Advertisement

1. என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; மதுரையைக் கடக்கிறது வைகை; நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது; என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.
வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம். கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்; குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி'; மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை'; ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், அத்துப்படியான ஆங்கிலம், இதமான காலநிலை, சுவையான சிறுவாணி, அதிரடியில்லாத அரசியல்... இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான நாள் இன்று...கோயம்புத்தூர் தினம்.
எல்லோரும் சொல்வோம் இறுமாப்பாய்...
என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Sakkaravarthy-s Sakkaravarthy - Pondichéry,இந்தியா

  தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலே மிகவும் நாகரிகமாக, மரியாதையாக பேசப்படுகின்ற மொழி கொங்கு தமிழ் மற்றும் கொங்கு தமிழர்கள் உலகம் உள்ளளவும் வாழிய வாழியவே ...

 • subbu - QLD,ஆஸ்திரேலியா

  கோவை கோவைதான்.வெளிநாட்டில் வசித்தாலும் கோவைய மறக்க முடியுமா?

 • K.K.YOGANANTHAM - madathukulam,இந்தியா

  kongu coimbatore vaalka

 • ஸ்ரீவிக்னேஷ் - Hyderabad,இந்தியா

  சொர்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா???

 • kbskavi - Hosur,இந்தியா

  கொங்கு நாடு மேலும் பல சிறப்புகள் பெறவேண்டும்

 • Nagaraj pink - Udumalpet,இந்தியா

  Mariyathai na athu கோவை thanunga

 • murli - coimbatore,இந்தியா

  தலை நகரம் கோயம்புத்தூர் .. சென்னை இல்ல..

 • Akilan Kanniappan - Madurai,இந்தியா

  இன்று இது அமைதி பூமி.... அகிலன் - சுங்கம் - கோவை

 • Siva Prakash - tirupur,இந்தியா

  கோவை உருவானது பற்றிய மேலும் விவரங்ககளுக்கு இந்த லிங்க்-யில் சென்று முழுவது படிக்கவும்:- ://valeeswarartemple.blogspot.in/

 • rajesh - coimbatore,இந்தியா

  You Don&39t know about my Coimbatore History sir

 • radha krishnan - Bangalore,இந்தியா

  வாழ்க வளர்க கோவை நகரம் !

 • Sathya Narayanan - New Delhi,இந்தியா

  வெரி கிரேட்:)

 • Mani Kandan - Muscat,ஓமன்

  நானும் கோவை இல் பிறந்து வாழ்கிறவன் என்பதில் பெருமை அடைகிறேன்...

 • Manickam Manivel - coimbatore,இந்தியா

  உழைப்பின் மறுபெயர் கோயம்புத்தூர்.வாழ்க கோயம்புத்தூர்.என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!

 • Jerome Dennis D - Coimbatore,இந்தியா

  வாழ்க கோவை ! தொடர்க அதன் மக்கள் சேவை ! - நான் கோயம்புத்தூர்காரனுங்க

 • Kannan M - Trivandrum,இந்தியா

  தீரன் சின்னமலை வாழ்ந்த கொங்கு நாடு...

 • SASI KUMAR G. - SIVAKASI,இந்தியா

  கோவை சிறந்த நகரம். எல்லோருக்கும் வேண்டுகோள் அனைவரும் மரம் வளர்ப்போம் மேலும் நமது நகரை பசுமை ஆகுவோம்.

 • Sathish - Coimbatore,இந்தியா

  வற்றாத நதி வேணுன்னா இல்லேன்னு சொல்லுங்க சார், ஆனா வானளாவிய கோவில்கள் இல்லேன்னு சொல்றத என்னைபோலே கோவையிலேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்துகொண்டிருக்கும் கோவை வாசிகள் யாருமே ஏத்துக்க மாட்டாங்க. முருக பெருமானின் ஆருபடைகளில் முக்கியமான திருகோவில் மருதமலை, கரிகால சோழனால் கட்டப்பட்ட பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில், ஏழு மலைகளை கடந்து சென்று நாங்கள் வழிபடும் வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில், பூண்டி தியானலிங்கம் .. இப்படி நெறைய இருக்குதுங்க சார்.

 • Anand - coimbatore,இந்தியா

  தமிழகத்தின் 'தலை' நகரம்...கோவை, Anand

 • Praveen Kumar - Coimbatore,இந்தியா

  என்ர ஊரு கோயமுத்தூருங்கோ!.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement