Load Image
Advertisement

தஞ்சை பெரிய கோவிலின் பழமையான கோட்டைச்சுவர்: ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறி

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25, 26ல் கொண்டாடப்பட உள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட இக்கோவில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ஏ.எஸ்.ஐ.,) மூலம் பழமை மாறாமல் சிறப்பாக பராமரிக்கப்பட்டாலும், கோவிலின் வெளிப்புறம் நகராட்சி வசமுள்ள அகழி, கோட்டைச்சுவர் எவ்வித பராமரிப்பும் இன்றி முகம் சுழிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இதை ஏ.எஸ்.ஐ., வசம் ஒப்படைக்காமல் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்கிறது.

தஞ்சை பெரிய கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி., 1218ல் மாறவர்ம சுந்தரபாண்டியன் தஞ்சையில் இருந்த சோழர் கால அரண்மனையை இடித்து தரைமட்டமாக்கி, நகரை தீயிட்டு கொளுத்தியதாக வரலாறுகள் கூறுகிறது. கி.பி., 1343ல் பாண்டியன் முதலாம் மாறவர்மன் ஸ்ரீவல்லபனின் தளபதி நாராயணன் என்ற தொண்டைமான் பொட்டல் வெளியாக இருந்த தஞ்சையை சாமந்தநாராயண சதுர்வேதிமங்கலம் என புதிய குடியிருப்பு பகுதியாக மாற்றினார். கி.பி., 1535ல் விஜயநகர பேரரசர் அச்சுத தேவராயரால் தஞ்சை நாயக்கராக நியமிக்கப்பட்ட நெடுங்குன்றத்து செவ்வப்ப நாயக்கர் தஞ்சை நகரை புதுப்பொலிவுடன் நிர்மாணித்தார். இவர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் தஞ்சை பெரிய கோவில் சிவகங்கை குளம் உள்ளிட்ட பகுதிக்கு சிறிய கோட்டை மதிலும், அதை சுற்றி அகழியும் ஏற்படுத்தி, அங்கு கி.பி., 1560ல் ஒரு சிறிய அரண்மனையை கட்டினார். அரண்மனையையும், நகரையும் சுற்றி கட்டப்பட்ட பெரிய கோட்டை கட்டும் பணி கி.பி., 1557ல் நிறைவு பெற்றது.

தற்போது பெரிய கோட்டை பெருமளவு இடிந்துவிட்டது. இக்கோட்டையை சுற்றி அமைக்கப்பட்ட அகழி தூர்க்கப்பட்டு தஞ்சை மத்திய நூலகம், ஸ்டேட் பாங்க், அரசு விரைவு போக்குவரத்து கழகம், பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
பெரிய கோவிலைச்சுற்றி அமைந்த சிறிய கோட்டை இரு அடுக்கு கொண்டது. இதில், கோட்டையை ஒட்டி உள்ள கோட்டைச்சுவர் ஏ.எஸ்.ஐ., வசம் சென்று சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வெளியே உள்ள சிறிய கோட்டைச்சுவர் நகராட்சி வசமுள்ளதால், ஏ.எஸ்.ஐ.,யால் பராமரிக்க முடியாத நிலை தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால் கோவிலின் தெற்குப்பகுதி வெளிப்புறக்கோட்டை சுவரின் ஒரு பகுதி இடிந்தது. கோட்டைச்சுவரின் வடபகுதியில் சிவகங்கை பூங்காவுக்கு வெளியே ஒரு பகுதி இடிந்து காணப்படுகிறது.

கடந்த 1922 செப்., 5ம் தேதி வெளியான அரசாணைப்படி பெரிய கோவிலைச்சுற்றி அமைந்துள்ள சிவகங்கை சிறிய கோட்டை பகுதி ஏ.எஸ்.ஐ., பராமரிப்புக்கு மாற்றப்பட்டது. ஆனால், வெளியே உள்ள கோட்டைச்சுவர் மற்றும் அகழியும் சேர்ந்த பகுதியான 13.16 ஏக்கர் அப்போது ஏ.எஸ்.ஐ.,க்கு மாற்றப்படவில்லை. இதற்கிடையின் கோவிலின் தென்பகுதியில் உள்ள அகழி கல்லணை கால்வாயுடன் இணைக்கப்பட்டது. இதனால், மற்ற மூன்று புறமும் உள்ள அகழியில் இருந்து தண்ணீர் வடிவதில் சிக்கில் ஏற்பட்டது. மேலும், சுவர்கள் இடிந்தும், செடி, மரங்கள் வளர்ந்து பாழாவதுடன், பெரிய அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதைத்தடுக்க நகராட்சி எதுவும் செய்யவில்லை.

இக்கோட்டைச்சுவர், அகழி சீரழிவதை அறிந்த ஏ.எஸ்.ஐ., இவற்றையும் தங்கள் பராமரிப்புக்கு வழங்க வேண்டுமென 40 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் கோரி வருகிறது. நகராட்சி வசமுள்ள இப்பகுதியை ஏ.எஸ்.ஐ.,க்கு வழங்கலாம் என 1994 நவ., 30ம் தேதி நகராட்சியில் முடிவு செய்தனர். இதுபற்றி, அப்போது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும், தமிழக அரசு செயலருக்கும் கடிதம் எழுதினர். ஆனால், இன்று வரை இப்பகுதி ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதுடன், நகராட்சி நிர்வாகமும் பராமரிக்காமல் உள்ளது. தற்போது, இந்த இடங்களை ஆண்டுக்கு ஒரு ரூபாய் குத்தகைக்கு வழங்கலாம் என நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு மூலம் முயல்கிறது.

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டாவது இவற்றை ஏ.எஸ்.ஐ., வசம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைக்க முன்வர வேண்டும். பிரச்னைக்குரிய பகுதியை நகராட்சி நிர்வாகம் ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பதை நகராட்சி அலுவலர்கள், கடந்த கால மற்றும் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள், தஞ்சையின் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய, மாநில அமைச்சர்கள் என எவரும் முன்வருவதில்லை. ஏ.எஸ்.ஐ., நிர்வாகத்தினர், "இச்சுவரையும், அகழியையும் எங்களிடம் வழங்கினால் அவற்றை சுத்தம் செய்து, புதர்களை அகற்றி பழமை மாறாமல் பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், அகழியில் தண்ணீர் நிரப்பி சுற்றுலாத்துறை மூலம் படகு இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என, கூறினர்.

கலெக்டர் சண்முகம் கூறியதாவது: கோவிலின் முன்பகுதியை (அகழி, கோட்டைச்சுவர்) ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைக்க நகராட்சி பரிந்துரைப்படி அரசு ஆணை பிறப்பிக்க உள்ளது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டால் ஏ.எஸ்.ஐ., ஆண்டுக்கு ஒரு ரூபாய் குத்தகை தொகையாக செலுத்தி இடத்தை பராமரிக்கலாம். தற்போது, கோவிலின் பின்புறத்தில் உள்ள கோட்டை, அகழி, வடபகுதியையும் ஏ.எஸ்.ஐ., கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இப்பகுதியை வழங்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் வழங்க வேண்டும். பின் அரசாணை வெளியிடப்பட்டு நிலம் ஏ.எஸ்.ஐ.,யிடம் வழங்கப்படும். இருந்தாலும், பெரிய கோவில் விழாவுக்காக இப்பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்படும். புதர்கள் அகற்றப்பட்டு பராமரிக்கப்படும். ஏற்கனவே நகராட்சி ஒப்புக்கொண்ட பகுதியை மிக விரைவில் ஏ.எஸ்.ஐ.,யிடம் ஒப்படைப்பார்கள். மற்ற பகுதி படிப்படியாக ஒப்படைக்கப்படும், என்றார்.


வாசகர் கருத்து (1)

  • அருண்ராஜ்.இ - tirupur,இந்தியா

    அவனவன் ஒன்றும் இல்லாததை கொண்டாடுகிறான். நாம் இருப்பதை பராமரிப்பது இல்லை . தஞ்சை மாவட்டத்துக்காரன் என்ற முறையில் இதில் வருத்தமும் பெருமையும் உண்டு. நகராட்சி உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமா ???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement