Advertisement

அன்றும் ஜெ., என் "ரோல் மாடல்': கல்லூரி நினைவுகளில் கல்யாணி

சரியான தலைமை இல்லாமை...பணி நியமனங்களில் முறைகேடு... போன்ற பிரச்னைகளின் மையமாக சிக்கித்தவித்து மதுரை காமராஜ் பல்கலை நிர்வாகம் தள்ளாடிய நேரம் அது...யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக ஒரு பெண், துணைவேந்தராக பொறுப்பேற்று நிர்வாகம், கண்டிப்பில் எந்த வகையிலும் ஆண்களுக்கு சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்து பல அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார் கல்யாணி மதிவாணன். கல்லூரிக்காலங்களை நினைவு கூறும்போது மாணவி பருவத்துக்கே சென்றுவிட்ட பரவசத்துடன்...நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டது:
* பள்ளி, கல்லூரி படிப்புகள்...
திருநெல்வேலி சொந்த ஊர். எனது தந்தை குத்தாலிங்கம் மத்திய அரசுப்பணியில் இருந்ததால் அவரது "டிரான்ஸ்பருக்கு' ஏற்றபடி நான் படிக்கும் இடங்களும் மாறிக்கொண்டே இருந்தது. 1 முதல் 4ம் வகுப்பு வரை மங்களூர் புனித மார்ஜில்ஸ் கான்வென்ட். 4 முதல் 7ம் வகுப்பு வரை கண்ணூரில் படிப்பு. பின்னர் திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்... மகாராஜாஸ் அரசு கல்லூரியில் பி.ஏ.,.. 3வது ஆண்டில் எம்.ஜி.ஆர்., தலைமையில் திருமணம். அதன்பின் முதுநிலை படிப்பு.. பேராசிரியர் பணி 30 ஆண்டுகள்.
* கல்லூரிக்காலத்தில் ஜாலி அரட்டை... மறக்கமுடியாத நினைவுகள்...
வீடு, படிப்பு, குடும்பம் என்றுதான் எனது கல்லூரிக்காலங்கள் ஓடின. வீட்டிலிருந்து கிளம்பும்போது "பாடி கார்டுடன்தான்' கல்லூரிக்கு செல்வேன். ஞாயிறு மட்டும் ஒரே ஜாலி... அது.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த சினிமா பார்ப்பது. வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களை ரசித்து பார்த்த காலம் அது; குடும்பத்துடன். காலேஜை கட் அடித்து சினிமா... பிரண்ட்ஸ்களுடன் அரட்டை... ராகிங்... போன்ற கல்லூரி பருவத்துக்கே உள்ள "துடுக்கு' சேஷ்டைகள் செய்ய ஏங்கியதுண்டு. ஆனால் வாய்ப்பு கிடைக்கலயேன்னு வருத்தப்பட்டதில்லை.
*"நண்பி'களுடன் ஜாலி டூராவது...
எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக இருந்த போது பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நண்பர்களுடன் டூர் சென்றேன். அப்போது அதிகமாக நான் வாங்கி வந்தவை "காஸ்மெட்டிக்ஸ்' பொருள் தான்...
* புத்தகம் வாசிப்பு, அதன் மூலம் கிடைத்த அனுபவம்...
புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். வாழ்க்கை அனுபவம் எனக்கு அதிக பாடங்களை கற்றுத்தந்துள்ளன. பல்கலையை நிர்வகிக்க இப்போது அந்த அனுபவங்கள் கை கொடுக்கின்றன.
* பதவி கிடைத்தது அரசியல் பின்னணியால் தான் என்று சொல்லப்படுகிறதே...
தமிழக முதல்வர்களாக இருந்த அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதியிடம் நெருங்கிப்பழகிய மூத்த அரசியல்வாதி நெடுஞ்செழியனின் மருமகள் நான். ஒரு பல்கலை துணைவேந்தருக்கு ஏற்ற அனைத்து தகுதியும் எனக்கு உண்டு என்று நம்புகிறேன்.
* தந்தை உட்கார்ந்திருந்த இருக்கையில் அமரும்போது ஏற்பட்ட உணர்வு...
துணைவேந்தர் ஆகவேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. எனது தந்தை பணியாற்றிய பல்கலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மதுரையில் காலடி வைத்தது முதல் எனது தந்தை என்னுடன் உள்ளதுபோன்ற ஆத்மார்த்த உணர்வை உணருகிறேன்.
* ஜெ.,யின் ரசிகை என்று கூறும் உங்களுக்கு அவரிடம் பிடித்த விஷயம்...
துணிச்சல். ஆண் ஆதிக்கம் நிறைந்த தமிழக அரசியல் களத்தில் ஒரு பெண் தனித்து நின்று பல ஆண்டுகளாக போராடியது. மூன்றாவது முறையாக சி.எம்., ஆனது. தொடர்ந்து சாதிப்பது. நான் அவரது ரசிகை மட்டுமல்ல...கல்லூரியில் படிக்கும் போதும், இப்போதும் எனது "ரோல் மாடல்' அவர் தான்.
* இப்போதைய மாணவர்களுக்கு முன்னாள் மாணவரான உங்கள் அட்வைஸ்...
ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என ஒரு இலக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பலனை எதிர்பார்க்காமல் நேர்மையாக உழைத்தால் அதற்கான பலன் தேடி வரும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.
தொடர்புக்கு 98400 84706

-வியாஸ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement