Advertisement

நம்பர் 1 ஐ.டி., பெண்!

ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்து, கம்ப்யூட்டர்கள் பிரபலமாகாத 1980 களில் கம்ப்யூட்டர் கற்று, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, 28 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து, தகவல் தொழில் நுட்பத்தில் சாதனைகள் பல நிகழ்த்தி, 35 வெளிநாடுகளுக்கு 85 முறை பறந்து, இப்போது அதன் சர்வதேச தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார் தமிழகத்து பெண் ஹேமா கோபால். ஐ.டி., துறையில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு இவர், ரோல் மாடலாக, பல கல்லூரிகளின் ஆலோசகராக, பாடதிட்ட வல்லுனராக உள்ளார்.
"பெண், ஆண் என்பது எல்லாம் இல்லை; முயற்சியும், திறமையும் இருந்தால் யாரும் சாதிக்கலாம்...' என்று தன்னம்பிக்கை, "டானிக்' தருகிறார் இவர்.


சாதனைப் பயணத்தை அவரே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:


எங்கள் குடும்பம் பெரியது. நாங்கள் ஐந்து பெண்கள்; ஒரு பையன். அப்பா, டி.வி.எஸ்., நிறுவனத்தில் பெரிய அதிகாரி. அம்மா குடும்பத்தலைவி. மாயவரம் சொந்த ஊர். நான், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை. தமிழ் மீடியத்தில் படித்தேன்; எஸ்.எஸ்.எல்.சி.,யில் மாநில ராங்க் பெற்றேன். என் 16 வது வயதில், பி.யு.சி., தேர்வுக்கு 20 நாள் இருக்கும்போது, அப்பா திடீரென இறந்து போனார். "நீ பெரிய ஆளா வரணும்' என்று ஊக்கப்படுத்தி, என்னை ஆம்பிளையா வளர்த்தவர் அப்பா. அவரது இழப்பு, பேரிடியாய் இருந்தது. எனினும், சிரமத்தோடு தேர்வு எழுதி, ஜெயித்தேன்.


அடுத்து, படிப்பா, வேலையா, என்ற கேள்வி எழுந்தது. என் அம்மா, இந்திரா காந்தி மாதிரி. நல்ல நிர்வாகி, "என்ன வேண்டுமானாலும் படி, உன்னால் முடியும்...' என்று உத்வேகம் தந்தார். சென்னை வைஷ்ணவா கல்லூரியில், பி.எஸ்சி., - நல்ல மதிப்பெண் பெற்றதால் கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில், கட்டணம் ஏதும் இன்றி எம்.எஸ்சி.,க்கு இடம் கிடைத்தது.


அம்மாவின் அறிவுரைகள் என்னை மேலும், மேலும் படிக்க தூண்டியது. சென்னை எம்.ஐ.டி.,யில் பி.டெக்., முடித்தேன். உடனே வேலை கிடைத்தது என்றாலும், என், படிப்பு தாகம் தீரவில்லை. எட்டு மாதம் வேலை பார்த்து, 1982ல் சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.எஸ்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சேர்ந்தேன். கம்ப்யூட்டர் நம்மூருக்கு அறிமுகமான நேரம் அது. முழுமையான வழிகாட்டுதல்கள் இல்லை என்றாலும், துணிவோடு படித்து வென்றேன். 1985ல் டி.சி.எஸ்., நிறுவன வேலைக்கு 200 பேர் தேர்வு எழுதி, 80 பேர் ஜெயித்தனர். இறுதிக்கட்ட தேர்வில் வென்ற 20 பேரில், நான் மட்டுமே பெண்! சென்னை டி.சி.எஸ்.,சில், 50 பேர் பணிபுரிந்ததில், பெண்கள் மூன்று பேர் தான்; அதில் நான் ஒருத்தி. அந்த அளவிற்கு, கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி., துறையில் பெண்கள் கால்பதிக்காத காலம் அது.


இதனிடையே 1984ல் திருமணம். கணவர் கோபால் விஸ்வநாதன், தலைமை மரைன் இன்ஜினியர். என்னுடைய வளர்ச்சி, சாதனை, அர்ப்பணிப்பு உணர்வு எல்லாவற்றுக்கும், என்னுடைய கணவர், மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பு தான் காரணம். திருமணமான, இரண்டாண்டுகளில் நியூசிலாந்தில் எனக்கு பணி. பின்னர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என்று பணிநிமித்தமாக நான் பறக்க வேண்டி இருந்தது.


கடந்த, 1989ல் குழந்தை பிறந்து, ஏழு மாதம் இருக்கும் போது, அமெரிக்காவுக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போது எல்லாம் என் குழந்தைகளை பார்த்துக்கொண்டு, எனக்கு முது கெலும்பாக இருந்தவர் என் மாமியார்.


இன்று, 65 ஆயிரம் பேர்... எனக்கு கீழ் பணிபுரிகின்றனர் என்று சொல்ல மாட்டேன். அந்த 65 ஆயிரம் பேரோடு, நானும் பணிபுரிகிறேன் என்பதே சரி. நான் தலைமை பதவியின் கர்வத்தை காட்டுவது இல்லை; அதே Œமயம், வேலையில் "காம்பரமைஸ்' செய்ய, யாரையும் அனுமதிப்பதும், இல்லை. "ஒரே ஐ.டி., நிறுவனத்தில் 28 ஆண்டுகளா!' என, என்னிடம் ஆச்சரியமாக கேட்கின்றனர். ஒருவர், ஒரு நிறுவனத்தை விட்டு விலக வேண்டும் என்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கும் அவை, பணம், வேலையில் சலிப்பு, விரும்பாத தலைமை. எனக்கு இந்த மூன்று விஷயத்திலும் பிரச்னை இல்லை. என்னுடைய பணியில் ஒரு நாடு, ஒரு கஸ்டமர் அல்ல. நிறைய பேரை பார்க்கிறேன்; நிறைய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்கிறேன். இதனால், தினமும் புதிதாய் பணிபுரிவது போல் உள்ளது.


"தகவல் தொழில் நுட்பத்தில், முதன்மை பெண்' என்ற விருதை இருமுறை பெற்றேன். இன்னும் சாதனைகளைத்தேடி, என் பயணம் தொடர்கிறது. வாய்ப்பு நம் வாசலுக்கு வராது; தொடர் முயற்சியும், நேர்மையான உழைப்பும், தன்னம்பிக்கையும் வெற்றியை நம் வசமாக்கும், என்று அவர் கூறுகிறார்.


அவரை வாழ்த்த, hema.gtcs.com


ஜீ.வி.ரமேஷ்குமார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா

    அயராது உழைப்புக்கு கிடைத்த வெற்றி .... தலைக்கனம் இல்லாத உங்களுடைய பேட்டி... இது தான் உங்கள் உயர்வுக்கு கிடைத்த வெற்றி, உயர் பதவியில் இருக்கிறோம் என்ற தலைக்கனம் இல்லாத உங்கள் எளிய குணம் ..... வாழ்த்துக்கள் ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement