Advertisement

சிலிர்க்க வைத்த சிதார்- ரசிகப்ரியா

மீனாட்சி மகளிர் கல்லூரி மற்றும் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி பையன் ஆர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் 10வது ஆண்டு இசை விழாவில் சிதார் கலைஞர் பண்டிட் ஜனார்த்தன் மிட்டா மற்றும் தபேலா கலைஞர் கொல்கத்தா ரிம்பா சிவாவின் இந்துஸ்தானி இசை கச்சேரி. மீனாட்சி கல்லூரி மாணவிகளாலும், இந்துஸ்தானி இசை ரசிகர்களாலும் நிரம்பியிருந்தது கலையரங்கம். சாரே ஜஹான் சே அச்சா.. தேசபக்தி பாடலுடன் துவங்கியது கச்சேரி, அரங்கத்தில் குழுமியிருந்த இளம் பட்டாளத்தை மனதில் கொண்ட மிட்டா, கர்நாடாக இசை வடிவத்தில் பிரபலமான மோகனராக வர்ணத்தில் பலல்வியை கொடுக்க மாணவிகளில் பலர் சந்தோஷத்தில் சிதார் இசையுடன் கலந்து பாட ஆரம்பித்தனர். இப்பல்லவியின் முடிவில்... மேற்கத்திய இசையின் பிரபல பாடலான “தோரே மிபா ஸோலிலாஸி...யையும், தொடர்ந்து இந்தி பாடலான “ஜாஹே குர்பானி அதைத் தொடர்ந்து சிட்டை ஸ்வர கோர்வை, மீண்டும் மேற்கத்திய இசை கோர்வை என “திஸ்ர நடையில் ட்விஸ்ட் இசை பாணியில் இசை விருந்தளித்து தில்லானா கோர்வையுடன் மிட்டா முடிக்க, தொடர்ந்து ஒரு மெல்லிசை அம்மெல்லிசையின் முடிவில், வந்தே மாதரம் சுஜலாம் சுபலாம் என்ற பக்கிம் சந்திர சட்டோத்யாவின் பாடலை வாசித்து, பிரபல ஓம்சாந்தி பாடலின் முதல் வரியை கொடுத்து குர்-ஆன் ஓதுவது போல் அல்லாஹ் என்று மிட்டா இசைத்து முடித்தபோது ஏதோ வடஇந்திய ராஜதர்பாரில் உட்கார்ந்திருப்பது போல ரசிகர்கள் உணர்ந்தனர். இசை.. மதம், மொழி, இனம் என்ற வேறுபாடுகளை கடந்தது என்பதை தன் இசையால் அழகாக சொல்லி ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளியது சிதார்.

அடுத்து மிட்டா தேர்ந்தெடுத்தது இந்துஸ்தானி இசையின் பிரதான ராகமான லலித். நமது கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கு மிகப்பெரிய வித்தியாசம.. ராகங்களைபாடும் நேரம்தான். நாம் ராகங்களுக்குரிய நேரத்தை அப்படியே பின்பற்றுவதில்லை. அவர்களோ இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதோடு, அந்தந்த வேளைக்கு ரசிகர்களின் மனநிலையோடு ஒத்துப்போகும் ராகங்களை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். அந்தவகையில் லிலித் நல்ல தேர்வு. இந்துஸ்தாணி இசைக்கே உரித்தான குழைவுடன் மிட்டாவின் சிதாரில் இருந்து துள்ளி வந்தது லலித். சிதார் நமது வீணை போல் இருந்தாலும் அதன் நாதம் கேட்பதற்கு தனி சுகம்தான்! பரிவார ஸ்வரங்களோடு பயணிக்கும் ராகம், மனதை கொள்ளை கொள்ளும் என்பதை ரசிகர்களின் கரகோஷத்தின் மூலம் லலித் நிரூபித்து. துரிதகால ப்ரயோக சங்சாரங்களின் முடிவில், ஒரு ஸ்வர கோர்வையை வைத்து மிட்டா வாசித்த நேரத்தில், ரிம்பா சிவாவின் தபேலாவும் சிதாருடன் இணைய கச்சேரி களை கட்ட துவங்கியது. ஏற்கெனவே சிதாரின் இசையில் சொக்கிப் போயிருந்த ரசிகர்களை மேலும் மயக்கியது ரிம்பா சிவாவின் தபேலா.
தபேலாவில் ஆண் கலைஞருக்கு நிகராக பெண் கலைஞரால் சோபிக்க முடியும் என்பதை நிருபிதத் ரிம்பா வருங்கால பெண் ஜாஹிர் ஹுசைனாக ரசிகர்கள் எண்ணும்படி உயர்ந்து நின்றார். கொல்கத்தாவில், தனது ஐந்து வயது முதல் தந்தையிடம் தபேலா கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் இன்று 21வது வயதில் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்கிறார். ரிம்பா பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கும் கலைஞர். இந்த வகையில் மீனாட்சி கல்லூரி மாணவிகளுக்கு திறமையான இசை கலைஞராக மட்டுமல்லாமல், நல்ல முன் உதாரணமாகவும் மிளிர்ந்தார் ரிம்பா.

சிதாரின் மிதமான நடையும், தபேலாவின் துரிதகால நடையும் மாறி மாறி அரங்கை நிறைக்க ரசிகர்களின் மனம் ரெக்கை கட்டி பறக்காத குறைதான்! நண்பகல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க.. சுத்தசாரங் ராகத்தை பொறுத்தவரை இரண்டுவித மத்யம் ஸ்வரங்களும் இதன் அழகை கொட்டிக் கொடுக்கும். இந்த ராகத்தில் ஒரு சிறிய ஸ்வர பாடல் கோர்வையுடன் மிட்டா ஆரம்பிக்க, சுத்த சாரங்கின் ஜீவ் ஸ்வரங்களில் நம் மனம் சிலிர்த்தது.நல்ல இசை கேட்பதால் கிடைக்கும் பரவச நிலையை, இந்துஸ்தாணி இசையிலும் உணரமுடியும் என்பதை நமக்கும் எளிமையாக அழகாக புரிய வைத்தார்கள் ஜனார்த்தன். மிட்டாவும், ரிம்பாவும்.

கச்சேரியின் இறுதிகட்டம். பீலு ராகம் வாசிக்க தயாரானார் மிட்டா பீலு ராகத்துடன் காப்பி, யமன், பெஹாக் ரகங்களை கலந்து திகட்டாத ராகமாலிகையாக மிட்டாவின் சிதார் கொடுக்க அரங்கத்தில் அப்படி ஒரு அமைதி. தன் பணியை செவ்வனே முடித்த திருப்தியில் சபையை வணங்கினார் மிட்டா. அரங்கம் அதிரும் கரகோஷத்தால் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தினர் ரசிகர்கள், ஆம்... நல்ல இசை கேட்ட திருப்தி அனைவருக்கும்!.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement