Advertisement

உரத்த சிந்தனை : நஞ்சாகும் பண்பாடு : - எம்.எம்.கே.இப்ராகிம்

உலக நாடுகள் ஒன்றோடொன்று, போட்டி போட்டு வளர்ந்து வரும், இன்றைய நவீன உலகின் பரிணாம வளர்ச்சிக்கு, மனிதனின் அறிவு வளர்ச்சியே முக்கியமானது. அத்தகைய, அறிவை வளர்ப்பதற்கு எண்ணற்ற கல்வி வாய்ப்புகள் பெருகி வரும் வேளையில், மாணவர்களின் சிந்தனைகளை, நோக்கங்களை சீர்குலைக்கும் வைரஸ் கிருமியாக, சினிமாக்கள் பெருக்கெடுத்து வருகின்றன.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடு இருக்கிறது என, பறை சாற்றிய எம்.ஜி.ஆர்., மாணவர்களுக்கு அறிவுரை வழங்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்தார். கவிஞர்களும், படைப்பாளிகளும், சமூக பொறுப்புணர்வோடு, பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லாமல், கலைக்கு உரிய மரியாதையோடு வாழ்ந்து, சகாப்தம் படைத்தனர்.
அமெரிக்காவில், வகுப்பறையில் சக மாணவர்களை, சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளிய மாணவன் மட்டுமின்றி, இங்கே சென்னையில், ஆசிரியையை பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொன்ற மாணவனின் கொடூர செயல்களும் சினிமாவின் பாதிப்பே, என்பதை மறுப்பதிற்கில்லை. சினிமாவில் காட்டப்படும் ஹீரோ, அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயமான விஷயமாக இருந்தாலும், 10 பேரை அடித்தால் தான், ஹீரோ ஆக முடியும் என்ற நிலை மாறி, 10 பேரை துப்பாக்கியால் சுடுவது தான், "ஹீரோயிசம்' என்று, ஆயுத கலாசாரம் துவங்கி உள்ளது. வன்முறை காட்சிகளும், ஆபாச பாடல்களும் இல்லாமல் சினிமா எடுத்து பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை குறி வைத்து அதுவும், பள்ளி சீருடையில் கதாநாயகி நடிப்பதும், டூயட் பாடுவதும், மாணவர்கள் குடித்து கும்மாளம் போடுவதுமாக, தொடர்ந்து படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.எதிர் விளைவை உணராமல் வெறும் வியாபார நோக்கில், ஒரு சிலரால் எடுக்கப்படும் இது போன்ற படங்கள், கலாசார சீரழிவை உண்டு செய்கிறது.

காதலித்து வாழ்க்கையை தொலைத்த கதைகள், சினிமாவில் காட்டப்பட்டாலும், தனக்கு சாதகமான காட்சிகளையே, இளைஞர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு ஏழை பெண், ஒரு பணக்காரனை காதலிக்க போராடுவது போல், படம் எடுத்தால் ஓடாது என்று தெரியும்.ஏனென்றால், அந்த கதையில் ஒரு, "த்ரில்' இருக்காது, அது போல தான் ஒரு த்ரில்லுக்காக தான் இளைஞர்கள் வாழ்கின்றனர். சினிமாவில் வரும் கதைகளுக்கேற்ப, தங்களது வாழ்க்கையை மாற்ற துடிக்கும் மாணவர்கள், பரிதவிக்கும் பெற்றோர், கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள், கவலைப்படாத கலைஞர்கள் இது தான் இன்றைய தமிழகம்.சமூக எழுச்சிக்காக போராடிக் கொண்டிருக்கும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பயன்படுத்தும் கருத்து சுதந்திரம், இன்று, சிலரின் சுய விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுகிறது. கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமையாக பாவிக்கும் போது, ஒருவர் எடுத்துரைக்கும் கருத்து, மற்றவரை பாதிக்கும் போது, அவதூறு வழக்கு தொடுக்கப்படுகிறது.இங்கே கருத்து சுதந்திரத்தை விட, தனி மனித சுதந்திரம் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், ஒரு சமூகம், அதிலும் இளைய சமுதாயம் பாதிக்கப்படும் போது, இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளும், வெறும் கண்துடைப்பு போராட்டம் அறிவிக்கும் இயக்கங்களும் காணாமல் போகின்றனர்.

யாரையும் மிரட்டுவதற்கும், பலத்தை நிரூபிப்பதற்கும், இளைஞர்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் சமுதாய அமைப்புகள் ஈடுபட வேண்டும். சட்டத்தாலும், நீதியாலும் மட்டுமே இந்த கலாசார பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். தவறு செய்தவர்கள் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும். தற்போது, நிலவி வரும் பிரச்னைகள், சினிமாத்துறைக்கு எதிரான தாக்குதலாக கருதாமல், பிரச்னைகள் மேலும் விஸ்வரூபம் ஆகாமல் பாதுகாக்க வேண்டும். சினிமாவை மக்கள் வெறுக்கும் நிலை வரக்கூடாது.பிஞ்சு உள்ளங்களை பாதிக்கும் காட்சிகள், பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் காதலிப்பது போன்ற தேவையற்ற காட்சிகளை, திரையுலகினர் தவிர்க்க வேண்டும். ஜாதி, இன, மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களின் மனதை தொடும் மனிதர்கள், சினிமா கலைஞர்கள் என்பதை உணர வேண்டும்.இ-மெயில்: mmkibrahimgmail.com

- எம்.எம்.கே.இப்ராகிம் - சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Ray - Chennai,இந்தியா

  A good listener will not only listen to the words, but also understand the emotions behind those words and catch the unspoken messages. And that’s complete listening. தற்போது, நிலவி வரும் பிரச்னைகள், சினிமாத்துறைக்கு எதிரான தாக்குதலாக கருதாமல், பிரச்னைகள் மேலும் விஸ்வரூபம் ஆகாமல் பாதுகாக்க வேண்டும் இந்த வரியில் எம்.எம்.கே.இப்ராகிம் தனது உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே கொட்டிவிட்டார்

 • Hariganesan Sm - uthamapalayam,இந்தியா

  தமிழ் சினிமா என்றால் 4,5 பாட்டுகள், 4,5 கதைக்கே தேவை இல்லா சண்டைக் காட்சிகள், இப்போ வேறு தனியே கவர்ச்சி நடிகையே தேவை இல்லை என்னும் அளவுக்கு ஹீரோயினே அவ்வளவு வெளிச்சமிட்டு ஆபாசமாக நடித்து தள்ளுகின்றனர்..கேட்டால் மக்கள் ரசிக்கிறார்களாம்.. யார் ரசிக்கிறார் என்று தான் புரிய வில்லை.. ரசனைகள் மாறியிருக்கலாம், காலம் மாறியிருக்கலாம், ஆபாச வசனம் தான் ரசனையா.. ஏன் அப்படி கேவலத்துக்கு துணை போகின்றனர் சினிமாக்காரர்கள்.. கேட்டால் ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்கள் பிழைப்பு என்பர்.. யார் இல்லை என்கிறார்கள். ஏன் நம் சினிமா தாழ் நிலைக்கு செல்கிறது, ஏன் வெளி படங்கள் குறிப்பாக ஆங்கிலப் படங்கள் வசூலைக் குவிக்கின்றன என்றெல்லாம் ஆராய்ந்து பாருங்கள்.. ஏதாவது ஒரு பிளாட் எடுத்தால் அதிலேயே லயிக்கும் படி வெற்றுக் கிரக மனிதன், அவதார் ஹோர்ரி போட்டர் என்று எத்தனையோ படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.. நாம் அரைச்ச மாவையே ஆடுகிறோம் என்பது மட்டுமில்லை, வர்த்தக ரீதியில் வெற்றி பெரும் நோக்கில் இளைஞர்களைக் குறி வைத்து இளைஞர்களைக் கெடுக்கும் விதமாக படம் எடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.. சினிமா இண்டஸ்ட்ரி இன்னும் நிறைய சிந்திக்க வேண்டும்.. பாடல் ஏதாவது தெளிவாக காதில் விழுகிறதா என்று பாருங்கள், இசை என்ற பெயரில் பெரிய சப்தம் தான் ஆக்ரமிக்கிறது.. அங்கே பாட்டும் ஆப்சென்ட் உண்மையான நல் இசையும் ஆப்சென்ட்.. நல்ல கருத்துக்களை சிந்தியுங்கள்..நிச்சயமா வெற்றி பெரும். ஹரி. உ.பாளையம்.

 • KMP - SIVAKASI ,இந்தியா

  முழுக்க முழுக்க சினிமா தான் காரணம் ... ''3" படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு ....'பள்ளி வயதில் காதல்.... கல்யாணம் பைத்தியம் ....

 • p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா

  சினிமாவால் ஆலிவூட்..,பாலிவூட்..,கோலிவூட்..,தோலிவூட் போன்ற கற்பனைகலை திரை நிழல் தொழிற் சாலை உலகில் மனித சமுதாயத்தை பெரும் சீரழிவு ஏற்படுத்தியது எனலாம்.., அரசியல் அவலமானது..,மது..,பான்பராக் புகை பிடித்தால் போன்றவை சினிமா நாகரிகமாக்கியது மக்களின் பண்பாடு கலாச்சாரம் காணமல் போக இந்த உலக சினிமா தான் காரணம்.., சமுகத்தில் வன்முறை..,காமம் போன்றவை மக்களிடே வளர செய்தது இந்த சினிமா மாயாவிதான்.., இறை புராண வரலாறு திரை கற்பனை ஆக்கியது. சினிமா மட்டுமே வாழ்க்கையின் நிஜம் என்று மனிதர்கள் ஏமாந்து தம் வாழ்க்கையை தொலைக்க வைத்தது..,மனிதனை அழவைத்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது இந்த நிழல் சினிமா பட சுருள்..,தாமஸ் ஆல்வா எடிசன் தவறான கண்டு பிடிப்பு என்பதே அவர் என்று உயிரோடு இருந்தால் சினிமாவை அழித்துவிடுவார். அவர் பிறந்து உலக சினிமாவை அழிக்க வேண்டும் - பூபதியார்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இன்றைய சினிமாக்கள் மக்களை கெடுத்து குட்டிச்சுவராக்கி வருகின்றன .அது கற்பனை வாழ்க்கை ,,நிஜ வாழ்க்கைக்கு நிச்சயம் அது ஒத்து வராது .நிழல் நிஜமாகாது ஜி.எஸ்.ராஜன் சென்னை .

 • villupuram jeevithan - villupuram,இந்தியா

  யாரையும் மிரட்டுவதற்கும், பலத்தை நிரூபிப்பதற்கும், இளைஞர்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் சமுதாய அமைப்புகள் ஈடுபட வேண்டும். செய்வார்களா?

 • manokaran - kanchipuram,இந்தியா

  திரு தமிழ்நிதி அவர்களே உங்களைபோன்ற மக்களால்தான் தமிழ்சினிமாவில் தமிழைத்தவிர ம்ற்ற மொழிகளின் தாக்கம் அதிகமாகிவிட்டது அதுவும் பணத்துக்காக ஒரு மொழியை அழிக்கிறார்கள் என்பதுதான் உண்மை இதை புரிந்து தமிழர்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் படங்கள் வந்தால்தான் நம் இனத்தின் பெருமை மக்களுக்கு அதுவும் இளைய தலைமுரைக்கு எடுத்து செலவேண்டியது ஒவ்வொருவருவரின் கடமை.......... கந்தன்,சென்னை

 • Peria Samy - chennai,இந்தியா

  ஊடகங்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் இல்லாவிட்டால் கலாச்சார சீரழிவைத் தவிர்க்க முடியாது/

 • தமிழ் சிங்கம் - chennai,இந்தியா

  சினிமா என்றால் கற்பனையே. எல்லோரும் அதைதான் விரும்புகிறோம். அதைதான் தருகிறார்கள். நிஜவாழ்க்கைதான் நாறி போய்கிடக்கிறதே. அதைவேறு காசு கொடுத்து பார்க்கவேண்டுமா? பாசமலர் பார்க்க நாங்கள் ரெடி அல்ல. இப்போதைய இளைஞர்கள் மாறிவிட்டார்கள். ரசனையும் மாறிவிட்டது. நமது டேக்னிசியன்களை பாலிவூட் பாராட்டியது. பின்னர் ஹெரொஇன்கலை எடுத்துகொண்டது. இப்போது தனுஷும் பாலிவூட்டிற்கு சென்று கொடி நாட்டி கோடிகள் சம்பாரித்துவிட்டார். உலகமே மாறிவிட்டது இன்னமும் எங்களுக்கு காக்க வடை சுட்ட கதை வேண்டாம். சிங்கம் போன்று தரமான கதைகளை மக்கள் எதிர்பாக்கிறார்கள். பரதேசி போன்று எடுத்தால், பாலா வீணாகி போய்விடுவார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement