Advertisement

"சினிமா கவிஞர்களுக்கு மதிப்பில்லையா? கேட்கிறார் பாடலாசிரியர் பழனிபாரதி

தமிழ் சினிமாவின் இளம் பாடலாசிரியர்களில், "பெண் ரசிகர்களின் அன்புக்குரியவர்' என்ற பாராட்டினை பெற்றவர் பழனிபாரதி. கல்லூரியில் கால்பதிக்காமலே எழுதும், ஆயிரக்கணக்கான பாடல்களால், பாமர மக்களும் "பட்டென' புரியும் வகையில், எளிய மொழிநடையால் இளம் இதயங்களை வென்றெடுப்பவர்.
சிவகங்கை மாவட்டம் செக்காலை இவரது பூர்வீகம். அப்பா பழனியப்பன், பாரதிதாசனின் மாணவர். கண்ணதாசனின் நண்பர். பெருங்கவிகளோடு இருந்த பாசத்தால், மகனுக்கு சூட்டிய பெயர் பாரதி. இப்போது அப்பாவின் பெயரையும் தாங்கி "பழனிபாரதி'.
"நெருப்பு பார்வைகள்', "வெளிநடப்பு', "மழைப்பெண்', "முத்தங்களின் பழக்கூடை', "புறாக்கள் மறைந்த இரவு', "தனிமையில் விளையாடும் பொம்மை', "தண்ணீரில் விழுந்த வெயில்' என பல கவிதைத்தொகுப்புகள்', "காற்றின் கையெழுத்து' என்ற கட்டுரைத்தொகுப்பு, இப்படி 18 வயதில் இருந்து துவங்கிய இப்பயணம்... இப்போது 300 சினிமாக்களில் 1500க்கும் அதிகமான சினிமா பாடல்களை கடந்த கவிஞராக, பாடலாசிரியராக நம் கேள்விகளுக்கு மனம் திறக்கிறார்...
இலக்கியத்தின் மீதான ஆர்வத்திற்கு முதல் காரணம்?
அப்பா தான். சிறுவயதில் என்னை சுற்றி பொம்மைகள் இருந்ததில்லை. எல்லாம் புத்தகங்கள் தான். அப்பா அழைத்து சென்ற கவியரங்கங்கள் இப்போதும் நினைவில் உள்ளன. 8ம் வகுப்பு படிக்கும் போது, ஆசிரியர் குற்றாலம் குறித்து பாடம் நடத்தினார். அப்போது "தென்னகத்தில் அமைத்திட்ட குற்றாலமே, தென்றல் வளம் மிகுந்திட்ட குற்றாலமே' என எழுதினேன். இது தான் நான் எழுதிய முதல் கவிதை வரிகள்.
மரபு, புதுக்கவிதை, நவீன கவிதை எதை விரும்புகிறீர்கள்?
பாகுபாடு இன்றி, கவிதை மணம் இருந்தால் படிப்பேன். வெற்று வார்த்தை அடுக்காக இருக்கும் மரபும் பிடிக்காது. என்ன சொல்ல வருகிறார்கள் என தெரியாமல் இருண்மைக்குள் எழுதும் நவீன கவிதையும் பிடிக்காது.
கவிதை, சினிமாப்பாடல் இதில் எதற்கு முக்கியத்துவம்?
பிடித்த முதல் தளம் கவிதை. சினிமாவிற்கு பாடல் எழுதுவது தொழில் தளம்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இன்று பாடலாசிரியர்களை தேடிச் செல்லும் நிலை இல்லையே?
எல்லாத்துறைகளிலும் இன்று நெருக்கடியும், போட்டியும் உள்ளது. ஊடகங்களின் பெருக்கத்தால் படைப்புத்திறன் மழுங்கடிக்கப்படுகிறது. தனித் தன்மையாக இருந்த ஆளுமைகளை உடைத்துவிட்டனர். அதனால் ஆரோக்கியமான போட்டி இல்லை.
ரசிகர்கள் உங்களின் எந்தப்பாடலை அதிகம் விரும்பி கேட்கின்றனர்?
"உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் அழகிய லைலா..., "பூவே உனக்காக' படத்தின் ஆனந்தம் ஆனந்தம் பாடும்... என்ற பாடல், "காதலுக்கு மரியாதை' படப்படல்கள்.
இளம் பாடலாசிரியர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லையே?
கவிஞர்கள் பலர் ஆர்வமாக எழுதுகிறார்கள். சினிமாவிற்கு பாட்டு எழுதும் கவிஞர்களை, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் இலக்கியவாதியாக மதிப்பதில்லை. ஆனால் அவர்களும், சினிமாப்பாடல்களை விரும்புகின்றனர். அவர்களது பாடல்களை சிலாகித்து பேசுகின்றனர். நான்காம் தர படைப்பாளியாக கருதும், இந்த முரண்பாடு ஏன் என புரியவில்லை. இங்கு தான் போட்டி அதிகம் உள்ளது.
அடிக்கடி மனதில் முணுமுணுத்து பாடும் உங்கள் வரிகள்?
நந்தா படத்திலிருந்து "முன்பனியா முதல் மழையா' பாடல், நெடுந்தூர பயணங்களிலும் மனதில் ஓடும்.
பாடல் எழுதியும் வெளிவராத படங்கள்?
எனது முதல் படம் "பெரும்புள்ளி'. என்னுயிர் தோழன் பட நாயகன் பாபு நடித்தது. அவர் விபத்தில் சிக்கியதால் அந்த படத்தில் என் முதல் பாடல் வெளிவரவில்லை.
இப்படித் தான் எழுத வேண்டும், என கட்டுப்பாடுகள் வைத்துள்ளீர்களா?
தரம் தாழ்ந்து எழுதுவதும் இல்லை. உயர்வாகவும் எழுதுவது இல்லை. என்பாடல், கவிதை எல்லா தரப்பு மக்களிடமும் எளிமையாக சென்று சேரவேண்டும், என்பதை கவனத்தில் வைத்து தான் எழுதுவேன்.
விருதுகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
இன்று விழாக்கள் நடத்துவதற்காக விருது கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இதையும் "கார்ப்பரேட்' கம்பெனிகள் கையில் எடுத்து, தங்களை பிரபலப்படுத்துகின்றனர். விழாவிற்கு வருவார்களா என கேட்டு அவர்களை விருதுக்கு தேர்வு செய்யும் நிலையை என்ன சொல்வது?
இளைஞர்களுக்கு என்ன சொல்லி வருகிறீர்கள்?
உலகம் வெறும் பொழுது போக்கிற்கும், அர்த்தமில்லாத கேளிக்கைகளுக்கும், ஊட்டமில்லாத உணவுகளுக்கும் அடிபணிந்து கிடக்கிறது. இதற்கு ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்களும் காரணம். இதை இளைய தலைமுறை புரிந்து கொண்டு விழிப்புடன் செயல்பட்டு, வாழ்க்கைக்கான படிப்புகளை வென்றெடுக்க வேண்டும்.
உங்களுக்கு பெண்கள் தான் அதிக ரசிகர்களாமே? உண்மை தானா?
ஆம். அதிகமாக காதல் பாடல்கள், காதல் கவிதைகள் எழுதியது காரணமாக இருக்கலாம்.
இவருடன் பேச... 96770 65354.

--வின்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement