Advertisement

"தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து...,' *கவிஞர் முத்துலிங்கத்தின் நினைவலைகள்

எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் எழுதத் தெரிந்த, தமிழின் கடைசிக் கவிஞன். படித்ததோ பத்தாம் வகுப்பு. சிவகங்கை அருகே கடம்பங்குடியில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

"மாஞ்சோலைக் கிளிதானோ...,' (கிழக்கே போகும் ரயில்), "காஞ்சிப்பட்டுடுத்தி...,' (வயசுப்பொண்ணு) போன்ற கவித்துவ பாடல்களுக்கு, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றவர். "பொன்மானத்தேடி நானும் பூவோடு வந்தேன்...,' (எங்க ஊரு ராசாத்தி) பாடலை பாமரர் நாவில் முணுமுணுக்க வைத்தவர். "சங்கீத மேகம்...,இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..., (உதயகீதம்) பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,ஆட்சியில் அரசவைக் கவிஞர். எம்.ஜி.ஆர்.,முதல் தற்போது மூன்றாம் தலைமுறை வரை 1564 பாடல்கள் இயற்றி, சத்தமில்லாமல் மனிதர்களை சொக்க வைத்து வருபவர் கவிஞர் முத்துலிங்கம்,70.

"காற்றில் விதைத்த கருத்து,' "உலாப்போகும் ஓடங்கள்' என பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

மதுரையில் அவர், பகிர்ந்துகொண்ட ஞாபகங்களிலிருந்து....,

* சினிமாவில் பாட்டு எழுத ஆர்வம் வந்தது எப்படி?


சினிமாவுக்கு பாட்டு எழுதும் விருப்பத்தை, தந்தை சுப்பையாவிடம் தெரிவித்தேன். அவரோ,"ஒழுங்கா விவசாயத்தை கவனி,' என்றார். நான், கோபித்துக்கொண்டு சென்னை வந்தேன். பின்தான் தெரிந்தது, சினிமா வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று.


* முதல் பாடல் அனுபவம் பற்றி..


பத்திரிகைகளில் துணை ஆசிரியராக பணியாற்றினேன். "பொண்ணுக்கு தங்க மனசு' (1973) படத்தில் முதன்முதலில் "தஞ்சாவூரு சீமையிலே தாவி வந்த பொன்னியம்மா...,' பாடல் எழுதினேன். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அமைத்த மெட்டு, இயக்குனர் பி.மாதவனுக்கு பிடிக்கவில்லை. வெங்கடேஷ், "எனது உதவியாளர் மெட்டமைப்பார்,' என்றார். அவர்தான் இளையராஜா. அவர் அமைத்த மெட்டில், பாடல் பிரபலமானது. ஆனால், பட "டைட்டி'லில் இளையராஜா பெயர் இடம்பெறவில்லை. முதன்முதலில் இளையராஜா இசைக்கு பாடல் எழுதிய கவிஞர் என்ற பெருமை எனக்கு உண்டு.


* எம்.ஜி.ஆரின் நட்பு வட்டத்திற்குள் வந்தது எப்படி?


நான் பணிபுரிந்த பத்திரிகையில், எம்.ஜி.ஆருக்கு எதிராக செய்தி வெளியிட்டதால், நான் அந்த பத்திரிகையைவிட்டு வெளியேறினேன். பின் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, 500 ரூபாய் கொடுத்தார். நான் வாங்க மறுத்து, வேலைதான் வேண்டும் என்றேன் அழுத்தமாக. தன்மானமிக்க மனிதன் என பாராட்டினார். எம்.ஜி.ஆர்.,நடித்த "இன்றுபோல் என்றும் வாழ்க' படத்தில் "அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை..,' பாடல் எழுதினேன். "மீனவ நண்பன்' படத்தில் பாடல் கட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டிருந்தது. இயக்குனர் ஸ்ரீதரிடம், கனவுப்பாடல் அமையும் வகையில், கதையை மாற்றச்சொன்னார் எம்.ஜி.ஆர்., அதனால் "தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து, மங்கையென்று வந்திருக்கும் மலரோ..,' பாடலை பிரசவிக்க எனக்கு வாய்ப்பு தந்தார். தன்னை நம்பியவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர். அதனால்தான், அவர் மறைந்த பின்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்.

* தற்போது பிற மொழி கலப்பு, இரட்டை அர்த்த தொனியில் பாடல்கள் வருகிறதே?


சில சூழ்நிலைகளில், பிற மொழி கலப்பை தவிர்க்க முடியாது. "மவுன கீதங்கள்' படத்தில் "கான்வென்ட்' குழந்தை பாடும் "டாடி டாடி ஓ மை டாடி...,' பாடலை எழுதினேன். இதுபோல், இயல்பாய் இருக்க வேண்டும். வலிந்து திணிக்கக்கூடாது. இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள் விரசமின்றி சிலேடையாக, நயமாக இருந்தால் நல்லது. ஒரு காலத்தில் வசனம், பாடல்களால் தமிழ் வளர்ந்தது. இன்று திரை இசை பாடல்களால், தமிழ் கெடுவதை தடுக்க சங்கம் அமைக்கலாம் போலிருக்கிறது.


* தற்போது திரையுலகம் உங்களை அரவணைக்கிறதா?


காலம், நேரம் சரியாக இருந்தால் சினிமா, அரசியல் கை கொடுக்கும். சினிமா கடல் போன்றது. நதிகளை போன்றவர்கள் கலைஞர்கள். கடல் எப்போதும் இருக்கும். நதிகள் வந்துகொண்டேதான் இருக்கும். பல கவிஞர்கள் உருவாக வேண்டும். திறமைக்கு வாய்ப்பு கிடைக்கிறது. "இ.எம்.எஸ்சும் ஒரு பெண் குட்டியும்' மலையாள படத்தில், இளையராஜா இசையில் 2 தமிழ் பாடல்களை நானும், மு.மேத்தாவும் எழுதுகிறோம், என்றார். இவரது கவி வரிகள் 94440-46332 ல் ஒலிக்கும்.


இவரது பிரபல பாடல்களில் சில..,


விடலப்புள்ள நேசத்துக்கு- பெரிய மருது


பூபாளம் இசைக்கும்- தூறல் நின்னு போச்சு


இதயம் போகுதே- புதிய வார்ப்புகள்


மணி ஓசை கேட்டு எழுந்து- பயணங்கள் முடிவதில்லை


கூட்டத்திலே கோயில்புறா- இதயகோயில்


ரொக்கம் இருக்கிற மக்கள் மனசுல துக்கமில்ல- காசி


செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்தவா- செந்தூரப்பூவே


ஆறும் அது ஆழமில்ல- முதல் வசந்தம்


இதழில் கதை எழுது- உன்னால் முடியும் தம்பி


பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள- காக்கிச்சட்டை


-பாரதி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement