Advertisement

தண்ணீரை தவிர வேறு எதைக் குடித்தால் தாகம் அடங்கும்? - கவிபாஸ்கர்

எழுத்துலகில் பிரவேசிப்பவர்கள், சதா சமூகத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பர். இவரும் அப்படிப்பட்டவர் தான். இயற்கை மீது பல கேள்விகளை எழுப்பி விடை தேடும் மதிநுட்பம் மிக்கவர். சினிமாவுக்கு பாட்டெழுத வந்து, சென்னை நகரம் கற்றுத்தந்த பாடத்தை விவரிக்கிறார் கவிபாஸ்கர்.

"அம்மா, அப்பா சொல்லக்கேளு, அறிவு வந்ததும் சிந்திச்சுப் பாரு, அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி, நாட்டில் அதிக வேலை காத்திருக்கு உன்ன நம்பி' என, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள், அம்மா வாங்கி வந்த மளிகை பொருட்களை பொதிந்த பொட்டலத்தில் வீட்டுக்குள் வந்தது.


பள்ளிப் பருவத்தில் படித்த, அந்த பாடல் வரிகள், நினைவோடு ஒட்டிக்கொண்டது. அதிக வேலை காத்திருக்கு உன்ன நம்பி என்றால், அப்படி என்ன வேலை என, சிந்திக்கத் தொடங்கி, கடைசியில் கவிதைக்காரனானேன். அழகாக எழுதுவது, சுவரில் சித்திரம் வரைவது என, தேடல் தீவிரம் அடைந்தது. புலவர் பட்டயப்படிப்பு முடித்து, 2001ம் ஆண்டு, ஒரு மாலையில் கோயம்பேட்டில் வந்து இறங்கினேன்.


மூக்குத்தியை அடகு வைத்த பணம்:அம்மாவின் மூக்குத்தியை அடகு வைத்த பணம், உள்ளூர் சுவர்களில் எழுதி சேமித்தது என, 2,000 ரூபாயை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். வடபழனி சுவரில், "நீங்கள் இயக்குனராக வேண்டுமா, பாடலாசிரியராக வேண்டுமா, கதாநாயகன், நாயகி ஆக வாய்ப்பு காத்திருக்கிறது' என, விளம்பரப்படுத்தி தொடர்பு எண்ணும் தரப்பட்டு இருந்தது. அந்த எண்ணை சுழற்றியபோது மெல்லிய பெண்குரல், தேன் சிந்தும் பேச்சில், "உங்களைத் தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்' என, ரொம்ப நளினமாக அழைத்தது. வடபழனி நோக்கி ஓடினேன்.


உள்ளே இயக்குனர் காத்திருக்கிறார். இசையமைப்பாளர் வந்து கொண்டு இருக்கிறார். "முன் பணம் 2,000 ரூபாய் செலுத்துங்கள்' என கூறிவிட்டு ஒருவர் போய்விட்டார். கையில் இருப்பதே அவ்வளவு தானே, நாளைக்கு கஞ்சிக்கு என, சிந்திப்பதற்கு கூட நேரமில்லை. வந்த வாய்ப்பை விடலாமா, 1,500 ரூபாயை கொடுத்துவிட்டு, சினிமாவுக்கு பாட்டும் எழுதிவிட்டேன், ஊருக்கும் தெரியப்படுத்தியாயிற்று.

மோசம் போன உண்மை:சினிமா கம்பெனியை தொடர்பு கொண்டால், "உங்கள் பாடலைத்தான் பொள்ளாச்சியில் படம் பிடித்துக்கொண்டிருக்கிறோம்' என்றார்கள். உற்சாகம் பொங்கி வழிந்தது. "பிரபலங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு தானே மின்னினதா கேள்விப்பட்டு இருக்கோம், நமக்கு எப்படி, இவ்வளவு எளிதாக?' என, உள் மனம் கேட்டுக்கொண்டே தான் இருந்தது. பல நாள் படையெடுப்புக்கு பின் தான், மோசம் போன உண்மை தெரிந்தது.


அன்று வடபழனியில், நடைபாதையோரத்தில் அமர்ந்து, அம்மாவின் மூக்குத்தியை நினைத்து அழுதது, உயிர் போகும் தருணத்திலும் சென்னையை நினைவு படுத்தும். கிராமத்தில், சாதி பேதமெல்லாம் கடந்து மாமன், மச்சான் என, உறவு முறையில் கூப்பிடுவது வழக்கம். எங்களூர் நெய்வாசல் கிராமத்தில் இருந்த காமராஜ் மாமா, திருவொற்றியூரில், லாரி ஓட்டி, வாடகை வீட்டில் குடியிருந்தார். அவரை சந்தித்தேன். "என்ன மாப்ள' என்றவர். விஷயத்தை சொன்னதும், "விட்டு தொலை, மெட்ராஸ்ல தூங்கும் போதும் கால ஆட்டிகிட்டே தூங்கணும் மாப்ள, கொஞ்சம் அசந்தோம், கொடல மட்டும் வுட்டுட்டு, மத்ததயெல்லாம் எடுத்துட்டு போயிடுவானுங்க,'' என, சோறுபோட்டார்.

வரவேற்பும் துரத்தலும்:ஊரெல்லாம் வேலைக்குப்போகுது. "சினிமா எடுத்து என்ன பண்ணப்போற; நாடு திருந்தவா போகுது, வேலைக்கு போ' என்றார். அவரிடமிருந்து பிரிந்தேன். கையில காசு இல்ல. வயிறு பசிக்குது. கண்ண மூடி நடந்தே பாரிமுனை பேருந்து நிலையம் சென்று, யாசகம் செய்து, ஊருக்குப்போவது என, முடிவெடுத்தேன். மனப்போராட்டத்தில் பேருந்தை விட்டு இறங்கிவிட்டேன்.


சென்னை எத்தனையோ பேரை வாழவைத்து இருக்கு, நமக்குன்னு ஒரு இடம் கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையில், இரவு முழுவதும் தேடி வடபழனியில் சுவர் ஓவியம் தீட்டும் கடைவாசலில், சிவந்த கண்களோடு காத்திருந்தேன். முதலாளி வந்து வரைந்து காட்டச் சொன்னார். அவரையே வரைந்தேன். பசியாறி வா என, பத்து ரூபாய் கொடுத்தார். நான் வேலை பார்த்த கடையில் சினிமா பிரமுகர்கள் பலர் வாடிக்கையாளர்கள். அவர்கள் மூலம் பாட்டெழுதும் வாய்ப்பை பெற்றேன்.


பாடலாசிரியர் ஆனபின் வேலைக்கு போனால் சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், வேலையை துறந்தேன். மீண்டும் பழைய நிலை வந்தது. கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு புத்தகம் எழுதத் தொடங்கினேன். சென்னை அனைவரையும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது.


ஏழு ரூபாய்க்கு தயிர் சாதம், இரவு வாழைப்பழம்:ஆனால், ஒவ்வொரு நாளும் ஓடிப்போ என, துரத்துகிறது. பட்டினிப்போட்டு சாகடிக்கிறது. உதாசீனப்படுத்துகிறது. அழவைத்து வேடிக்கை பார்க்கிறது. 2003ம் ஆண்டு, 20 ரூபாயில் இரண்டு நாள் பொழுதை கழித்து இருக்கிறேன். ஏழு ரூபாய்க்கு தயிர் சாதம், இரவு வாழைப்பழம், தண்ணீர் என, வயிறு நிரம்பிய காலம் அது. அதன் பின், நண்பர்கள் பழக்கம் கிடைத்தது. சிந்தும் கண்ணீர் துடைக்க, இன்னொருவர் விரல் இருக்கிறது என, நம்பிக்கை உயிர்ப்பை ஏற்படுத்தியது.


ஏதாவது வேலைக்குப்போய் வாழ்க்கை நடத்துவோம் என்பவர்களை சென்னை மன்னித்து விட்டுவிடும். கனவுகளை சாகடித்துவிட்டு, சம்பாதிப்பதை வேண்டாம் என்பவர்களை விடாது துரத்தும். அசரவே கூடாது. ஆமா... இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, சினிமாவுல அப்படி என்ன தான் சாதிக்கப்போகிற என்கிறீர்களா, தண்ணீருக்குப் பதில், வேறு எதைக்குடித்தாலும் தாகம் நிற்காது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது.


கட்டுரையாளர், கவிஞர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement