Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

ரூ.52 லட்சம் மதிப்பில்
திட்டப்பணிக்கு பூஜை

மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட திருநகர் காலனியில், நேற்று தலைவர் திருமலை தலைமையில், 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், காம்பவுண்ட் சுவர் அமைத்தல், நடைபாதை அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டன. செயல் அலுவலர் ராஜசேகர், உதவிப்பொறியாளர் தனபால் சரவணன், ஒப்பந்ததாரர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு பள்ளியில் ஆண்டு விழா
சேந்தமங்கலம் அருகே, நஞ்சுண்டாபுரம் அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கஸ்துாரி திலகம் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.பவித்திரம் ஆட்டுச்சந்தையில்ரூ.70 லட்சத்திற்கு வர்த்தகம்
எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை கூடுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, முட்டாஞ்செட்டி, புதுார், கஸ்துாரிப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து, ஏராளமான விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு ‍கொண்டு வருகின்றனர். நாமக்கல், எருமப்பட்டி, முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கறிக்கடைகளுக்கு ஆடுகள் வாங்க வியாபாரிகள் வந்த நிலையில், நேற்று நடந்த வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்ததால், வியாபாரிகள் போட்டி‍ போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால், 70 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த வேன்
பள்ளத்தில் பாய்ந்து கிளீனர் பலி
திருப்பத்துார் மாவட்டம், சின்னகாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவசங்கர், 20; சரக்கு வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் மாது மகன் ரிஷி, 19; கிளீனர். இவர்கள் இருவரும், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'பொலீரோ' சரக்கு வாகனத்தில் ஆரஞ்சு பழங்களை ஏற்றிக்கொண்டு, திருப்பத்துாரில் இருந்து கோவை நோக்கி சென்றனர். குமாரபாளையத்தில், சேலம் - கோவை புறவழிச்சாலை, காவிரியாற்று பாலம் வழியாக சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், பக்கவாட்டு தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு, காவிரியாற்றின் கரையோரம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த டிரைவர், கிளீனர் ஆகிய இருவரையும் மீட்ட குமாரபாளையம் தீயணைப்பு படையினர், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ரிஷி உயிரிழந்தார். இவரது தந்தை மாது அளித்த புகார்படி, டிரைவர் சிவசங்கர் மீது வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடிப்படை வசதி கேட்டு மக்கள் மனு

நாமக்கல், பிப். 13-
பட்டணம் ஆதிதிராவிடர் மக்களுக்கு, அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பா.ஜ., பொறுப்பாளர் ராஜா தலைமையில், கலெக்டர் அலுவலகம் வந்த அக்கட்சியினர், கலெக்டர் உமாவிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் தாலுகா, பட்டணம் பேரூர் நிர்வாகம் மூலம் ஆதிதிராவிட மக்களின் மயான சுற்றுச்சுவர், பரமேஸ்வரன் நகரில் பெண்கள் கழிவறை ஆகியவை புதிதாக கட்டி தருவதாக கூறி இடிக்கப்பட்டு, 8 மாதங்கள் மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல், இலவச நிலம் கோரி விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நிலம் வழங்கவில்லை. எனவே, மக்களின் கோரிக்கையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள்
கணக்கெடுப்பு
எருமப்பட்டி, பிப். 13-
எருமப்பட்டி வட்டார வள மையம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி காவக்காரப்பட்டி, விரா லிப்பட்டி, அரளிப்பள்ளம் உள் ளிட்ட கிராமங்களில் நடந்தது. பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு உதவி திட்ட அலுவலர்‍ குமார் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் அருண் முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி உள்ளிட்டோர், கிராமங்களுக்கு சென்று பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற மாணவ, மாணவியரை களஆய்வு செய்தனர். இதில், காவக்காரப் பட்டியில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளிக்கு வர அறிவுரை வழங்கப்பட்டது.

குடியிருப்பு பகுதியில்
கொசு ஒழிப்பு தீவிரம்
பள்ளிப்பாளையம், பிப். 13-
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், கொசு மருந்து அடிக்க வேண்டும் என, கடந்த மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் சீராக செல்ல, வடிகால் சுத்தம் செய்யப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், குடியிருப்பு பகுதியில் சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது.
நகராட்சி பகுதியில், நீர்நிலை பகுதி, வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு, கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

லாட்டரி, மதுவிற்ற
இருவருக்கு 'காப்பு'
குமாரபாளையம், பிப். 13-
குமாரபாளையத்தில் போலி லாட்டரி, மது விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இதில், சேலம் சாலை, சவுண்டம்மன் கோவில் எதிரே, கல்லங்காட்டுவலசு ஆகிய இடங்களில் மது பாட்டில்கள், போலி லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக தனசேகர், 33, பெரியசாமி, 37, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, மது பாட்டில்கள், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செம்மண் அள்ளிய
3 வாகனங்கள் பறிமுதல்
வெண்ணந்துார், பிப். 13-
வெண்ணந்துார் அடுத்த, அத்தனுார் சின்ன ஏரியில் மண் அள்ளுவதாக, வி.ஏ.ஓ., தமிழ்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெண்ணந்துார் வருவாய் ஆய்வாளர் மலர்விழி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, செம்மண் அள்ளிய இரண்டு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, டிப்பர் லாரி டிரைவர், கீரனுார் போதமலையை சேர்ந்த நாச்சியப்பன் மகன் பெரியசாமி, 21, அத்தனுார் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சக்திவேல், 36, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமுதாயக்கூடம்
கட்ட மனு
மோகனுார், பிப். 13-
மோகனுார் டவுன் பஞ்., மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மோகனுார் டவுன் பஞ்., 10வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில், பெரும்பான்மையான மக்கள் வசித்து வருகின்றனர். எங்களுக்கு, மூன்று தலைமுறைகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சமுதாயக்கூடம் கட்ட பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும், இங்குள்ள நத்தம் புறம்போக்கில், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரிக்கை வைத்தோம்.
ஆனால், வேறு சமூகத்திற்கு பட்டா போட்டு வழங்கிவிட்டனர். அதேபோல், எங்கள் சமூகத்திற்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து முறைகேடாக மனை பட்டா வாங்கி உள்ளனர். அவற்றை மறு பரிசீலனை செய்து, அதே இடத்தில், சமுதாயக்கூடம் கட்டி எங்கள் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டூவீலரில் சென்ற வாலிபர்
சறுக்கி விழுந்து உயிரிழப்பு
மோகனுார், பிப். 13-
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குளத்துாரை சேர்ந்தவர் அய்யம்புதுாரை சேர்ந்தவர் முருகேசன் மகன் தீபன்ராஜ், 23. இவர், திருச்சி மாவட்டத்தில் பிட்டராக பணியாற்றி வந்தார். தன் நண்பரை பார்ப்பதற்காக, திருச்சியில் இருந்து தனது புதிய, 'யமஹா ஆர்15' என்ற டூவீலரில், கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். மதியம், 12:00 மணிக்கு, மோகனுார் அடுத்த மணப்பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையோரம் சறுக்கி விபத்துக்குள்ளானது.
மேலும், சாலையில் உருண்ட டூவீலர், அந்தவழியாக, 'சுசூகி அக்சஸ்' மொபட்டில் வந்த மணப்பள்ளி ராமசாமி மனைவி லட்சுமி, 40, மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறு காயத்துடன் லட்சுமி உயிர் தப்பி, சிகிச்சை பெற்று திரும்பினார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

பழமையான ஆஞ்சநேயர் கோவில் கண்டுபிடிப்பு
குமாரபாளையம், பிப். 13-
குமாரபாளையம் பாலக்கரை, அப்புராயர் சத்திரம் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது என, கூறப்படுகிறது. கோவில் வளாகம் முழுதும் சேதமான நிலையில் உள்ளது. இதனை பராமரிக்க கோரி, தமிழக விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், இதே பகுதியில், நேற்று பொதுமக்கள் சிதிலமடைந்த மற்றுமொரு ஆஞ்சநேயர் கோவிலை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அப்பகுதி பெண்கள் கோவிலை துாய்மைப்படுத்தி, அங்குள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் நடத்தி வழிபட்டனர். அரசு சார்பில் இந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அரசு கல்லுாரியில்
பொதுக்குழு கூட்டம்
குமாரபாளையம், பிப். 13-
குமாரபாளையம் அரசு கலை கல்லுாரியில், பி.டி.ஏ., சார்பில் கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிதிநிலை அறிக்கையை பேராசிரியர் கோவிந்தராஜ் சமர்ப்பித்தார்.
இதில், கல்லுாரி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள், மாணவர் நலன்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வது, அத்தியாவசிய பணிகள் மேம்படுத்துதல், நாட்டு நலப்பணி திட்டம் மூலம் சமூக சேவைகளை மேம்படுத்துதல், விளையாட்டு பயிற்சி வழங்கி, மாணவர்களின் வெற்றி வாய்ப்பை உருவாக்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பி.டி.ஏ., செயலர் செல்வராஜ், இணை செயலர் கோமதி, பேராசிரியர் ரகுபதி உள்பட பலர் பங்றே்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement