Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

மின் கசிவால் தீ விபத்து
200 தென்னை சாம்பல்
அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் சுதன், 47; மேட்டூர் மெயின் ரோட்டில் ஐந்து ஏக்கர் பரப்பளவில், 1,200 தென்னை மரங்களை பராமரித்து வருகிறார். நேற்று மதியம் தென்னந்தோப்பில் புகை வந்ததால், பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ௫:௦௦ மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனாலும், 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து விட்டது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீப்பிடித்திருக்காலம் என தெரிய வந்துள்ளது.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு
வி.சி.,க்கள் குற்றச்சாட்டு
ஈரோடு, சூரியம்பாளையம் கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில மருத்துவரணி துணை செயலாளர் கலைச்செல்வன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு, சூரியம்பாளையம் கிராமத்தில், இரண்டு ஆலைகள் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தொழிற்சாலைகளுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், நீதிமன்ற உத்தரவுப்படி பஞ்சமி நிலங்களை வருவாய் துறை மூலம் மீட்டு, நிலமற்ற பட்டியல் இன மக்களுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

மலைப்பகுதி சாலையை
சீரமைக்க வலியுறுத்தல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது:
பர்கூர் மலையில் கண்டிப்பூர் மலை கிராமத்தில், 130க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சாலை வசதி இல்லாததால், அவசர கால உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல சிரமமாக உள்ளது. அதுபோல தாமரைக்கரை முதல் ஈரெட்டி மடம் வரை செல்லும் தார்ச்சாலை சேதமாகி விட்டது. இதை சீரமைக்க பல ஆண்டாக கோரி வருகிறோம். இதேபோல் பர்கூர் துருசணாம்பாளையம் முதல் பாரஸ்ட் வழியாக சோளகணை செல்லும் தார்ச்சாலையையும் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

சப்போட்டா மரம் ஏலம்
பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், 87 சப்போட்டா மரங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான ஏலம் வரும், 15ம் தேதி காலை, 11:30 மணிக்கு நடக்கிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர், பவானிசாகர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணமாக்கும் வகையில் பேராசிரியர் மற்றும் தலைவர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர் என்ற பெயரில் முன்வைப்புத்தொகை ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை அன்று காலை, 11 மணிக்குள் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தை அணுகலாம்.

குறைதீர் கூட்டத்தில்
278 மனுக்கள் ஏற்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. முதியோர் உதவித்தொகை, போலீஸ் நடவடிக்கை, பட்டா, கல்விக்கடன் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 278 மனுக்கள் பெறப்பட்டு, துறை சார்ந்த விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ் மனுக்களை பெற்றனர்.

சுத்திகரிப்பு நிலையத்தில்
கலெக்டர் திடீர் ஆய்வு
பெருந்துறை பேரூராட்சி பகுதியில், 54.78 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் பணிக்கம்பாளையத்தில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு க------கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். திட்டத்தின் செயல்பாடு மற்றும் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஹாலோ பிளாக்ஸ் கல்
தயாரிப்பாளர் ஸ்டிரைக்
ஹாலோ பிளாக்ஸ் கல் உற்பத்தியாளர் சங்கத்தினர், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, கோபியில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், 88 பேர் ஹாலோ பிளாக்ஸ் கல் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோம். இதை நம்பி, ௧௦ ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மூலப்பொருட்களின், 30 சதவீதம் விலை உயர்வால், கற்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரசு தலையீட்டு, மூலப்பொருட்களின் விலையை குறைத்து, வியாபாரம் மட்டுமின்றி, எங்களின் வாழ்வாதாரமும் சிறக்க வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

அரசின் இலவச
சைக்கிள் வழங்கல்
நம்பியூர் ஊராட்சி சாவக்கட்டுப்பாளையம், மலையப்பாளையம், கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், மூன்று பள்ளிகளை சேர்ந்த, ௨௩௧ மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


'5ஜி' டவர் அமைக்க எதிர்ப்பு
பவானி தாலுகா, கேசரிமங்கலம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் '5ஜி' உயர்மின் கோபுரம் அமைக்கப்போவதாகவும், அதற்காக கலெக்டர் மூலம் அனுமதி பெற்றுள்ளதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். '5ஜி' தொழில் நுட்ப டவரால் நன்மை இருந்தாலும், இதனுடைய மின் காந்த கதிர்வீச்சால், உடலில் வெப்பத்தை உயர்த்தி, உடல்நலம் பாதிக்கும். டவர் அமையும் இடத்தின் அருகே பள்ளிகள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. எனவே இங்கு டவரை அமைக்காமல், சிறிது துாரத்துக்கு அப்பால் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு பிரசாரம்
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. ப.செ.பார்க் சிக்னல், ஜி.ஹெச். ரவுண்டானா பகுதியில் விழிப்புணர்வில், இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதில் ப.செ. பார்க், ஜி.ஹெச். ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளை நிறுத்தி டூவீலரில் ஹெல்மெட் அணிந்து செல்லுதல், மதுபோதை வாகன இயக்கத்தை தவிர்த்தல், சீல் பெல்ட் அணிதல், சாலை விதிமுறைகளை கடைபிடித்தல்
குறித்து அறிவுறுத்தி, துண்டு பிரசுரம் அளித்தனர்.
போக்குவரத்து வார்டன் சரவணன், எமன் வேடமணிந்து, ஹெல்மெட் போடாமல் டூவீலரில் சென்றவர்கள் கழுத்தில் கயிற்றை போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் எஸ்.ஐ.,க்கள் நாகராஜன் சண்முகம், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வீரக்குமார் கோவிலில்
ரூ.12.27 லட்சம் காணிக்கை
வெள்ளகோவிலில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட வீரக்குமார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிரந்தர உண்டியல் உள்ளன. திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறைத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில், செயல் அலவலர் ராமநாதன், எழுத்தர் சிவக்குமார் மற்றும் மக்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், 12 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய்; 135 கிராம் தங்கம், பல மாற்று வெள்ளி, 112 கிராம் காணிக்கையாக கிடைத்தது. கோவில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை
மீட்டு அனுப்பிய அமைச்சர்
பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் பிரகாஷ், 30, பார்த்திபன், 32; இருவரும் அப்பாச்சி பைக்கில், காங்கேயம் வழியாக திருப்பூருக்கு, நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியவில் சென்றனர். காங்கேயத்தை சேர்ந்த சிவராஜ், 52, ஸ்கூட்டி வாகனத்தில், காங்கேயம்-திருப்பூர் ரோடு ஹால்டல் பஸ் நிறுத்தம் அருகே கடந்தபோது, மொபட் மீது அப்பாச்சி பைக் மோதியது. இதில் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது.
அப்போது அவ்வழியே தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் காரில் வந்தார். விபத்தில் சிக்கிய மூவரையும் இறங்கிச் சென்று மீட்டு, ஆம்புலன்ஸை வரவழைத்து காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

'குட்கா' விற்பனை செய்த
பெட்டி கடைக்காரர் கைது
வெள்ளகோவில் அருகேயுள்ள வெள்ளமடையை சேர்ந்தவர் சிவசங்கர், 41; இவரது பெட்டிக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு புகார் போனது. வெள்ளகோவில் போலீசார் ஆய்வில், புகார் உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்தனர்.

சாலை பணியில் குடிநீர் குழாய்
உடைப்பை கண்டித்து மறியல்
காங்கேயம் நகராட்சி பகுதியில், அம்ரூத் திட்டத்தில், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு இடங்களில் சாலை தோண்டப்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது வார்டில் பாரதியார் வீதிக்கு செல்லும் குழாய் உடைந்தது. இதனால், 18 வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது. உடைப்பை முறையாக சரி செய்யாததால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இதை கண்டித்து காங்கேயம்-திருப்பூர் ரோடு முத்து மெடிக்கல் அருகே, 20க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் கனிராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். சரி செய்து தருவதாக உறுதி கூறவே, மக்கள் மறியலை கைவிட்டனர். இதை தொடர்ந்து உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீரும் வினியோகம் செய்யப்பட்டது.

மாணவன் விபரீத முடிவு
காங்கேயம் அருகே வீரணம்பாளையம், ராம்நகரை சேர்ந்த சங்கர் மகன் நிஷாந்த், 20; முள்ளிபுரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவன். கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் காணப்பட்டார். பெற்றோரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் உறங்கி கொண்டிருந்த நிலையில், நிஷாந்த் தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு
செய்முறை தேர்வு துவக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி, 22ல் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பிளஸ் 2 செய்முறை தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் துவங்கியது. கணிணி அறிவியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது.
ஆய்வகங்களில் மாணவ--மாணவிகள் ஆர்வமுடன் செய்முறை தேர்வை எழுதினர். அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கும் செய்முறை தேர்வுகளை கண்காணிக்க அரசு பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். செய்முறைத்தேர்வு, 17ல் நிறைவு பெறுகிறது. இன்று வேதியியல் பாடத்துக்கான, செய்முறை தேர்வு நடக்கிறது.

மாதம் ரூ.10,000 ஊதியம்
பூஜாரிகள் பேரவை மனு
மாதம், 10,000 ரூபாய் ஊதியம் கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் மனு வழங்கினர்.
மாநில தலைவர் ராஜா, மாநில துணை தலைவர் இளங்கோவன், வடக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் கூறியதாவது: தமிழகத்தில் ஏராளமான பூஜாரிகள் கோவில்களில் பூஜை செய்தாலும், எங்கள் பேரமைப்பில், 60,000 பேர் உள்ளனர். கோவில்களில் போதிய பொருளாதார உதவிகளை பெற இயலாததால், பெரும்பாலான பூஜாரிகள் சிரமப்படுகின்றனர். எங்கள் கோரிக்கை, முதல்வர் மற்றும் அரசுக்கு சென்றடைய வேண்டும். 59 வயதுக்கு உட்பட்ட பூஜாரிகளுக்கு மாதம், 10,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம், நலவாரிய அட்டை பெற பூஜாரிகளுக்கு ஆண்டு வருவாய் சான்று கோருவதில் விலக்கு அளிக்க வேண்டும். கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்சில் 'குவா-குவா'
மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்தவர் ராகுல் தலில், 23; இவரின் மனைவி ரெஜினா தலில், 22; தாராபுரத்தை அடுத்த சலாம்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்க்கின்றனர். தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரெஜினாவுக்கு, நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே வலி அதிகரிக்கவே, ஆம்புலன்ஸ் டிரைவர் கோபால் மருத்துவ உதவியாளர் கலையரசி பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேயை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விஜயகாந்த் நினைவேந்தல்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி, தாராபுரத்தில் பல்வேறு இடங்களில், நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில், தாசில்தார் அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் ராமபட்டினம், கரையூர் பகுதிகளில், கட்சி கொடியேற்றி, விஜயகாந்த் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். நுாற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் நவநீத
கிருஷ்ணன், நகர நிர்வாகிகள் ஷானவாஸ்,
முனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னிமலையில் அதிசயம்
நடந்து ௪௦ ஆண்டு நிறைவு
சென்னிமலையில், 40 ஆண்டுகளுக்கு முன் 1984, பிப்., 12ல், அந்த அதிசயம் நடந்தது. ஆம், இரட்டை மாட்டு வண்டி, ௧,௩௨௦ படிக்கட்டுக்களில் ஏறி, மலைக்கோவிலை அடைந்தது. மலைக்கோவில் படிக்கட்டுக்களின் இருபக்கமும், லட்சக்
கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றும், மரங்களில் ஏறியும் பார்த்திருக்க, அந்த நிகழ்வு நடந்தேறியது.
60 வயதான பெருந்துறை சிவன்மலை கவுண்டர் ஓட்டிய இரட்டை மாட்டு வண்டி, லட்சக்கணக்கான மக்களின் அரோகரா முழக்கங்களை கேட்டபடி, கூட்டத்தைக் கண்டு மிரளாமல், சரியாக நாற்பத்தாறு நிமிடங்களில், ௧,௩௨௦ படிக்கட்டுக்களை ஏறி மலை உச்சியில் முருகன் சந்நதியில் நின்றன.
இந்த வண்டியை அப்போதைய ஈரோடு கலெக்டர் ராஜாராமன், துணை கலெக்டர் சந்திரபிரகாஷ், டி.எஸ்.பி., அப்பாத்துரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பின் தொடர்ந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...
நண்பனே என்று பாடத் தோன்றுகிறதா...?


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement