Advertisement

என் மனசுக்குள் என்றும் மதுரை- உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர் போன்று, விரல் விட்டு எண்ணும் அளவிற்கு சில அதிகாரிகளை மட்டுமே, சாதாரண மக்களுக்கு கூட தெரிந்திருக்கிறது.
"இவர் போல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும்' என்று, இன்றைய இளைஞர்களை கனவு காண வைத்தவர். தேர்வாணைய பொறுப்பில் இருந்த போது, "திறமை இருந்தால் சிபாரிசுகள் இன்றி, யாருக்கும் அரசு வேலை கிடைக்கும்' என்ற தன்னம்பிக்கை விதையை விதைத்த நேர்மையாளர். நல்ல தமிழ் பேச்சாளர்; இலக்கிய விமர்சகர். தமிழ் பண்பாட்டை நேசிப்பவர்; புத்தகங்களை சுவாசிப்பவர். மதுரையில் எட்டு மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தாலும், எட்டு திக்கிலும் யாரும் "இந்த கலெக்டரை' மறக்கவில்லை. இத்தனை உன்னத வரிகளுக்கும் உரிமையாளர், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.,


அண்மையில் மதுரை வந்த இவருடன் ஒரு நேர்காணல்...


இவ்வளவு வேலைப்பளுவிலும், நிறைய படிக்கிறீர்கள். இந்த வாசிப்பு பழக்கம் வந்தது எந்த வயதில்?


என் பெற்றோரிடம் இருந்து தான் உருவானது. சொந்த ஊர் நாமக்கலில், பேருந்து நிலையம் அருகே, ஒரு புத்தக கடை இருந்தது. அப்போதய சோவியத் ரஷ்ய புத்தகங்கள் வழுவழுப்பான தாளில் அங்கு கிடைக்கும். ஆறு வயதில், அங்கு சென்று புத்தகங்களை தடவி பார்ப்பேன். துப்பறியும் கதைகள், காமிக்ஸ், கார்ட்டூன் புத்தகங்களை தேடுவேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது, இலக்கிய ஆர்வம் ஏதும் இல்லா நேரத்தில், கார்க்கியின் "தாய்' நாவல் படித்தேன். வித்தியாசமான அந்த நாவல், அப்போது எனக்கு புரியவில்லை. இதுவே நான் படித்த முதல் புத்தகம். இப்படி துவங்கி, தீவிர இலக்கியம் மீது தீராத ஆர்வம் ஏற்பட்டது.


கணையாழியில் சுஜாதாவின் "கடைசி பக்கங்கள்' படித்தேன். என் காலக்கட்டத்தில், இளைஞர்களை இலக்கியம் பக்கம் திருப்பியது சுஜாதாவின் எழுத்துக்களே. அப்போது எல்லாம், உறவினர் வீட்டிற்கு செல்வது போல், ஆண்டு தோறும் சென்னை புத்தகத்திருவிழாவிற்கு செல்வேன். நான் மதுரை கலெக்டராக இருந்த போது, முதன்முதலாக "புத்தக திருவிழா' நடத்த, இதுவே தூண்டுதல் ஆனது. கல்லூரி பருவத்திலேயே, தமிழில் வெளியான பல புத்தகங்களை படித்து முடித்து விட்டேன்.


ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று எந்த வயதில் முடிவெடுத்தீர்கள்?


பள்ளி பருவத்தில், ஐ.ஏ.எஸ்., மீது ஒரு பிரமிப்பு இருந்தது. வியாபாரம் செய்து வந்த அப்பா, நான் ஐ.ஏ.எஸ்., ஆவதை விரும்பவில்லை. ஆனால் தமிழ் ஆர்வலரான அம்மா, என்னை ஊக்கப்படுத்தினார். பி.இ., இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே, ஐ.ஏ.எஸ்., எழுத, தீர்மானித்து விட்டேன். எந்த விருப்ப பாடத்தை தேர்வு செய்வது என்று, மூன்றாம் ஆண்டில் தீர்மானித்தேன்.


பி.இ., முடித்து, முழுமையான முடிவோடு வெளியே வந்தேன். முயன்றேன். நல்ல ராங்க் பெற்று, தமிழகத்தில் பணி கிடைத்தது.


"அந்த பிரமிப்பு' இப்போது விலகி விட்டதா?


டாக்டரோ, இன்ஜினியரோ சமூகத்தில் எந்த பணியும் சிறப்பானதே. மக்களிடம் நெருங்கி பழகும் எந்த பணியிலும் பிரமிப்பு இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆக நாம் எடுக்கும் ஒரு முடிவு, லட்சக்கணக்கானவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் வீச்சு அதிகம். ஒவ்வொரு பணியிலும், இன்னும் நன்றாக பணியாற்றி இருக்கலாம் என்று நான் நினைப்பது உண்டு. எந்த அலுவல் பயணத்திலும் ஏற்ற, இறக்கங்கள் சகஜம். அந்த ஏற்ற இறக்கங்களை தாங்கி பிடித்து, நம்மை இதமாக்குவது இலக்கியங்கள்.


உங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. நீங்கள் மக்கள் மனங்கவர்ந்த அதிகாரியாக ஆனது எப்படி?


நல்ல தமிழ் பேசுவது ஒரு காரணமாக இருக்கலாம்.


வர்த்தகருக்கு வாடிக்கையாளரிடமும், படைப்பாளிக்கு வாசகரிடம் இடைவெளி இருக்க கூடாது. இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். நாம் செய்யப்போகிற நல்ல விஷயம் யாருக்கு போய் பயன்படுகிறதோ, அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று அறிந்து, முடிந்த வரை இடைவெளியை குறைக்க வேண்டும். இந்த இடைவெளியே நமக்கு சவால். அவர்கள் "பல்ஸ்' அறிந்து செயல்பட வேண்டும்.


நீங்கள் மதுரையில் பணிபுரிந்தது கொஞ்ச காலம்; என்றாலும் மதுரைக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது எப்படி?


மதுரையை நேசிக்க முடியாதவர்கள் இருக்க முடியாது. என் மனசுக்குள் மதுரை என்றும் இருக்கும். பல வரலாற்று நகரங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை. ஆனால், "கலாசார தலைநகர்' மதுரை உயிர்ப்போடு இருக்கிறது. காலமாற்றத்திற்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். பழமைக்கும், புதுமைக்கும் பாலம் மதுரை. இங்கு பரதநாட்டியமும், நாட்டுப்புறக்கலையும் ஒருங்கே வாழ்கிறது. எந்த கலையும் இங்கு உச்சம் பெறுகிறது. மகிழ்ச்சி, துக்கம்- எதையும் தீவிரமாக வெளிப்படுத்துவர் மதுரை மக்கள்.


ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தபோது, காலமாற்றத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து, பாரம்பரிய பெருமை மாறாமல் நடத்துகின்றனர்.


ஐ.ஏ.எஸ்., கனவு காணும் மாணவர்களுக்கு உங்கள் "அட்வைஸ்'?


"அட்வைஸ்' சொல்வது எனக்கு பிடிக்காது. என்றாலும், இன்றைய இளைஞர்களுக்கு சமூக அக்கறை குறைவு என்பது எனது கருத்து. உங்கள் பலம், பலவீனத்தை கண்டறிந்து சுயமதிப்பீடு செய்தால் வெற்றி வசமாகும். ஐ.ஏ.எஸ்., ஆக பள்ளியில் படிக்கும் போதே திட்டமிடுங்கள். இதில் பெற்றோரை விட ஆசிரியர் பங்கு அதிகம்.


தொடர்புக்கு: 0423-223 1103


- ஜீவிஆர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement