்களில் தான் முடிந்துள்ளன.பல வகையான திருமணங்கள், அதாவது நிச்சயிக்கப்பட்ட திருமணம், போட்டிகளில் வெற்றி பெற்று கிடைக்கும் திருமணம், கந்தர்வ திருமணம் மற்றும் இதர வகையான திருமணங்கள் இருந்தாலும், இந்த காதல் திருமணங்கள் மட்டுமே, தோல்வியில் முடிந்தால், அது சமூகப் பிரச்னையாகி விடுகிறது.

இந்தியாவில், 19ம் நூற்றாண்டில் ராஜாராம் மோகன்ராய், கேசவ் சந்திரசென், டாக்டர் ஆத்மராய் பாண்டுரங், ரானடே, கோகலே, தயானந்த சரஸ்வதி போன்றோர், சமூக ரீதியாகவும், பாரதியார், பாரதிதாசன், முத்துலெட்சுமி போன்றோர், பெண்ணடிமையை எதிர்த்தும், போராடித் தான், பெண் சுதந்திரத்தினை பெற்றுத் தந்தனர். இவை அனைத்திற்கும் காரணம், கல்வியே. கல்வியும், கலப்புத் திருமணங்களின் மூலம், ஜாதியற்ற உலகம் அமையும் என்றும் நினைத்தோம். ஆனால், இன்று வட தமிழகமே, ஜாதித் தீயினால் பற்றி எரியக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டது. வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்களின் திருமணங்கள், முதலில் வெற்றி என்பதில் துவங்கி, உயிரிழப்பில் போய்விடுவது சோகம் தான். சமீபத்திய, இந்த சம்பவம் நமக்கு பல விஷயங்களை சொல்கிறது. அவை, சாதாரணமாக காதலில் துவங்கி, ஜாதி ரீதியாக சென்று, கட்சி வழியில் நடந்து, கடைசியில் அரசியலில் முடிந்து விட்டது. இதற்கு, அந்த இரு கட்சிகளும் ஒன்றையொன்று, குற்றம் சொல்லும் அளவிற்கு சென்று விட்டதால், தமிழகத்தில் இவைகள் தவிர, பல கட்சிகள் ஜாதி அரசியல் தான் செய்வது, இன்னும் தெளிவாக தெரிகிறது.

கல்வியின் வாயிலாக, சமூக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான், அரசு பள்ளிகளில் இலவச கல்வி, கல்வி உபகரணங்கள், இலவச பஸ் பாஸ் போன்றவைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், மாணவர்கள், இவைகளில் கவனம் செலுத்தாமல், காதல் என்ற விவகாரத்தில் சிக்கி, தாங்களும், தங்களின் பெற்றோரையும் துன்பத்திற்குள்ளாக்கி, தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகின்றனர். இன்றைய நவீன யுகத்தில், இளம் வயதில் பார்க்க கூடாதவைகள், செய்யக் கூடாத செயல்கள், கணக்கிலடங்கா பணம், பெற்றோரின் கவனக்குறைவு, பிள்ளைகளின் ஏமாற்றும் திறன் இவைகள் அதிகம். அவைகள் தான், இந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணமாக அமைகின்றன. செல்லமாக வளரும் பிள்ளைகள், தங்களை மீறி திருமணம் செய்வதை மட்டும் பின்னர் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் விளைவு, உயிர்ப்பலி.

திருக்குறள், விவேகானந்தர் உரைகள், பாரதியார் படைப்புகள், கீதை, ஆன்மிகம், பாரம்பரிய விளையாட்டு, சுதந்திர போராட்டத்தின் போது, தமிழகம் எந்த நிலைகளில் இருந்தது போன்றவைகளில், நம் இளைய சமுதாயம் கவனம் செலுத்துவது இல்லை. டேட்டிங், பேஸ்புக், இன்டர்நெட், கபேக்கள், பி.பி.ஓ., தவறான உறவுகள், இவைகளில் கவனம் செலுத்துவதின் விளைவு தான், தர்மபுரி சம்பவம் போன்ற உயிர்ப்பலிகள், அரசு சொத்துகள் சேதம், தேவையற்ற பதற்றங்கள் உருவாக காரணமாக அமைகின்றன.ஊடகங்கள், இவற்றை பரபரப்பு செய்திகளாக்கி, தங்களின் "ரேட்டிங்' கை ஏற்றிக் கொள்வது, ஒரு புறம் இருந்தாலும், சினிமாக்களில் ஜாதி மதங்களை இழிவுபடுத்துகின்றனனர், புத்தகங்களை தடை செய்வது, ஜாதித் தலைவர்கள் பிறந்த, இறந்த தினங்களை கலவரங்களில் முடிப்பது போன்றவைகள், நம் மாநிலத்தில் அதிகரிப்பது, அமைதிச் சூழலை தடுக்கிறது.

கடந்த, 1997-98களில் ஜாதிக்கலவரம் நிகழ்ந்த போது, அப்போதைய அரசு, ஜாதி தலைவர்கள் பெயரை மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு நீக்கி கலவரங்களை தடுத்தது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு, ஒற்றுமையே பலம் என்றெல்லாம், உலகில் நம் பெருமைகள் பறை சாற்றும் வேளையில், கல்வியறிவு பெற்று சிறப்பான தேர்ச்சிகள் நிகழும் தருணத்தில், நாம் ஜாதித்தீயில் கருகாமல், வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்க வேண்டும்.
இ-மெயில்: ckkeyan 77yahoo.in

சி.கார்த்திகேயன் -
எழுத்தாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Navaneetha krishnan - Vedasandur,இந்தியா

  இடஒதுக்கீடு முதலில் அடியோடு நிறுத்தப் படவேண்டும் , மதத்தின் அடிபடையில் மட்டும் அல்ல ஜாதியின் அடிபடையிலும் பிரித்து வைத்திருக்கிறார்கள் , முதலில் இந்துவோ , முஸ்லிமோ, கிறிஸ்டியன் , உயர்ந்த ஜாதியோ , தாழ்ந்த ஜாதியோ எல்லா மதம் ஜாதி யை அரசாங்க பதிவேட்டில் இருந்து தூக்க வேண்டும் , மதம் ஜாதி அவர்கள் வழிபாடும் கடவுள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையாக இருக்கவேண்டும், இடஒதிக்கீடு முறை பொருளாதாரத்தின் அடிபடையில் அமைய வேண்டும் , அப்போது தான் நம் தேசம் ஏழைகள் இல்லாத நாடாக மாறும். ஆனால் இந்த மாற்றம் எளிதில் நடைபெற விடமாட்டார்கள் அதனை அனுபவித்து கொண்டிருப்பவர்கள்.

 • Srinath Babu KSD - Madurai,இந்தியா

  முதலில் இடஒதிக்கீட்டை ஒழிக்கவேண்டும் அப்பொழுதுதான் ஜாதி ஒழியும். அந்நாளில் ஜாதியால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்த கூச்சப்படனர், அனால் இப்போது சலுகைகளை பார்த்து அனைத்து ஜாதி மற்றும் மதத்தினரும் தங்களின் ஜாதியினை சலுகை கிடைக்கும் பிரிவினில் இணைக்க போராட்டம் நடத்துகின்றனர். இது மிகக்கேவலம்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  கல்வி அரசாங்க வேலை வாய்ப்புகளில் முதலில் சாதியை ஒழியுங்கள் தகுதி திறமைக்கு நிச்சயம் முக்கியத்துவம் கொடுங்கள் இந்தியா விரைவில் மற்ற வளர்ந்த நாடுகளோடு போட்டி போடும் .நமக்குப் பின் உருவான பல நாடுகள் இன்று வல்லரசு ஆகிவிட்டன .அடிப்படை வசதிகளில் நாம் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் (FOUR DECADES)பின் தங்கி இருக்கிறோம் .ஓட்டு வங்கிக்காக சாதி அரசியல் செய்து நம்மை இந்த அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் ஆக்கி சிந்திக்க விடாமல் செய்து சுயநலம் காரணமாக பல வகையில் பிளவு படுத்தி நாட்டை பல வகையில் முன்னேற விடாமல் தடுத்து பல ஆண்டுகள் பின்னோக்கி நகரச் செய்து விட்டனர் .நல்ல வேளை ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில்,மற்ற உலக விளையாட்டுகளில் தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளி சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டைப் பின் பற்றி இந்தியாவிற்கு பல தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் அளிக்க வேண்டும் என நமது அரசியல்வாதிகள் யாரும் தீவிரமாக போராடவில்லை.அது வரைக்கும் ரொம்ப நல்லது . ஜி.எஸ்.ராஜன் சென்னை ..

 • Peria Samy - chennai,இந்தியா

  சாதிகள் இருப்பதில் தவறில்லை,அவற்றின் பெயரால் மோதிக்கொள்வது தான் தவறு.சுப்பிரமணிய பாரதியும் ,வ.வு.சி.யும் வெவ்வேறு சாதிக்காரர்கள் அவர்கள் சுதந்திரத்திற்காக இணைந்து போராடினார்கள் .அவர்களுக்குள் எந்த மோதலும் இல்லை. காமராஜர் என்ற மாபெரும் தலைவர் நாடார்.அந்தக் காலத்தில் அந்த இனம் தாழ்ந்த இனமாகக் கருதப்பது.அவருடைய அரசியல் குரு சத்தியமூர்த்தி ஒரு அந்தணர் இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டார்கள்.பாரதியே என்ன பாடியுள்ளார்.ஆயிரம் உண்டிங்கு ஜாதி என்றுதான்.சாதியை ஒழிப்பது என்பது அண்மையில் சாத்தியமில்லாத ஒன்று.அனைத்து சாதியினரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்.

 • S.Narayanan - chennai,இந்தியா

  அரசு செய்வது கொஞ்சம் முதலில் ஜாதி வழி கட்சிகளை தடை செய்யட்டும் அடிப்படை கல்விக்கு ரெசெர்வடிஒன் வேண்டாம் எல்லோரும் படிக்கவேண்டும் மேலே தகுதியானவர்கள் படிக்கட்டும். எல்லோரும் உயர் கல்வி கற்பதில் ஒரு பயனும் இல்லை.Narayanan

 • chennai sivakumar - chennai,இந்தியா

  கடவுளை நேரில் பார்த்தாலும் பார்க்கலாம்.ஆனால் ஜாதி ஒழிப்பு என்பது நிச்சயமாக இல்லை.மாறாக அது இப்போது அடையாறு ஆலமரம் போல நன்கு செழிப்பாக உள்ளது.இன்னும் தீவிரமாக வளர்ந்து கொண்டு தற்போதைய நிலைமையைவிட மகா மோசமாகத்தான் போகப்போகிறது.

 • SalemRajan - Salem,இந்தியா

  சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை ஒழித்தால் சாதி உணர்வுகள் மெல்ல மெல்ல அழிந்து விடும்.. ஆனால் அரசியல் கட்சிகள் ஏற்ற தாழ்வுகளை ஊக்குவிக்கின்றன.. ஏழைகள்/முட்டாள்கள் இருந்தால்தான் அவர்கள் செல்லும் இடமெல்லாம் கூட்டம் சேரும் என்று எதிர்பார்கின்றனர். குவடருக்கும், பிரியாணிக்கும் இவங்கதான வருவாங்க, எல்லாரும் படிச்சுட்டு வேளைக்கு போய்ட்டா யாரும் வர மாட்டங்க, கூட்டம் சேராது. அதனால் தான் அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி முட்டாள்களாகவே வைத்திருக்க விரும்புகின்றன.. உழைக்கும் திறன் கொண்டவனும் அனைத்தையும் இலவசமாக பெற்று கொண்டு முடங்கி போகிறான்....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாரதி பாடி விட்டு சென்று விட்டார்.. இந்தியா அரசாங்கமே ஜாதி உணர்வை திரி போட்டு எண்ணெய் ஊற்றி தங்களது சுய லாபத்திற்காக வளர்த்துவருகிறது.. காலம் ஒரு நாள் மாறும்.. நம்மில் ஜாதிகள் எல்லாம் மறையும் என்று காத்திருப்போம்..

 • Thamizhan - CHENNAI,இந்தியா

  சாதி சாதி என்று சொல்பவர்களுக்கு ஒரு சீண்டல் ,எந்த ஒரு சாதியாவது ஒட்டு மொத்தமாக ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்று கூடி போராடியத என்பதை சிந்தித்துப்பாருங்கள், நம்மில் யாருமே சாதியால் ஒன்று பட்டவர்கள் இல்லை என்பதை உணர்வீர்கள் ஆனால் எண்ணங்களால் மட்டுமே ஒன்று பட முடியும் ,நல்லவர்கள் , ஆக்கபூர்வமான எண்ணங்களை கொண்டவர்கள் ,கெட்டவர்கள் ,கேடு விளைவிப்பவர்கள் இப்படித்தான் மனிதர்கள் ,மற்ற யாவுமே தங்களது வாழ்க்கை நடைமுறைகளே தவிர இதில் எந்த ஏற்ற தாழ்வுகளுக்கு இடமில்லை ,இங்கே நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அரசாங்கமே சட்டம் போட்டு ஆதரிக்கும்போது ,அதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தால்கூட பரவாயில்லை ஆனால் அவர்களும் இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு உருதிணை போகின்றனர் மேலும் எளியவர்களை அழிக்க காவல்துறையை சேர்ந்தவர்களே உறுதுணையாய் நிற்கிறார்கள் ,மனிதம் எங்கு அழிந்து விடுகிறதோ அங்கு அழிவு தானாய் வந்துவிடும் ,இயற்கையாக ஏதோ ஒரு உருவில் நிச்சயம் வரும்,மனிதர்களே மனிதர்களாக இருங்கள் ,நீங்கள் இயற்க்கைக்கு எதிராய் நடந்து அழிந்து மண்ணோடு மண்ணை போய்விடாதீர்கள்,உங்களால் மற்றவர்களுக்கு நல்லது நடக்காமல் இருந்தாலும் பரவாயில்லை ,ஆனால் கேடு விளைவிக்காதேர்கள்.அப்படி சாதி வேண்டும் என்றால் எல்லா சாதியும் தனித்துதான் வழ வேண்டும் யாரும் யாருடனும் ஒரு உரிலோ அல்லது ஒரு மாநிலத்திலோ இருக்கக்கூடாது ,ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மாநிலம் வேண்டும் அப்போதுழு தான் இந்த சாதி வெறி அடங்கும் அப்பொழுது எல்லோரும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வழி பிறக்கும்.

 • Skv - Bangalore,இந்தியா

  நன்றாக இருக்குது உங்கள் கட்டுரை ஆனால் நம்மனாட்டின் உருபடாத அரசியல்வாத்திகள் உள்ளவரை நடக்குமா என்பது சந்தேகமே. தலை ஆடினால் உடலுக்கு பலமே இல்லே எனபது அரசியலுக்கும் பொருந்தும் அரசியல் தலைவர் சாதிவேரியனா இருந்தால் அந்த கட்சியும் சரி நாடுமே உருப்படாது , மக்கள் நலமே முக்கியம் என்ற எண்ணம் வேண்டும் எல்லோருக்கும் கல்வி கட்டாயம் என்ற நிலைவந்தாலே உருப்படும்

 • Manian - Chennai,இந்தியா

  ஆரம்ப காலத்தில் ஜாதிப்பிரிவுகள் வேலை அடிப்படியில் இருந்தது. அரசன் கூட எல்லா ஜாதிகளிலிருந்தும் பெண்களை மணந்தார்கள். எனவே ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த ஜாதிமுறையில் சமுதாயத்தை உடைத்தர்கள். ஜாதியை ஒழிக்க வேண்டுமால் முதல் படியாக உபஜாதிகளை நீக்க வேண்டும். இவ்வாறு சிறு சிறு முயற்ச்சிகள் தான் நீண்ட நாட்களுக்கு பின் ஜாதிகளை ஒழிக்கும். வீணான வாதங்களாலும் கூப்பாடுகளிலும் இந்த மற்றம் வராது. ஜாதி பிரிவினை நீண்ட கால கேன்சர் . சில நாட்களிலோ வருடங்களிலோ மாறது, கல்வி, நல்ல பொருளாதாரம் எல்லா ஜாதியினருக்கும் கிடைத்தால் மட்டுமே சிறுக சிறுக மாற்றங்கள் ஏற்படும். பெண்கள் தங்கள் காலிலே பொருளாதார மூலம் நிற்கின்றபோது ஆண்கள் மாறுவார்கள். பழைய கதைகளையும், அரசியல் ஆதாயம் தேடும் பொய்யான அரசியல் வாதிகளால் எந்த மாற்றமும் ஏற்படாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement